Friday, January 22, 2016

‘கையால் மலம் அள்ளும் பணித்தடைச் சட்டம் 2013’’ ஐ உடனடியாக நடைமுறைபடுத்து ’’பீம் யாத்ரா’’ பேருந்து பிரச்சாரப் பயணம்

‘‘கையால் மலம் அள்ளும் பணித்தடைச் சட்டம் 2013’’ ஐ
உடனடியாக நடைமுறைபடுத்து
’’பீம் யாத்ரா’’ பேருந்து பிரச்சாரப் பயணம்
-----------------------------------------------------------------------------------
14.01.2014 - மாலை 4.00 மணி -
காந்தி சிலை அருகில் – திண்டிவனம்
-----------------------------------------------------------------------------------

கையால் மலத்தை அள்ளிக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் இழிதொழிலை ஒழித்துக்கட்டக் கோரும் போராட்டங்கள் கடந்த முப்பது ஆண்டு களுக்கும் மேலாக நடந்து வருகின்றது. இதனையொட்டி 2013 இல் - கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்து வதைத் தடை செய்தல் மற்றும் அவர்களது மறுவாழ்வுக்கான சட்டம் கொண்டுவரப்பட்டும் நடைமுறைக்கு வரவில்லை.
கையால் மலம் அள்ளும் இழிதொழில் பின்தங்கிய பீகாரில் மட்டுமின்றி, வளர்ச்சிக்கே வழிகாட்டும் மாநிலமாகப் பீற்றிக் கொள்ளப்படும் குஜராத்திலும் இன்றளவும் நடந்து வருகிறது. தலைநகர் டெல்லி, குஜராத்தின் அகமதாபாத் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களிலும் 256 மாவட்டங்களிலும் காணப்படுகிறது. உள்ளூராட்சி நிர்வாகம் தொடங்கி ரெயில்வே துறை, பாதுகாப்புத் துறை என மைய அரசின் பல்வேறு பிரிவுகளிலும் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
2011-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு, “நாடெங்கிலும் 7,50,000 குடும்பங்கள் கையால் மலம் அள்ளும் தொழிலைச் செய்து வருவதாக” குறிப்பிடுகிறது. “இந்தப் புள்ளிவிவரம் ரெயில்வே துறையில் வேலை செய்துவரும் மலம் அள்ளும் தொழிலாளர்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு தயாரிக்கப்படவில்லை” எனக் குற்றஞ் சுமத்தும் அரசுசாரா அமைப்புகள், அத்தொழிலாளர்களையும் சேர்த்தால், நாடெங்கும் ஏறத்தாழ 13 இலட்சம் குடும்பங்கள் கையால் மலம் அள்ளும் தொழிலைச் செய்து வருவதாகக் கூறுகின்றன. சுகாதாரப் பணி என அலங்காரமாகச் சொல்லப்படும் மலத்தை அள்ளுவதும், சாக்கடையைச் சுத்தம் செய்வதும் தாழ்த்தப்பட்ட சாதிகளுக்குள்ளேயே அடித்தட்டில் இருக்கும் அருந்ததியர், ஆதி ஆந்திரா, வால்மீகி உள்ளிட்ட சில பிரிவு மக்களின் மீது திணித்து கடைபிடிக்கப்படுகிறது.
தெருவில் சாக்கடைத் தண்ணீர் வழிந்தோடினால், அதில் கால்படாமல் லாவகமாகத் தாண்டிச் செல்லுகிறோம். வீட்டிற்குள் குழந்தைகள் மலம் போய் விட்டால், அதைத் தூக்கிப் போடுவதற்குக் கூட அருவெறுப்பு அடைகிறோம். அப்படியிருக்கையில் நம்மைப் போன்ற சகமனிதன் மலமும் கழிவு நீரும் பொங்கி வழியும் சாக்கடைக்குள் இறங்குவதையும், யாருடைய மலத்தையோ கையால் வழித்துக் கூடைக்குள் போட்டுக் கொண்டு அதைத் தலை மேல் வைத்து எடுத்துச் செல்வதையும் கண்டு அதிர்ந்திருக்கிறோமா? இந்தத் தொழிலை சாதிக் கட்டுப்பாடு-கட்டாயத்தின் கீழ் செய்துவரும் அந்தத் தாழ்த்தப்பட்டோரின் மனோநிலையை அறிந்து வைத்திருக்கிறோமா?
இந்தியாவைக் காக்க வந்திருக்கும் ரட்சகனாக நம்முன் நிறுத்தப்படும் மோடி, “வால்மீகி சாதியினர் மலத்தைக் கையால் அள்ளிச் சுத்தம் செய்வதை ஆன்மப் பரிசோதனையாகச் செய்து வருகின்றனர்” எனச் சாதித் திமிரோடு நியாயப்படுத்திப் பேசியிருக்கிறார். நம்முள் பலர் இந்தளவிற்கு வெளிப்படையாகக் கேவலமாக நடந்து கொள்வதில்லை என்றாலும், அவர்கள் நம்மை நெருங்கிவிடாதபடி தள்ளித்தான் வைத்திருக்கிறோம். அவர்களின் நிலை குறித்து அக்கறையற்று உள்ளோம்.
உச்ச நீதி மன்றத்தில் வழக்கு
இப்பிரச்சாரத்தை நடத்துகின்ற சஃபாய் கர்மாச்சாரி அந்தோலன் (துப்புரவு தொழிலாளர் இயக்கம்) அமைப்பு கையால் மலம் அள்ளும் தொழிலை முற்றிலுமாகத் தடை செயக் கோரும் போராட்டங்களை 1980- இல் தொடங்கியது. இதனால் 1993-இல்தான் கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணியமர்த்துதல் மற்றும் உலர் கழிப்பறைகள் கட்டுதல் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது, மைய அரசு. இச்சட்டத்தைப் பற்றி ஒரே வரியில் சொன்னால், பாம்பும் சாகக் கூடாது, தடியும் நோகக் கூடாது என்பதுதான் மைய அரசின் நோக்கமாக இருந்தது. கையால் மலம் அள்ளுபவரைப் பணிக்கு அமர்த்துபவருக்கு ஒரு வருடம் வரை சிறைத் தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் எனக் கூறினாலும். இச்சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு எந்தவொரு துறையும் பொறுப்பாக்கப்படவில்லை. இச்சட்டம் அதன் இயல்பிலேயே அக்கறையற்றும் அலட்சியமாக உருவாக்கப்பட்டுள்ளதை கூறி சட்டத்தைத் திருத்தம் செய்யக் கோரி துப்புரவு தொழிலாளர் இயக்கத்தின் தலைவர் பெசவாடா வில்சன் உச்சநீதி மன்றத்தில் 2003-ஆம் ஆண்டில் பொதுநல வழக்குத் தொடுத்தார். மைய அரசு வழக்கை இழுத்தடித்தேயொழிய, சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்ய முன்வரவில்லை.
சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு.
இதனிடையே சென்னையைச் சேர்ந்த “பாடம்” பத்திரிகையின் ஆசிரியர் நாராயணன், கையால் மலம் அள்ளும் தொழிலை உடனடியாகத் தடை செயக் கோரி 2005-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கில் கையால் மலம் அள்ளுவதைத் தமிழகத்தில் தடை விதித்துத் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதி மன்றம், “1993-ஆம் ஆண்டு சட்டத்தில் உடனடியாகத் திருத்தங்களைச் செய வேண்டும்; தவறினால், பிரதம மந்திரி அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் நீதிமன்றக் கூண்டில் ஏற வேண்டியிருக்கும்” என எச்சரித்தது.
இதே போல குஜராத் உயர்நீதி மன்றமும் மைய அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்துத் தீர்ப்பளித்தது. இப்பிரச்சினையில் அடுத்தடுத்து வழக்குகளையும், நீதிமன்றக் கண்டனங்களையும் சந்தித்த மைய அரசு, இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளும் தந்திரத்தோடும், துப்புரவுப் பணிகள் தனியார் மயமாக்கப்பட்டிருப்பதன் பின்னணியிலிருந்தும் ‘‘கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்த தடை செய்தல் மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013’’ என்கிற புதிய சட்டத்தை நிறைவேற்றியது. சட்டத்தை நடைமுறைபடுத்தி, இத்தொழிலை ஒழிப்பதற்கு அரசு எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில்தான்
• கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்த தடை செய்தல் மற்றும் மறுவாழ்வு சட்டம்&2013 ஐ உடனடியாக நடைமுறைபடுத்து.
• உச்ச நீதி மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் 1993 முதல் மரணமடைந்த துப்புரவு பணியாளரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சத்தை உடனடியாக வழங்கு.
• கையால் மலமள்ளும் தொழிலாளர்களின் மறுவாழ்வு மானியத் தொகையான ரூ. 40,000/த்தை ரூ. 2 லட்சமாக உயர்த்தி ஒரே தவணையில் வழங்கு.
• சாக்கடை மற்றும் கழிவு நீர் அகற்றும் பணிகளை முற்றிலும் நவீன மற்றும் எந்திரமயமாக்கு.
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இப்பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
பீம் யாத்ரா - பேருந்து பயணம்.
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 125 வது பிறந்த நாளை நினைவூட்டும் வகையில் 30 மாநிலங்களில், 500 மாவட்டங்களில் 125 நாட்களுக்கு பிரச்சார பயணத்தை நடத்தி அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14, 2016 அன்று டெல்லிக்கு சென்றடைந்து அம்பேத்கர் பிறந்த நாள் விழாவுடன் பயணத்தை நிறைவு செய்கின்றனர்.
(!3.01.2016 முகநூல் பதிவு)

No comments: