Wednesday, January 9, 2008

புகாருக்குப் புகார் - திருந்துவார்களா அதிகாரிகள்?

09.01.08


அனுப்புதல்

இரா.முருகப்பன்,
இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம்,
56/52, விவேகானந்தா நகர்,
மரக்காணம்சாலை,
திண்டிவனம் - 604 002.

பெறுதல்

1.மேதகு தமிழக ஆளுநர் அவர்கள்,
கிண்டி, சென்னை.

2.மாண்புமிகு.முதல்வர் அவர்கள்,
தலைமைச்செயலகம், சென்னை.

3.தலைமைச் செயலர்,
தலைமைச் செயலகம், சென்னை.

ஐயா,
பொருள் : தொலைநகலில் அனுப்பிய புகாரைப் பெற மறுத்த உள்துறைச் செயலக அலுவலர்கள் மீது நடவடிக்கை கோருதல் தொடர்பு

வணக்கம்.

நான் மேற்கண்ட முகவரியில் செயல்படும் இளைஞர்களுக்கான சமூக விழிப்புணரவு மையம் என்கிற மனித உரிமை அமைப்பின், விழுப்புரம் மாவட்ட மனித உரிமைக் காப்பாளராக பணியாற்றி வருகிறேன். தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், கோவை, ஈரோடு, நெல்லை, தூத்துகுடி ஆகிய 6 மாவட்டங்களில் வன்கொடுமைகளில் பாதிக்கப்படும் தலித் மக்களுக்கு சட்ட ரீதியான உதவிகளை செய்து, ஆதரவாக இருந்து நீதியும் நியாயமும் கிடைப்பதறகான முன்முயற்சிகளை செய்துவருகிறோம்.

2) தூத்துகுடி மாவட்டத்தில் திருவைகுண்டம் வட்டத்தில் உள்ள இருவப்புரம் பஞ்சாயத்தை தனிப்பஞ்சாயத்தாக அறிவிக்க வேண்டும் என அப்பஞ்சாயத்தில் உள்ள 13 கிராமத்தைச் சேர்ந்த தலித்துகள் 100 நாள் தொடர் உண்ணாவிரதம் இருந்துவந்துள்ளனர். நேற்று 08.01.08 காலை திடீரென்று போலீசார், மீட்சி மக்கள் இயக்கத் தலைவர் ஜீவன்குமார் உள்ளிட்ட 8 பேரை கைது செய்துள்ளனர். ஜனநாயக ரீதியில் உண்ணாவிரதம் இருந்த மக்களிடம் அத்துமீறி போலீசர் நடந்த கொண்டவிதம் மனித உரிமை மீறலாகும்.

3) போலீசாரின் இந்த மனித உரிமை மீறல் குறித்தும், கைது செய்யப்படிருப்பவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், இன்று பகல் 2.00 மணியளவில் எங்களது அமைப்பின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், தமிழக முதல்வர் தனிப்பிரிவு, அரசின் தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், காவல்துறைத் தலைவர் மற்றும் மனித உரிமை ஆணையங்கள் ஆகிய அனைத்துக்கும் தொலை நகல் அனுப்பினேன்.

4) தொலைநகலைப் பெறுவதற்கு முன்பு விவரம் கேட்கும் அதிகாரிகளுக்கு சம்பவத்தைக் கூறினேன். தொலைநகலைப் பெற்றுக்கொண்டார்கள். அதே போன்று உள்துறைச் செயலருக்கு 044&25670596 என்ற எண்ணிற்கு தொலைநகல் அனுப்பினேன். அப்போது எதிர்முனையில் என்ன தொலைநகல் என்ற விவரம் கேட்டார்கள். நான் சொன்னேன். அதற்கு அவர், ‘‘எங்களுக்கு எதுக்கு சார் அனுப்பறீங்க. கலெக்டருக்கே அனுப்புங்கள்’‘ என்றார். அதற்கு நான், ‘‘உள்துறைச் செயலர் அவர்கள் இவ்வழக்கில் தலையீடு செய்யவேண்டும் என்பதற்காகத்தான், அவர்கள் கவனத்திற்கு இப்பிரச்சனையை தெரிவிக்க தொலைநகல் அனுப்புகிறோம்.’’ என்று கூறினேன். அதற்கு அவர், ‘‘எங்களுக்கு அனுப்பறது வேஸ்ட் சார். நாங்க ஒன்னும் பண்ணமுடியாது. கலெக்டருக்குதான் அனுப்புவோம்’’ என்று மிகவும் அலட்சியத்துடன் கூறினார். அதன்பின்பு நான், ‘‘செயலருக்கு குறிப்பாவது வைக்கலாம் சார்’’ என்றேன். அதற்கும் மேற்படி நபர், ‘‘நீங்கள் கலெக்டருக்கே அனுப்புங்கள்’’ என்று கூறி போனை வைத்துவிட்டார்.

5) பொறுப்பற்ற முறையில் மிகவும் அலட்சியமாக நடந்துகொண்டதுடன், மனித உரிமை அமைபில் இருந்து அனுப்புகிறோம் என்று கூறிய பின்பும், புகார் அனுப்புவது வேஸ்ட் என்றும், ஒன்றும் செய்யமுடியாது என்றும் கூறிய, உள்துறைச் செயலக அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

6) இனி தொடர்ந்து இதுபோன்று தொலைநகலில் வருகின்ற புகார்களைப் பெறுவதற்கு மறுக்காமல், பெற்று நடவடிக்கை எடுக்க தக்க ஆவனசெய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
இரா.முருகப்பன்.

1 comment:

மாசிலா said...

மக்களுக்காக மக்களின் வரிப்பணத்தில் கூலிக்கு வேலையில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் சட்டம் சொல்வது போல் செயல்படவேண்டியது ஒரு கடமை.

இதில் அவர்களிடம் எதையும் நாம் எதிர்பார்த்து உட்கார்ந்திருக்க வேண்டிய அவசியத்தில் இருக்க கூடாது. கொடுக்கிற சம்பளத்தை வாங்கிக்கொண்டு, இட்ட வேலைகளை செய்யவேண்டிய கை கூலிகள்தான் இந்த அதிகாரிகள். இதில் அவர்கள் சிந்திப்பதற்கோ, தன்னிச்சையாக முடிவெடுப்பதற்கோ எந்த சுதந்திரமும் இல்லை.

இருந்தும், இன்றைய தேதிகளில் இதுபோன்ற அல்லக்கை அதிகாரிகள் சாதிக்கார முட்டாள்களுக்கு சோரம் போவதையே தொழிலாக கொண்டிருப்பது வேதனைக்கு உரியது.

உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக்கள். மிகுந்த துணிவுடன், அயராமல் உழைக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்.

நன்றி.