Friday, October 18, 2024

மழை செய்தி : காட்சி ஊடகங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்?



பருவ மழை செய்திகளை காட்சி ஊடகங்கள் வெளியிடுவது குறித்து ஒரு வழிகாட்டுதல் உருவாக்கி நடைமுறைப்படுத்துவது அவசியம் என்று தோன்றுகின்றது. இப்போதாவது இதற்கான முயற்சிகளை முன்னெடுப்போம்.

பருவ மழை அவசியம் தேவை என்பதை அனைவரும் அறிவோம். மழையின் போது நீர் தேங்குவதும் அதன் அளவைப் பொறுத்து வடிவதும் இயல்பான போக்கு. ஒருவேளை அதிக மழை பெய்தால் தேங்கும் தண்ணீரின் அளவைப் பொறுத்து, அதன் வேகத்திற்கு ஏற்ப வடிய காலம் எடுக்கும். இதுவும் அனைவருக்கும் தெரிந்ததுதான். யாருக்கும் புரியாதது அல்ல.
தேங்கிய நீர் காலங் கடந்தும் வடியாமல் இருந்தால் அதற்கு வடிகால் இல்லை என்பதும் அந்த வழிகள் மனிதர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, மறிக்கப்பட்டு, மறைக்கப்பட்டுள்ளது என்பதும் நாம் அறிந்தது.
இந்நிலையில் மழை வர வாய்ப்புள்ளது என வானிலை அறிக்கை கூறிய உடனே காட்சி ஊடகங்கள் ஏதோ பெரிய போர் வருவது போன்றும், இதற்குப் பின் மனிதர்கள் யாரும் உயிரோடு இருக்கப்போவதில்லை என்பது போன்றும், வரும் மழை மனித இனத்தையே கொன்றழிக்கப் போகின்றது என்பது போலவும், இதனைத் தாண்டி எப்படி யார் உயிரோடு இருக்கமுடியும் என்பதைப் போன்று
செய்திகளை உருவாக்கி, வெளியிட்டு, அச்சமும் பீதியும் உருவாக்கி வருகின்றனர்.
யாராலும் கற்பனையாக நினைத்துப் பார்க்கமுடியாத வகையில், ‘’தப்பிக்குமா?’’ என்ற வகையில் மிகைப்படுத்தி, செய்திகளை வெளியிடுவது பொது அமைதியை சீர்குலைக்கும் ஒன்றாக உருமாறுகின்றது.
பருவ மழை காலம், காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது, மழை பெய்தது என ஒரு செய்தியாக மட்டுமே வெளியிடுவதுதான் நாகரீகப் பண்பு, நடைமுறை.
ஒருவேளை அதற்கும் மேலாக விரிவான செய்திகள் வெளியிட விரும்பினால், மழை நீர் வடியாமலிருக்கும் இடத்தில், ஏன் வடியாமல் தேங்கி நிற்கிறது,
யார் காரணம், என்ன காரணம்,
நீர் வரத்து மற்றும் வடிகால் பகுதிகளை யார் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்பதை வெளியிடுவதுதான் நெறிமுறை மற்றும் மதிப்புடையதாக (Ethics and Value) இருக்கும்.
இதுதான் பொது நலம் பயக்கும். அதுதான் அக்கறை உள்ளது என்பதை வெளிப்படுத்தும்.
மழை குறித்த செய்திகள்தான் வெளியிட வேண்டும் எனில்,
மிக அதிக கன மழை பெய்தாலும் தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஏரி, குளம், ஓடை, குட்டை மற்றும் ஆறு போன்றவைகளில் ஏன் தண்ணீர் வருவதில்லை, இந்த நீர் பிடிப்பு அல்லது நீர் சேமிப்பு பகுதிகளுக்கு வரவேண்டிய தண்ணீர் எங்கே போனது, ஏன் வராமல் தடைபடுகிறது என்று ஆய்வு செய்திகளை வெளியிடலாம்.
இது நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் மனித வாழ்வுக்கும் அவசியமான அடிப்படையான ஒன்று.
மேலும்மழை நீரை எப்படி சேமித்து கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டை போக்கலாம் என்ற ஆய்வுகளையும் வழிகாட்டுதல்களையும் வெளியிடலாம்

No comments: