Saturday, February 9, 2008

உயர்நீதி மன்றம் உத்திரவு!

பூதேரி கலாவை உயிருடன் எரித்து கொலை செய்ய முயற்சி -

விழுப்புரம் போலீசார் விசாரிக்க

சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு!


திண்டிவனம் பூதேரியில் கலா(27), தன் கணவர் லட்சுமணன், மூன்று பெண் குழந்தைகளூடன் கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவரின் மகன் பரத், கலாவை பாலியல் தொல்லைகள் கொடுத்தவந்தபோது, கலா தனது தோழிகளான கிடங்கல் லட்சுமி, மீனா ஆகியோரை துணைக்கு அழைத்துக்கொண்டு, கடந்த 27-०9-07 அன்று காலை மேற்படி நடராஜனிடம் அவரது மகன் பரத்தின் நடவடிக்கைகள் குறித்து முறையிட்டுள்ளனர். பின்பு கலாவுடன், லட்சுமியும், மீனாவும் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர் . அப்போது அங்கு வந்த நடராஜன், அவரது மகன் பரத், மகள் சங்கீதா, உறவினர்கள் ஆண்டாள், கண்ணம்மாள் ஆகியோர் சேர்ந்து கலாவை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திவிட்டு ஓடிவிட்டனர். அங்கிருந்த லட்சுமி, மீனா ஆகியோர் கலாவை திண்டிவனம் அரசு மருத்துவ மனையில் சேர்த்து காபாற்றினர். திண்டிவனம் போலீசார் சரியாக நடவடிக்கை எடுக்காத நிலையில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கலா உயர்நீதி மன்றத்திற்கு புகார் அனுப்பினார். அதனை ஏற்ற உயர் நீதி மன்றம், திண்டிவனம் இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் வழக்கறிஞர் அ.இராஜகணபதி அவர்கள் கலாவிற்கு சட்ட உதவிகள் அளிக்க நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் இராஜகணபதி விசாரித்து தனது அறிக்கையை சமர்பித்தார்.

இதனிடையே கலாவை கொளுத்தியவர்கள் மீது நடவடிக்கைக் எடுக்கக்கோரி, திண்டிவனம் வட்ட மனித உரிமை இயக்கத்தின் சார்பில், உலக மனித உரிமை தினமான டிசம்பர் 10 அன்று ஆர்பாட்டம் நடத்த போலீஸ் அனுமதி மறுத்தனர். அதனால் சம்பவம் குறித்து 4000 துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டு, 100 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் கலாவை கொளுத்திய சம்பவத்திற்கு நேரடி சாட்சியான லட்சுமியை நடராஜன் தரப்பினர் தொடர்ந்து அடியாட்களை வைத்து மிரட்டிக்கொண்டிருந்தனர். இது குறித்து உடனடியாக லட்சுமி காவல் மற்றும் உயரதிகாரிகளுக்கு புகார் அனுப்பினார். லட்சுமி மீது போலீசார் பொய்வழக்குப் போட முயற்சித்தனர். மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய வழக்கில் திண்டிவனம் போலீசார் இ.த.ச பிரிவு 326 (சிறு காயம்) மட்டுமே வழக்கு பதிவு செய்திருந்தனர். திண்டிவனம் வட்ட மனித உரிமை இயக்கத்தின் தொடர் தலையீட்டுக்குப் பின்பு வழக்கில் இ.த.ச. பிரிவு 307 சேர்க்கப்பட்டது. ஆனாலும் குற்றவாளிகள் யாரும் இது வரை கைது செய்யப்படவில்லை.

கலாவிற்கு வழக்காடுவதற்காக இலவச சட்ட உதவி மையத்தின் சார்பில் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் பார்த்தீபன் நியமிக்கப்பட்டார். அவர் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்று, கலாவை கொளுத்திய இவ்வழக்கை விழுப்புரம் நகரக் காவல் நிலைய ஆய்வாளரிடம் மாற்றி, அவர் புலன் விசாரனை செய்து விசாரனையை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றம் உத்திரவிட்டது. மேலும் இவ்வழக்கில் திண்டிவனம் போலீசார் குற்றவாளிகளுக்கு சாதகமாக மிகவும் காலங்கடந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளதையும் தனது தீர்ப்பில் நீதிபதி எம்.ஜெயபால் குறிப்பிட்டுள்ளார்.

No comments: