திண்டிவனம் வழக்கறிஞர் சங்கங்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு வேண்டுகோள்!!
திண்டிவனம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட பிரதிநிதியும் வழக்கறிஞருமான எம்.டி.முத்து, தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து நீதி மன்றப் புறக்கணிப்பு நடத்த வழக்கறிஞர்கள் சங்கத்தில் மனு அளித்துள்ளதாக கேள்வி. இந்நிலையில்
திண்டிவனம் வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு இந்த வேண்டுகோள்.
1. பட்டணம் பழங்குடி இருளர் குடியிருப்பில் உள்ள எல்லம்மாள் என்பவருக்குச் சொந்தமான இடத்தினை, வழக்கறிஞர் எம்.டி.முத்து, தனது ஆதரவாளர்கள் 20 பேருடன் ஆக்கிரமிக்க ஜே.சி.பி-யுடன் சென்று, அங்கிருந்த இருளர்களை மிரட்டி, அச்சுறுத்தி, கொலை மிரட்டல் விடுத்து, தாக்கியது உட்பட அனைத்தும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
2. பாதிக்கப்பட்ட இருளர்களிடம் ரோசனை போலீசார் எழுதி வாங்கிய புகாரில் எம்.டி.முத்து உள்ளிட்ட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 4 பேரை கைது செய்துள்ளனர்.
3. இதனை பஞ்சாயத்துப் பேசி முடிக்கவில்லை என பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்யாணி என்கிற பிரபா கல்விமணிக்கு வாட்ஸ் ஆப் குரல் பதிவு மூலம், “நான் சும்மா இருந்தாலும்.. என் ஆதரவாளர்கள், ரசிகர்கள் சும்மா இருக்கமாட்டார்கள்” என்று எம்.டி.முத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
4. இதனை எம்.டி.முத்து அவரது செல்பேசியிலிருந்து, பேராசிரியர் கல்விமணியின் செல்பேசிக்கு இரண்டு குரல் பதிவாக அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவர், வழக்கறிஞராக பதிவு செய்துள்ளார் என்பதற்காக, அவருக்கு ஆதரவாக நீதிமன்றப் புறக்கணிப்பு செய்வது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காகவே இவ்வேண்டுகோளை முன் வைக்கின்றேன்.
குற்றச்செயலில் யார் ஈடுபட்டாலும் வழக்குப் பதிவு செய்யலாம் என்பதுதான் சட்டம். எவருக்கும் விதிவிலக்கு இல்லை. ஒருவேளை பொய் வழக்கு எனில் அவ்வழக்கினை நீதிமன்றத்தில் எதிர்கொள்வதுதான் நல்ல முன்னுதாரணமாக அமையும்.
அதுவும் எம்.டி.முத்து மீதான வழக்கினைப் பொறுத்த வரையில், அவர் குற்றச் செயலில் ஈடுப்பட்டுள்ளார் என்பதற்கு நேரடி ஆதாரங்களும், சம்பவ சாட்சிகளும் வீடியோ பதிவாக உள்ளது. அதுவும் அவரே கொலை மிரட்டல் விடுத்து, அவரது செல்பேசியில் இருந்து அனுப்பிய குரல் பதிவும் ஆதாரங்களாக உள்ளது.
இதனை நேர்மையான முறையில் சட்ட ரீதியாக அணுகும்படி திரு எம்.டி.முத்து அவர்களுக்கு அறிவுறுத்தி வழிகாட்டும்படியும், நீதிமன்ற புறக்கணிப்பை கைவிடும்படியும் திண்டிவனம் வழக்கறிஞர்களுக்கும், வழக்கறிஞர்கள் சங்கங்களையும் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
இவன்,
முருகப்பன் ராமசாமி,
மனித உரிமை செயற்பாட்டாளர்,
திண்டிவனம்.
03.10.2024
No comments:
Post a Comment