கொரோனா அல்ல தனிமைதான் சாவு.
“உப்புவண்டிக் காரன்” நாவல் கடந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் சீர் புத்தக சேமிப்புத் திட்டத்தில் வாங்கியது. சமூக அரசியல் மற்றும் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தபின்பு, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நாவல் படிப்பதில் அதிக ஆர்வம் இல்லாமல் போனது.
கோவிட் / கொரோனா காலத்தில் தீவிர அரசியல் புத்தகங்கள் படிப்பதிலிருந்து விலகி, நாவல்கள் படிக்கத் தொடங்கினேன். முகநூலில் பலரும் எழுதும் கருத்துகளுக்கு பின்பு அவ்வப்போது சில நாவல்களைப் படித்தேன். குறிப்பாக இமையத்தின் செல்லாக்காசு மற்றும் ஆடு ஜீவிதம், கொத்தாளி உள்ளிட்ட பல நாவல்கள் படித்த பிறகு கதை/நாவல்கள் படிப்பதில் ஒரு பிடிப்பு ஏற்பட்டது.
படிக்காமல் இருக்கின்ற புத்தகங்களை படித்து முடித்துவிட வேண்டுமென கொஞ்சம் யோசித்து, தி.ஜானகிராமனின் 9 நாவல்களையும், 3 சிறுகதை தொகுப்புகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.
தோழர் செஞ்சி தமிழினியன் அவர்களின் ஊத்தாம்பல்லா இன்னும் படிக்காமல் இருப்பது நெஞ்சை உறுத்திக்கொண்டிருக்கின்றது. ஆனாலும், கடந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில் வாங்கிய சில புத்தகங்களை படித்து முடித்துவிட வேண்டுமெனெ உப்புவண்டிக்காரன் எடுத்தேன். முந்தாள் தொடங்கியது. இடையில் கடற்கரை அவர்களின் புத்தகம் வந்தது.
இமையம் நாவல் நாம் எவரும் எதிர்பார்க்காத களம். ஆனால், நாம் மட்டுமல்ல உலகிலுள்ள எல்லோரும் இரண்டு ஆண்டுகள் அனுபவித்த களம். அந்த அனுபவங்கள் உப்புவண்டிக்காரன் நாவல்.
கொரோனா தொடங்கியதும், சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்று, டெஸ்ட் எடுத்து, பாசிட்டிவ் ஆனவர்களை 16 நாள் தனி அறையில் தங்க வைத்து, வீட்டுக்கு அனுப்புவதுதான் கதை.
விருத்தாசலம் அருகே உள்ள விளம்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த கவர்னர் என்பவர் (இந்தப் பெயருடன்தான் நாவல் ஆரம்பிக்கும். தமிழக அரசியல் சூழலி, கிண்டலுக்காக வைத்துள்ளாரோ என்றுதான் தொடர்ந்து படித்தேன். போக போகத்தான் உண்மையான பெயர் எனத் தெரிந்தது).
கவர்னர், அவனது தந்தை, தாய் உள்ளிட்ட அந்தக் கிராமத்தை சேர்ந்த பலரும், சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த 16 நாட்கள்தான் கதை.
அந்தகொரோனா நாட்களில் பெரும்பாலோனர் ஒரு சில நாட்களில் வீடுகளிலோ, மருத்துவமனையிலோ, அரசு தங்க வைத்து இடங்களிலோ தங்கியிருந்திருப்போம்.
கொரோனாவின் பாதிப்பைவிட, அதனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை பார்க்கவோ, பேசவோ, தொடவோ முடியாமல் தனிமையில் இருந்ததுதான் பெரும் நோய் என்பதுதான் மையம். ஒரே வீட்டில் இருந்தாலும், மையங்களில் ஒரே அறையிலோ, அடுத்தடுத்த அறையிலோ இருந்தாலும் பேசிக்கொள்ள முடியாத தனிமையின் பாதிப்புதான் பெரும் மனநோயாகி உருவாகி மனிதர்களை பாதித்துள்ளது என்பதுதான் இந்த தாய், தந்தை, மகனுக்கு இடையேயான கதை.
கொரோனாவிற்கு எவ்வித சிகிச்சையும் இல்லாத தொடங்கிய சில நாட்களில், மனிதர்கள் தனிமைப்பட்டதை, ஒரு தாய் தந்தை மகன் எனும் ஒரு குடும்பத்தை முன்னிறுத்தி இமையம், முந்தைய நாவல்களைப் போல் மனித உணர்வுகளை மையப்படுத்தி எழுதியுள்ளார்.
தலையிலும், மிதிவண்டியிலும் பிறகு மாட்டு வண்டியிலும் ஊர் ஊராக சென்று உப்புவிற்பது, கூடவே கருவாடு, கத்திரிக்காய், சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவைகளை விற்று மகனை வளர்த்து, கொஞ்சம் நிலம் வாங்கி, வீடுகட்டி நல்ல நிலைமைக்கு வந்த தாய், தந்தையின் உழைப்பையும், விளம்பாவூர் எனும் கிராமத்திற்கே உரிய போக்குடன் கொண்டு சென்றது, கூடுதல் சிறப்பு.
படிக்க படிக்க கொரோனா கால நினைவுகள் வந்து செல்வதை தவிர்க்கவே முடியாது. சிலநொடிகள் அந்த நாட்களின் வாழ்வது போன்றே நிழலாக தோன்றி மறைகிறது.
(01.01.2026 முகநூல் பதிவு)


No comments:
Post a Comment