Tuesday, January 26, 2016

விழுப்புரம் இசைப்பள்ளியில் தீண்டாமை வன்கொடுமை :

தமிழக அரசின் கலை மற்றும் பண்பாட்டுத்துறையால் நடத்தப்படும் விழுப்புரம் மாவட்ட இசைப்பள்ளி, விழுப்புரம் நகராட்சி பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுமார் 65 மாணவ மாணவியர் குரலிசை, நாதசுரம், தவில், பரதநாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கம் ஆகிய பயின்று வருகின்றனர்.அரசின் சொந்தக் கட்டிடத்தின் கீழ்தளம் மற்றும் இரு மாடி என மூன்று தளங்களில் இயங்குகின்ற இப்பள்ளிக்கு திருமதி கலையரசி என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார்.இரண்டறை ஆண்டுகளாக பணியாற்றுகின்ற இவர் தினமும் பள்ளிக்கு சிதம்பரத்திலிருந்து வந்துசெல்கின்றார்.

இந்நிலையில் தலைமை ஆசிரியர் தலித் மாணவர்களை கட்டாயப்படுத்தி பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக தினத்தந்தி நாளிதழில் புகைப்படமும், செய்தியும் வெளியாகியிருந்தது.இதனைத் தொடர்ந்து தலைமை ஆசிரியை திருமதி. கலையரசி அவர்கள் புகைப்படத்தில் இருந்த இரண்டு மாணவர்களையும் அழைத்து செய்திதாள்களுக்கு செய்தி கொடுத்தது யார் என்று கேட்டுள்ளார்.மாணவர்கள் தங்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளனர்.   அதற்கு தலைமை ஆசிரியர் ‘‘யார் என சொல்லவில்லையென்றால் டி.சி கொடுத்து  கொடுத்து பள்ளியை விட்டு வெளியே அனுப்பி விடுவேன்என்று மிரட்டியுள்ளார். தலைமை ஆசிரியருடன் இணைந்து பாலு()பாலசுப்பிரமணியன் மற்றும் கொங்கம்பட்டு முருகையன் ஆகிய இருஆசிரியர்களும் ‘‘மாணவர்கள் கழிவறை சுத்தம் செய்வதை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாதுஎன்று அனைத்து மாணவர்களையும் அழைத்துக் மிரட்டி அச்சுறுத்தியுள்ளனர்.
பத்திரிகையில் வெளியான இச்சம்பவம் குறித்து கலை பண்பாட்டுத் துறையின் மண்டல துணை இயக்குநர் திரு.குணசேகரன் அவர்கள் விசாரணை மேற்கொண்டபோதுபாதிப்புற்ற மாணவர்கள் தலைமை ஆசிரியர்தான் கழிவறை சுத்தம் செய்யவைத்தார் என்பதை கூறியுள்ளனர். உதவி இயக்குநர் அவர்கள் அதனை ஏற்காமல் ‘‘போட்டோ எடுத்தது யார்? பத்திரிகையில் வெளியானது எப்படி?யார் வெளியில் சொன்னது? ஒழுங்காக ஒத்துக்கொள்ளுங்கள்.இல்லையென்றால் டி.சி கொடுத்து அனுப்பி விடுவேன். போலிசுக்கு கேஸ் கொடுத்து விடுவேன், போலிஸ் கரண்டு ஷாக் வைத்தால்தான் சொல்வீர்களா?’’ என்று மாணவர்களை மிரட்டியுள்ளார். இவரது விசாரணையின்போது மேலும் சில மாணவர்கள் தாங்களும் ஏற்கனவே கழிவறை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம் என்று கூறியுள்ளனர்.அப்போது உதவி இயக்குநர் ‘‘இங்க நீயா?நானா? நிகழ்ச்சியா நடத்துறோம்.ஆள்ஆளுக்கு பேசிகிட்டு.ஒழுங்கா படிக்கிற வேலையப் பாருங்க.இல்ல போலீஸ் விசாரணைன்னா என்னான்னு தெரியுமா.அடிதான்’’ என்று மிரட்டியுள்ளார்.மாணவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு கழிவறை சுத்தம் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தாமல், அந்தப் புகைப்படத்தை எடுத்தது யார்? செய்திதாளில் எப்படி வெளியானது?யார் செய்தி கொடுத்தது என்று? கேட்டு மாணவர்களை மிரட்டியுள்ளார். இவைகள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரிடம் பேசியதில் அறிய முடிந்தது.
மேலும் திருமதி.கலையரசி அவர்களுக்கு முன்பிருந்த தலைமை ஆசிரியர் பள்ளி கட்டிடங்களை சுத்தம் செய்வதற்கும், கழிவறையை சுத்தம் செய்வதற்கும் தனித் தனியாக இரு துப்புரவு பணியாளர்களை வைத்திருந்துள்ளார். கழிவறையை சுத்தம் செய்கின்ற வயதான பெண்மணி வாரம் ஒரு முறை வந்து மூன்று தளங்களிலும் உள்ள கழிவறையை சுத்தம் செய்துள்ளார்.பள்ளி கட்டிடத்தை தினமும் சுத்தம் செய்துள்ளனர்இருவருக்கும் தலா ரூ.400/- ஊதியமாக அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தலைமை ஆசிரியராக தற்போது உள்ள திருமதி. கலையரசி அவர்கள் இப்பள்ளிக்கு வந்ததும், மேற்படி கழிவறை சுத்தம் செய்கின்றவரை நிறுத்திவிட்டு, கட்டிடத்தை சுத்தம் செய்கின்ற  திருமதி. வள்ளி என்பரை மட்டும் தொடர்ந்து தற்காலிகப் பணியாளராக வைத்துள்ளார். இவர் வழக்கம்போல் பள்ளி வகுப்பறைகளை மட்டும் கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்துள்ளார்.பள்ளியின் கழிவறைகளை மாணவர்களை வைத்தே குறிப்பாக தலித் மாணவர்களைக்கொண்டே சுத்தம் செய்துள்ளார் தலைமை ஆசிரியர் கலையரசி.இதுதொடர்பான செய்தி வெளியான பிறகே இதுபோன்ற அவலம் பள்ளியில் தொடர்ந்து நிகழ்வது வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது.
பள்ளியினை ஆய்வு செய்ததிலும், பல்வேறு தரப்பினரிடம் பேசியதலும்  தற்போதுள்ள தலைமை ஆசிரியர் திருமதி.கலையரசி அவர்கள்தான் அனைத்து அவலங்களுக்கும் காரணம் என்பதையும் கண்டறிய முடிந்தது. மேலும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் ரூ.155/- மட்டும்தான் என்றாலும், தலைமை ஆசிரியர் மாணவர் சேர்க்கை, பயிற்சி முடிந்து மாற்றுச் சான்றிதழ் வழங்கும்போதும், ஆண்டு விழாவின்போதும் மாணவர்களை கட்டாயப்படுத்தி நன்கொடை, அன்பளிப்பு என்ற பெயரில் பணம் வசூலிப்பார் என்பதை மாணவர்கள் வாயிலாக அறிய முடிந்தது.
மேலும் பள்ளியில் குடிநீர் வசதி இல்லையென்றும், அதனால் பள்ளிக்கு தனி குடிநீர் இணைப்பு குழாய் பதிக்கவேண்டும் என்றும் கூறி மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் ரூ.200/- வசூலித்துள்ளார். ஆனாலும் அந்தந்த வகுப்பு மாணவர்கள்தான் அருகிலுள்ள காவலர் குடியிருப்பிற்குச் சென்று குடத்தில் குடிதண்ணீர் பிடித்துவருகின்றனர். மேலும் சில சமயங்களில் அரசு கலை நிகழ்ச்சிகளுக்காக ஒதுக்குகின்ற, அளிக்கின்ற நிதிகளை முறைகேடாக தலைமை ஆசிரியர் எடுத்துக்கொள்கிறார் என்கிற குற்றச்சாட்டும் இவர் மீது எழுந்துள்ளது.
தினதந்தி நாளிதழில் செய்தி வெளியானதும் தலைமை ஆசிரியர் கலையரசிஅதனை மறுத்து பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரிடமும் கையெழுத்தினை வாங்கி உயரதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளார். இதில் தினதந்தி நாளிதழில் வெளியான புகைப்படத்தில் இருந்த ஜெகதீஸ், பிரதாப் மற்றும் இதற்குமுன்பு கழிவறை சுத்தம் செய்த ஜெயவேல், அபிராமி ஆகிய மாணவர்களிடமும்  கையெழுத்து வாங்கியுள்ளார். இந்நிலையில் ஜெகதீஸ், பிரதாப், ஜெயவேல், அபிராமி ஆகிய மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்ய தங்களை கட்டாயப்படுத்திய  தலைமை ஆசிரியர் மற்றும் விசாரணையின்போது தங்களை மிரட்டிய உதவி இயக்குநர் ஆகியோர் மீது நடவடிக்கை கோரி 02.07.15 அன்று உயரதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்னர்.
இதன்பிறகு தலைமை ஆசிரியர் தமிழக முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு இச்சம்பவம் தொடர்பாக மறுப்பினை தெரிவித்துமீண்டும் ஒரு மனுவினை அனுப்புகின்றார். இம்மனுவில் மேற்படி ஜெகதீஸ், பிரதாப், ஜெயவேல், அபிராமி நான்கு மாணவர்களிடமும் கையெழுத்துவாங்கவில்லை. இதுகுறித்து தலைமை ஆசிரியர் அவர்களிடம் நான் கேட்டபோது ‘‘என்மீதே புகார் அனுப்பியதால் இவர்களிடம் நான் கையெழுத்து வாங்கவில்லை’’ என்று எங்களிடம் கூறினார்.ஆனால் உண்மையில் இந்த நான்கு தலித் மாணவர்களும்தான் கழிவறை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதை தைரியமாக கூறுகின்றனர்.பிற மாணவர்கள் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களின் அச்சுறுத்தல்களுக்கு பயந்து மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
உதவி இயக்குநர் திரு. குணசேகரன் அவர்கள் தொடர்ந்து தீண்டாமையை கடைபிடித்துவரும் தலைமை ஆசிரியருக்கு சாதகமாக அறிக்கை சமர்பித்ததைத் தொடர்ந்து, அதனை எற்றுக்கொள்ள மறுத்த கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் அவர்கள்.விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை வழங்க ஆணையிட்டுள்ளார்.ஆனால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தாமல் தமது சார்பாக விழுப்புரம் வட்டாட்சியர் அவர்கள் மூலமாக விசாரணை மேற்கொண்டுள்ளார்.வட்டாட்சியர் அவர்கள் விசாரணைக்காக பள்ளிக்குச் சென்றபோது பாதிப்புற்ற மாணவர்கள் பள்ளியில் இருப்பதை மறைத்து, அவர்கள் இன்று பள்ளிக்கு வரவில்லை என்று கூறியுள்ளார். இதனால் விசாரணை நடத்தாமல் திரும்பச் சென்ற வட்டாட்சியர், இரு நாட்கள் கழித்து ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் 2 மாணவர்களை விசாரணைக்காக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு  அழைத்து வரச் சொல்லியுள்ளார். அதனடிப்படையில் தலைமை ஆசிரியர் தங்களுக்கு சாதகமாக வாக்குமூலம் அளிக்கு மாணவர்களை மட்டும் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளார்.
தலைமை ஆசிரியர் திருமதி.கலையரசி அவர்களின் குறுகிய சாதிய மனோபாவம் மற்றும் சுயநலத்தினால் இதுபோன்ற தீண்டாமை பாகுபாடுகளும், பல்வேறு நிதி முறைகேடுகளும் பள்ளியில் நடைபெறுகின்றது என்பதையே நாங்கள் ஆய்வின் முடிவில் கண்டறிந்தோம்.

இச்சம்பம் குறித்து 25.01.2016 இன்று நடைபெற்ற தங்கள் விசாரணையின்போது நான் அளிக்கின்ற இந்த வாக்குமூலத்தில் கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றி உதவிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
·         தலித் மாணவர்களை கட்டாயப்படுத்தி கழிவறை சுத்தம் செய்ய வைத்து தீண்டாமைப் பாகுபாட்டினை நடைமுறைபடுத்திய பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. கலையரசி மற்றும் விசாரணை என்ற பெயரில் தீண்டாமை சம்பவத்தை மறைக்க முயன்றும், குற்றமிழைத்த தலைமை ஆசிரியரை காப்பாற்றுகின்ற நோக்கிலும், மாணவர்களை காவல் நிலையத்தில் வைத்து அடிப்போம், கரன்ட் ஷாக் கொடுப்போம், டி.சி கொடுப்போம் என மிரட்டி அச்சுறுத்திய மண்டல உதவி இயக்குநர் திரு.குணசேகரன் ஆகிய இருவர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக வழக்கு பதிவு செய்து, மேற்படி தலைமை ஆசிரியர் மற்றும் மண்டல உதவி இயக்குநர் இருவரும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படவேண்டும்.
·         பள்ளியில் தற்போது தலைமை ஆசிரியராக உள்ள திருமதி கலையரசி அவர்களின் பணி காலத்தில் நடந்துள்ள நிதிமுறைகேடுகள் மற்றும் பல்வேறு காரணங்களைக் கூறி மாணவர்களிடம் பணம் வசூலித்தது போன்ற குற்றச் செயல்கள் தொடர்பாக துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும்.
·         தலித் மாணவர்களை கழிவறை சுத்தம் வைத்ததும் இல்லாமல், அவற்றை வெளியில் சொல்லக்கூடாது என்றும் மீறினால் பள்ளியில் இருந்து நீக்கிவிடுவேன் என்று மிரட்டிய தலைமை ஆசிரியர் கலையரசி மற்றும் ஆசிரியர்கள்  பாலு()பாலசுப்பிரமணியன் மற்றும் கொங்கம்பட்டு முருகையன்  ஆகியோரை பணி நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
·         பாதிப்புற்ற மாணவர்களுக்கு உரிய உளவியல் கவுன்சிலிங் நடத்தப்பட்டு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்கப்படவேண்டும்.
·         வன்கொடுமையால் பாதிப்புற்ற மாணவர்கள் இருவருக்கும் மேலும் சிறப்புக் கல்வியினை அரசு தனது சொந்தப்பொறுப்பில் அளித்து, படிப்பை முடித்த பிறகு அவர்களின் கல்வி தகுதிக்கு ஏற்றார்போல அரசு வேலை வழங்குவதற்கான நடவடிக்கையினை அரசு மேற்கொள்ளவேண்டும்.
·         உடனடியாக பள்ளியில் நிரந்தர துப்புறவுப் பணியாளர் நியமனம் செய்யப்படவேண்டும்.
·         விழுப்புரம் நகராட்சியின் மூலம் உடனடியாக பள்ளிக்கு குடிநீர் வசதி செய்யப்படவேண்டும்.
·         தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதே போன்ற இசைப்பள்ளிகள் உள்ள நிலையில் நான்கு மாவட்டங்களில் மட்டுமே சொந்தக் கட்டிடத்தில் பள்ளி இயங்கிவருகின்றது. சொந்தக் கட்டிடம் உள்ள இதிலேயே இவ்வளவு அவலங்களும், இழிவுகளும், அச்சுறுத்துகளும் தொடர்கின்ற நிலையில், வாடகை கட்டிடத்தில் இயங்குகின்ற பள்ளிகள் குறித்த நிலைகுறித்து நாம் சொல்லவேத் தேவையில்லை. எனவே, அரசு உடனடியாக இசைப்பள்ளிகளின் தரம் உயர்வு, மேம்பாடு, அடிப்படை வசதி போன்றவைகள குறித்து உரிய ஆய்வு செய்ய ஒரு வல்லுநர் குழு அமைத்து, உரிய பரிந்துரைகளைப் பெற்று அவைகளை நடைமுறைபடுத்திடவேண்டும்.
·         மேலும் நாடுமுழுவதும் உள்ள இசைப்பள்ளிகளில் குரலிசை, நாதசுரம், தவில் பரதநாட்டியம், தேவாரம், வயலின், மிருதங்கள் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. கலை மற்றும் இசைத் துறையில் பல்வேறு புதிய நவீன வளர்ச்சிகளும், மாற்றங்களும் ஏற்பட்டுள்ள சூழலில் இவைகளை கருத்தில்கொண்டு புதிய பாடப்பிரிவுகளும் மற்றும் தமிழர்களின் பாரம்பரிய இசைக் கருவிகளான பறை, நாட்டுபுற இசை, நாட்டுபுற பாடல்கள் மற்றும் கரகாட்டம், ஒயில், பொம்மலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகளை பாதுகாத்து வளர்த்தெடுக்கும் நோக்கில் இவைகளையும் புதிய பாடப்பிரிவுகளாக
இவண்
முருகப்பன்
திட்ட ஒருங்கிணைப்பாளர்
இளைஞர்களுக்கான சமூகவிழிப்புணர்வு மையம்(SASY),

திண்டிவனம்.

1 comment:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

அரிய பதிவுகள். தொடர்வோர் பட்டியல் இணைத்தால் தொடரலாமல்லவா தோழர்களே?