Friday, January 22, 2016

பொதுவழிப் பாதை பிரச்னை: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


பொதுவழிப் பாதை பிரச்னை: 

அதிகாரிகள் மீது 

நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

First Published : 22 January 2016 04:20 AM IST
திருநாள்கொண்டச்சேரியில் ஏற்பட்ட பொதுவழிப் பாதை பிரச்னையில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமைகளுக்கான தேசியக் கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ் தெரிவித்தார்.
மயிலாடுதுறையில் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு அவலர் அளித்தப் பேட்டி:
திருநாள்கொண்டச்சேரியைச் சேர்ந்த செல்லமுத்து ஜனவரி 3-ஆம் தேதி உடல் நலக்குறைவால் இறந்தார். அவரின் உடலைப் பொதுப் பாதை வழியாகக் கொண்டு சென்று அடக்கம் செய்வதற்கு நாகை மாவட்ட காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், இதை நடைமுறைபடுத்தாமல், காவல்துறையினர் தலித் மக்கள் மீது தடியடி நடத்தினர். வருவாய்த் துறையினரே செல்லமுத்துவின் உடலை அடக்கம் செய்தனர். திருநாள்கொண்டச்சேரி கிராமத்தில் வாழும் தலித் மக்களுக்கு சுடுகாட்டுக்குச் செல்ல பாதை வசதியில்லை.
இதுதொடர்பாக எனது தலைமையிலான உண்மைக் கண்டறியும் குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் மத்திய, மாநில அரசுகளுக்கும், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின ஆணையத்துக்கும் அனுப்பி வைக்கப்படும்.
அவமதிப்பு வழக்கு: நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும். இறந்தவரின் சடலத்தைப் பொதுப் பாதை வழியாகத் தூக்கி செல்வதற்கு தடையாக இருந்த டி.ஐ.ஜி., நாகை, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதில் தலித் சமூகத்தினர் 35 பேர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை காவல்துறை வாபஸ் பெற வேண்டும் என்றார் அவர்.
பேட்டியின்போது, மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் கோ.சுகுமாறன், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தின் தலைவர் இரா.முருகப்பன், நீலப்புலிகள் இயக்கத்தின் தலைவர் புரட்சிமணி, மனித உரிமை ஆர்வலர் பாபு, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எஸ்.வீரச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கங்காதரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழக்குரைஞர் இல.திருமேணி, பகுஜன் சமாஜ் கட்சி ராஜவேலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.




No comments: