Wednesday, January 2, 2008

மீண்டும்....ஒரிசா....

இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம்
56/52,விவேகானந்தா நகர், மரக்காணம் சாலை,
திண்டிவனம்-604 002

29.12.07

ஒரிசாவில் தாழ்த்தப்பட்ட - பழங்குடியின

சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் கண்டன அறிக்கை



ஒரிசாவை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்கமுடியாது. புயலால் பாதிக்கப்பட்டபோது மட்டுமல்ல, மனித நேயமில்லாத இந்துத்துவ அமைப்புகளால் பாதிரியார் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரு மகன்களும் உயிரோடு ஜீப்பில் வைத்து கொளுத்தப்பட்ட கொடூர சம்பவத்தின் போதும்தான். இப்போது மீண்டும் அதே போன்று சம்பவங்களை விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற மதவெறி அமைப்பினர் நடத்திக்கொண்டிருக்கின்றனர். மாநில அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்கிறது. இந்நிலையில் மதவெறியர்களின் கொடூரங்களை கட்டுபடுத்த ஒரிசாவிற்கு ராணுவம் சென்றுள்ளது.

ஒரிசாவில் உள்ள கந்தமால் மாவட்டம் பழங்குடியினர் அதிகமாக வசிக்கின்ற மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் உள்ள 6.50 லட்சம் பேரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கிறித்துவர்களாகும். அதானல் இம்மாவட்டத்தை பழங்குடியினர் மாவட்டம் என்றும் அழைக்கின்றனர். பழங்குடியினரில் பெரும்பான்மையோர் கிறித்துவர்களாகும். இந்நிலையில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவதற்காக பிரம்மனிகோன் பஜார் என்ற இடத்தில் பெரிய வரவேற்பு(ஆர்ச்) வைத்துள்ளனர். அந்தப்பகுதியில் இருந்து இதனை எதிர்த்த விஸ்வ ஹிந்து பரிஷத்தினர், தங்களது அமைப்பில் உள்ள மதமாற்ற எதிர்ப்புக் குழுவின் தலைவர் லஷ்மனாணந்தா சரஸ்வதியை அந்த இடத்திற்கு வரவழைத்துள்ளனர். இதற்கு அங்குள்ள கிறித்துவ பழங்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனைக் கண்டித்து விஸ்வ ஹிந்தி பரிஷத், பஜ்ரங்தள் போன்ற இந்துத்துவ அமைப்புகள், கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகின்ற 25.12.07 அன்று கந்தமால் மாவட்டத்தில் கடை அடைப்பு நடத்தி பந்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

பந்தின்போது இந்துத்துவ அமைப்பினர் கந்தமால் மாவட்டத்தில் 19 சர்சுகளை தீவைத்து கொளுத்தியுள்ளனர். பல்வேறு பிரார்த்தனைக் கூடங்களையும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக வைக்கப்பட்டிருந்த வரவேற்பு வளைவுகளையும், கிறித்துவர்கள் வீடுகளையும் திட்டமிட்டு தாக்கி, அழித்து, சேதப்படுத்தியும் தீ வைத்தும் எரித்துள்ளனர். இதில் காங்கிரஸ் எம்.பி ராதாகாந்தி நாயக் என்பவர் வீடும் தாக்கப்பட்டுள்ளது. மினியா பகுதியில் உள்ள பாதிரியார் பசந்திக்கால் என்பவரை தாக்கி, அவரது வாகனைத்தைக் கொளுத்தியுள்ளனர். பல்வேறு தொண்டு நிறுவனங்களின் அலுவலங்கள் தாக்கப்பட்டுள்ளது. ஜலேஸ்பதா பகுதியில் 6 வீடுகளைத் தாக்கி, அங்கிருந்த மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் மாநில சுரங்கத்துறை அமைச்சர் பத்மநாபா பெகராவுக்கு சொந்தமான வீடு, கடைகளும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் பிரிங்கியா பகுதியில் உள்ள 2 காவல் நிலையங்களும், ஒரு போலீஸ் வாகனமும் இந்துமதவெறி அமைப்பினரால் தீ வைத்து கொளுத்தப்பட்டு சேந்தமடைந்துள்ளன. மதவெறியர்களின் இந்தக் கலவரத்தில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இளைஞர் ஒருவர் கொள்ளப்பட்டுள்ளார்.

தாழ்தப்பட்ட, பழங்குடியின கிறித்துவ சிறுபான்மை மக்கள் மீது கிறிஸ்துமஸ் தினத்தன்று இதுபோன்று தாக்குதல்களை நடத்துவதற்காக திட்டமிட்டே விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்கதள் போன்ற இந்துத்துவ அடிப்படைவாத அமைப்பினர் பந்த் அறிவித்துள்ளனர். பந்த் அன்று மாவட்டட்தின் முக்கியமான பகுதிகளில் சாலைகளில் மரங்களை வெட்டிப் போட்டும், குழிகளை ஏற்படுத்தியும், கட்டாக், புவனேஸ்வபத்ராஆகிய பகுகளில் உள்ள ரயில் தண்டவாளங்களிலும் தடைகளை ஏற்படுத்தி போக்குவரத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதன் மூலம் கலவரப்பகுதிகளுக்கு போலீசார் வருவதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

கலவரக்காரர்கள் நிகழ்த்திய வன்முறைச் சம்பவங்களின் விளைவால் மாவட்டத்தின் பாலிகுடா, தாரிங்கிபா, பிரம்மனிகோன், புல்பானி ஆகிய பகுதிகளி கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளதன் விளைவால், இப்பகுதிகளில் ஊரங்ங்கு உத்தரவு அமுலப்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் இப்பகுதிகளில் இந்துத்துவ அமைப்பினர் தொடர்ந்து நடத்துகின்ற கலவரங்களை அடக்குவதற்காக டெல்லியில் இருந்து மத்திய துணை ராணுவப் படை விரைந்துள்ளனர்.

கடந்த 1999-ஆம் ஆண்டு பாதிரியார் ஸ்டெயின்ஸ், அவரது இரு மகன்கள் மூவரும் ஜீப்பில் உயிரோடு வைத்து கொளுத்தி கொலை செய்த பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த தாராசிங்க் என்பவருக்கு, அதிக பட்ச தண்டனையான தூக்குத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பின்பும் அதே ஒரிசாவில் சிறுபான்மை மக்கள் மீது, திட்டமிட்டு வன்முறைகளை நிகழ்த்தி வீடுகளை தாக்கியும், சர்ச்சுகளையும், வாகனங்களையும், காவல் நிலையங்களையும் தீ வைத்து எரித்து வருகின்ற சம்பவங்கள் நடந்துள்ளன. குஜராத்தில் நரேந்திர மோடி அரசு மீண்டும் பதவியேற்றதின் விளைவே சிறுபான்மை மக்கள் மீது இந்த வன்கொடுமைகள் நிகழ்ந்துள்ளன.

இந்நிலையில் கலவரம் நடந்த பகுதிகளை பார்வையிட, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயக மற்றும் மனித உரிமைக்கான அமைப்பின் தேசிய ஒருங்கினைப்பாளர் பால் திவாகர் தலைமையில் முன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி ராஜேந்திர சச்சார், பத்திரிக்கையாளர் தமன்போஸ் உள்ளிட்ட உண்மையறியும் குழுவினர் சென்றுள்ளனர். மேலும், டெல்லி தேசிய சிறுபான்மை கமிஷனும், ‘‘ஒரிசாவில் தொடர்ந்து சிறுபான்மையோர் மீது இதுபோன்று தாக்குதல்கள் நடந்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். மாநில அரசின் செயல்பாடுகள் சந்தேகத்திற்குரியதாகும். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உடனடியாக அறிக்கை கேட்டுள்ளோம். எங்கள் ஆணையத்திலிருந்து ஒரு குழுவினர் ஒரிசாவிற்கு செல்ல உள்ளனர்’’ என்று அறிவித்துள்ளது.

மத்திய அரசு ஒரிசாவிற்கு ராணுவத்தை அனுப்பி கலவரத்தை அடக்கியுள்ளது. ஆனாலும் மத்திய, மாநில அரசுகள் மதச்சார்பற்ற கொள்கையை கடைபிடிக்காமல் போனதன் காரணமாகவே இது போன்று சம்பவங்கள் நிகழ்கின்றன. சட்ட, ஒழுங்கு பிரச்சனைக்களாகக் கருதி மட்டுமே இதுபோன்ற கலவரங்களை அடக்கிவிடமுடியாது. சமூக மற்றும் பொருளாதார ரீதியான மாற்றங்கள் நிகழ்ந்து மக்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை மாற்றுவதற்கான முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும். மேலும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மதசார்பற்ற கொள்கையில் உறுதியாக இருக்கவேண்டும். அப்படி தவறியதன் காரணமாகவே குஜராத், இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் தோலிவிகள் என்பதை உணரவேண்டும்.

நடந்த வன்முறை மற்றும் கலவரம் தொடர்பாக இதுவரை 20 பேரை மட்டுமே ஒரிசா அரசு கைதுசெய்துள்ளது. எந்தவித பாகுபாடுமில்லாமல் கலவரக்காரர்கள் அனைவரும் கண்டறியப்பட்டு கைது செய்வதற்கான முயற்சிகளை அரசு செய்யவேண்டும். மத்திய அரசும் இதை வலியுறுத்த வேண்டும். மேலும் கலவரத்தில் வீடிழந்து, வாகனம் எரிந்து, காயமடைந்து, பாதிக்கப்பட்ட மற்றும் மரணமடைந்த குடும்பத்தினர் அனைவருக்கு உரிய நட்ட ஈடுகள் நிவாரணமாக வழங்கப்பட வேண்டும்.

தமிழன்புடன்,
வே.அ.இரமேசுநாதன்
இயக்குநர்.

No comments: