Tuesday, August 19, 2025

படித்தவர்கள் ஏன் வேலையின்றி இருக்கின்றனர்?

 படித்தவர்கள் ஏன் வேலையின்றி இருக்கின்றனர்?



இந்தியாவில் உயர் கல்வி முடித்த இளைஞர்​களில் (15-29 வயது) 59.6 சதவீதம் பேருக்கு வேலை கிடைக்க​வில்லை என சமீபத்திய புள்ளி​விவரம் சுட்டிக்​காட்டு​கிறது.
இந்தியாவில் வேலையின்​மைக்குக் காரணம் தனிநபர்​களிடம் வேலைவாய்ப்பைப் பெறுவதற்குப் போதுமான / தேவையான திறன்கள் (Skills) இல்லாததுதான் என்கிற கருத்து நிலவு​கிறது. மத்திய மாநில அரசுகளும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி​களுக்​காகப் பெருமளவில் செலவிடு​கின்றன.
உயர் கல்வி நிறுவனங்​களில் பயிற்று​விக்​கப்​படும் பாடத்​திட்டம் தொழில் துறைக்குப் பொருத்தமானவர்களை உருவாக்கும் அளவுக்கு இல்லை எனவும், தொழில் துறையின் தேவைகளுக்கு ஏற்பப் பயிற்று​விப்​ப​தற்குத் தங்களைப் பேராசிரியர்கள் புதுப்​பித்​துக்​கொள்​வ​தில்லை என்றும் விமர்​சனங்கள் முன்வைக்​கப்​படு​கின்றன.
இந்தியாவில் வேலையின்மை அதிகரித்​திருப்​ப​தற்குக் கல்வி நிறுவனங்​களில் / கற்பித்​தலில் உள்ள குறைபாடு​கள்தான் முதன்மைக் காரணமா என்கிற கேள்விக்கு விடை காண்பது அவசியம். அதற்குச் சுதந்திர இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்​புக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்து​கொள்வது அவசியம்.
2000ஆம் ஆண்டு கணக்குப்படி உயர்கல்வி முடித்த இளைஞர்​களில் 22.9% பேருக்கு வேலை கிடைக்க​வில்லை. அடுத்த 20 ஆண்டு​களில் இது பல மடங்கு உயர்ந்து 59.63% ஆக உள்ளது என்கின்றன சமீபத்திய புள்ளி​விவரங்கள்.
10ஆம் வகுப்புத் தேர்ச்சியைத் தகுதி​யாகக் கொண்ட தமிழக அரசின் குரூப்- 4 பணியிடங்​களுக்கான தேர்வுக்கு முனைவர் பட்டம் பெற்ற 994 பேரும், எம்.ஃபில். பட்டம் பெற்ற 23,000 பேரும், முதுகலைப் பட்டம் பெற்ற 2.5 லட்சம் பேரும், 2018ஆம் ஆண்டில் விண்ணப்​பித்​துள்ளனர்.
இறுதி​யாக... 75 ஆண்டு காலப் பொருளாதார வளர்ச்சிக்குப் பிறகும் ஒட்டுமொத்தத் தொழிலா​ளர்​களில் 40% பேர் வேளாண்மைப் பணிகளில் ஈடுபட்டு​வரு​கின்​றனர். படித்​தவர்கள் பணியில் சேர வாய்ப்புள்ள இடமாகக் கருதப்பட்ட உற்பத்தித் துறையில் 11% பேர் மட்டுமே பணிபுரி​கின்​றனர்.
மேலும் ஒட்டுமொத்தத் தொழிலா​ளர்​களில் 90% பேர் முறைசாராத் (informal) தொழிலா​ளர்​களாகவே உள்ளனர். மேலே உள்ள புள்ளி​விவரங்களை அடிப்​படையாக வைத்துப் பார்க்​கும்​போது, இந்தியாவில் படித்​தவர்கள் வேலையின்றி இருப்​ப​தற்கும் திறன் பற்றாக்​குறைக்கும் தொடர்​பில்லை என்கிற முடிவுக்கே வர வேண்டி​யுள்ளது.
கல்வியின் நோக்கம், நீதியான, சமத்துவமான சமூகத்தை உருவாக்கு​வது​தான். பன்முக ஆற்றல் கொண்ட குடிமக்​களைத் தயார்​படுத்து​வதுதான் கல்வி நிலையங்​களின் முதன்​மையான பணி. அதை நம் கல்வி நிலையங்கள் சரியாகச் செய்ய​வில்லை என்கிற விமர்​சனத்தை வைப்பதுதான் சரியாக இருக்​கும்.
- 09.07.25, இந்து தமிழ் திசையில் அ.ப.அருண் கண்ணன்

No comments: