Tuesday, September 17, 2024

வாழை

வாழை 
எல்லோரையும் நினைவுகளுடன் வாழ வைத்துக்கொண்டிருக்கின்றது. 




ஒப்பாரி வடிவத்திலான ஒரு பாடலை, படத்தின் இறுதிக் காட்சியாக வைக்க பெரும் துணிச்சல் வேண்டும். மாரி செல்வாராஜுக்கு அத்துணிச்சலும் இருந்தது, நம்பிக்கையும் இருந்ததுள்ளது. நம்பிக்கை இருந்தால்தான், துணிச்சல் வரும். 

எழுத்து போட்டபிறகும் யாரும் எழுந்து போகவில்லை, படத்தில் அனைவரும் ஆழ்ந்திருந்தனர் என்று படம் வெளியானதும் பலரும் கூறினர். அப்படி எழுந்துபோகாமல் இருந்ததற்கு காரணம் பாடல்தான். பாடல்தான் எழுந்துபோகவிடாமல் எல்லோரையும் உட்கார வைத்திருந்தது. 

இறந்த உடல்கள் அல்லது சிவனைந்தன் சாப்பாடு போட்டுக்கொண்டும் சாப்பிட முடியாமல் போன காட்சியோடு படத்தினை முடித்திருக்கலாம். முடிந்துவிட்டது. 

ஆனால், ஆழமான இந்தப் பாடல்தான் படத்தின் முழுமையை மனதில் கடத்தியுள்ளது. அந்தப் பாடல் கொடுத்த கனமான அழுத்தங்களை, தங்களுடைய, தங்களுக்கு தெரிந்தவர்கள், வேண்டியவர்களின் வாழ்க்கையை, வாழ்க்கையில் நடந்தவைகளை பொருத்தி பார்த்து ஒன்றிவிட்டனர். அந்தப் பாதிப்பிலிருந்து உடனடியாக மீண்டுவரமுடியாமல்தான் அனைவரும் அமைதியில் ஆழ்ந்துவிட்டனர். அதனால்தான் எழுத்துப் போட்டபிறகும் யாரும் எழுந்துபோகாமல் இருந்தனர்.

இன்றைய ஊடக மற்றும் சமூக ஊடகங்கள் Trend Setting ஐ உருவாக்குகின்றன என்பார்கள். அப்படி திரையுலகில் தற்போது பா.ரஞ்சித் ஒரு Trend Setting ஐ உருவாக்கியுள்ளார். அதன் தொடர்ச்சிதான் மாரி செல்வராஜ். இவர்களின் படங்கள் சமூகத்தில் பெரும் விவாதங்களை உருவாக்குகின்றது.

காரணம், இப்படங்கள் சமூக, அரசியல், பொருளாதாரம் குறித்துப் பேசுகின்றன. அதிலுள்ள ஆதிக்கம் குறித்துப் பேசுகின்றன. சமூக, அரசியல், பொருளாதார விடுதலை, சுதந்திரம் குறித்துப் பேசுகின்றன. இவைகளில் ஆதிக்கம் செய்துகொண்டிருப்பவர்கள் இதனை விரும்புவதில்லை. எங்கே ஆதிக்கம் கைவிட்டுப் போய்விடமோ என்ற பதட்டத்தில் எதிர்த்துப் பேசி புலம்புகின்றனர். 

இந்நிலையில் வாழை மற்றும் ஜமா திரைப்படங்கள் தொடர்பான இக்கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்துகின்ற அண்ணன் இரவி கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும் தெரிவித்துக்கொள்கிறேன். 

நான் வாழை படம் குறித்து எனது பார்வையையும் கருத்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு முன்பாக பேசியவர்கள் திரைப்படங்கள் குறித்த நுணுக்கான பார்வையினை முன் வைத்தார்கள். அவர்கள் அளவிற்கு என்னால் பேசமுடியாது. ஆனாலும், நான் என்னுடைய பார்வையிலிருந்து சில கருத்துகளை பகிர்ந்துகொள்கிறேன். 

படத்தில் பள்ளி மற்றும் கல்வி குறித்த இருகாட்சிகள் முக்கியமானதாக நினைக்கின்றேன். இந்றை சூழலில் பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் உறவு சுமூகமானதாக இல்லை. மாணவர்களுக்குள் இருக்கும் உறவும் மோசமான நிலையில் உள்ளது. இதனை சரி செய்யவேண்டும் என்பதற்காகத்தான் நீதியரசர் சந்துரு தலைமையில் குழு அமைத்தது தமிழக அரசு. 

இப்படத்தில் ஒன்றிரண்டு காட்சிகளே உள்ள, அன்பும் அக்கறையும் கொண்ட ஆசிரியர் மாணவர் உறவு வரவேற்றுப் பேசப்படும் அதே நேரத்தில், சரியான புரிதல் இல்லாமல் கொச்சையாகவும் இழிவுபடுத்தியும் அதிகம் பேசப்படுகின்றது. மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாளை பார்த்தவர்களுக்குப் புரியும், அவரது வாழ்வில் பெண் ஆசிரியர் என்பவர் அவரின் மகிழ்ச்சிகான ஒரு தேவதை டீச்சர் என்பது. அப்படித்தான் இந்தப் படத்திலும். இது குறித்த புரிதல் இல்லாமல் கூறப்படும் கருத்துகள், நமக்கு பாலியல் கல்வி, பாலியல் குறித்த பார்வை புரிதல் தேவை என்பதை உணர்த்துகின்றது என்றே நான் நினைக்கின்றேன். 

பள்ளி ஆண்டு விழாவிற்கு ஒரு பாடல் பயிற்சி எடுக்கும் காட்சி அதிகம் பரவியுள்ளது. அதிகம் trending ம் ஆகியுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான அரசு பள்ளிகளும் இன்று இப்படித்தான் உள்ளது. பள்ளிக் கல்வித் துறை பள்ளிகளில் கலைத்திருவிழாக்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. அடுத்ததாக, நான் முன்பே சொன்னது போன்ற Trend setting குறித்து இப்போது மேலும் கொஞ்சம் சொல்லலாம் என நினைக்கின்றேன். 

அண்ணா, கலைஞர் தங்களது திரைப்படங்கள் மூலம் ஒரு Trend setting உருவாக்கினார்கள். அதாவது சமூக நீதி, திராவிட இயக்கம் கொள்கை போன்றவைகளை மையமாகக் கொண்ட படங்களை உருவாக்கினார்கள். தமிழ்த் திரையுலகில் பராசக்தி படத்தைப் பேசாதவர்கள் யாரும் இருக்கமுடியாது. அதன்பிறகு பல்வேறு தரப்பிலான படங்கள் உருவாகின.

குறிப்பாக முன்பெல்லாம் கோவை, பொள்ளாச்சி, மதுரை, நெல்லை போன்ற பகுதிகளைக் கொண்ட படங்களாக வெளியாகின. நான் மதுரைக் காரண்டா, நான் கோயம்புத்தூர்காரண்டா, கோயம்புத்தூர் குசும்பு என்றால்லாம் அப்படங்கள் பேசின. அந்தப் படங்கள் எல்லாம் சாதியப் பெருமை என்ற பெயரில் ஆதிக்கம், அடிமைத்தனங்கள், ஒடுக்குமுறைகள் குறித்தேப் பேசின. அந்தப் படங்களில் எல்லாம் ஊர்த்தெருக்களே இருந்தன. பெண்களை எல்லாம் எப்படி காட்டினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். 

தொடர்ச்சியாக இப்படியான படங்களே வந்த நிலையில், இன்று சூழல் மாறியுள்ளது. காரணம் பா.ரஞ்சித். தற்போது திரையுலகில் பா.ரஞ்சித் ஒரு புதிய Trend Setting ஐ உருவாக்கியுள்ளார். மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் இதனை தொடர்கின்றனர். இவர்களின் படங்களில் வன்கொடுமை, சாதியச் சிக்கல்கள், சாதி தாண்டிய உறவுகள், சமத்துவ சிந்தனைகள், கல்வி, இழைக்கப்படும் அநீதி, அதற்குத் தேவையான நீதி, உரிமைகள் குறித்து பேசுகின்றன. புதிய அடையாளங்களை உருவாக்கின்றன. 

குறிப்பாக மாரி செல்வராஜ் இந்த வாழை படத்தில் மட்டுமல்லாமல், முந்தையப் படங்களிலும் புலியங்குளம்தான் வாழ்விடமாக காட்டுகிறார். அது அவர் வாழ்ந்த இடம். 

வாழையை பல பார்வையோடு அணுகலாம். நம் ஒவ்வொருக்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் ஒரு பார்வை இருக்கவேண்டும். Perspective என்கிற இந்தப் பார்வை வாழ்க்கையில் ரொம்ப முக்கியம். இந்தப் பார்வை என்கிற கண்ணோட்டம்தான் நாம் யாராக இருக்கிறோம், நாம் யாருக்காக இருக்கின்றோம், என்ன செய்கின்றோம், எப்படி செய்கின்றோம், நாம் எப்படி இந்த சமூகத்தில் அடையாளப்படுத்தபட்டுள்ளோம் என்பதற்கெல்லாம் இந்தப் பார்வைதான் முக்கியம். நம்முடைய பார்வை எப்போதும் பாதிக்கப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர் பக்கமிருந்து சமத்துவத்திற்கானதாக இருக்கவேண்டும்.

வாழைப் படத்தை அன்றாடக் கூலி, வாழைத் தாரு, குழந்தைத் தொழிலாளர், கூலி உயர்வு, உழைப்பு சுரண்டல், பசி, காதல், குடும்ப வறுமை, வட்டி, ஏஜண்டு, முதலாளி, விபத்து, மரணம், பள்ளி, நட்பு, ஆசிரியை, மாணவர் என எந்தவொரு பார்வையிலிருந்து இப்படத்தை அணுகலாம். பார்க்கலாம். பேசலாம். தொடரலாம். 

நான் என் பார்வையில் ஒன்றை மையமாகக் கொண்டு இப்படத்தை அணுகுவதைக் குறிப்பிட விரும்புகிறேன். நம் அனைவருக்கும் இப்பார்வை தேவை என்று நான் நினைக்கின்றேன். 

விபத்தில் 20 பேர் மரணம் என ஒரு செய்தித்தாள் வந்த செய்தியை படத்தில் மாரி காட்டுவார். அந்த சின்ன செய்திக்குப் பின்னால், அந்த விபத்துக்குப் பின்னால் இவ்வளவு பேரின் பெரிய வாழ்க்கை உள்ளது என்பதுதான் படம். அந்த செய்திக்குப் பின்னால்தான் பசி, உழைப்பு, கூலி, காதல், பள்ளி, தேவதை ஆசிரியர், கமல், ரஜினி ரசிகர், நட்பு என எல்லாம் உள்ளது. இந்த செய்திக்குப் பின்னால்தான் சிவனைந்தன் உயிர் பிழைத்தும் உள்ளது. அந்த செய்திக்குப் பின்னால்தான் இவை எல்லாம்தான் உள்ளன. இந்தப் படம் தனது சொந்தக் கதை என்றும், சிறுவன் சிவனந்தைதான் நான் என்றும் மாரி கூறியுள்ளார். 

ஒரு செய்தித்தாளில் ஏதோ ஒரு பக்கத்தில் பெரிதும் கவனத்தை ஈர்க்காத, வரும் செய்திக்குப் பின்னால் இப்படியான வாழ்க்கை உள்ளதை வாழை மூலம் மாரி செல்வராஜால்தான் சொல்லமுடிந்தது. 

நாள்தோறும் இப்படியான செய்திகள் நிறைய வருகிறது. நாம் அதனை வெறும் செய்தியாகவே கடந்து சென்று விடுகிறோம். செய்திகளில் வருவது வெறும் பெயர் அல்ல, மனிதர்கள், அவர்களுக்கும் வாழ்க்கை உள்ளது என்பதை உணர்ந்தவர் மாரி செல்வராஜ். அதுதான் வாழை. 

சாலையோரத்தில் ஒரு உடல் கிடந்த செய்தியை நூல் பிடித்துச் சென்றதுதான் ஜெய்பீம் அதுதான் ராஜாக்கண்ணு. 

காதலர்களை பெற்றோர்களே விஷம் கொடுத்துக் கொன்றனர் என்பதுதான் முருகேசன், கண்ணகி குறித்த முதல் செய்தி. வேறு ஏதோ நடந்துள்ளது என பின் தொடர்ந்து சென்றார் நக்கீரன் செய்தியாளர் சேகர். கண்ணகியின் தந்தையும் அண்ணனும் சேர்ந்து கண்ணகியை உயிரோடு கொளுத்தியதுடன். முருகேசனின் பெற்றோர்களை மரத்தில் கட்டிவைத்து விட்டு, முருகேசனையும் கொலை செய்துள்ளனர் என்ற உண்மையை வெளிக்கொண்டுவந்தார். அதன் பிறகுதான் இந்தக் கொலையின் உண்மைகள் வெளியில் தெரிந்தது. 

செய்திக்குப் பின்னால் மறைக்கப்பட்ட உண்மைகள் இருக்கலாம். வெளியில் வராத வாழ்க்கை இருக்கலாம். எந்தவொரு செய்திக்கும் பின்னாலும் இப்படியான வாழ்க்கை இருக்கும் என்ற பார்வையை எல்லாருக்கும் வழங்கியுள்ளது வாழை. 

ராஜேஷ்குமார் போன்றோர், இதுபோன்ற செய்திகளே தாங்கள் கற்பனையான கிரைம் கதை எழுத உதவியாக உள்ளது என்கிறார்கள். இப்படி கற்பனையானதாகவும் இருக்கலாம். இல்லை ஒரு செய்தியாளன், சமூக அக்கறையுள்ளவனின் மானுடத் தேடலாக இருக்கலாம். 

ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் வர்க்கம் உள்ளது. ஒவ்வொரு செயலிலும் அரசியல் உள்ளது என்பார்கள். இங்கு அரசியல் இல்லாமல் இல்லாமல் எதுவும் இல்லை. பல மரணங்கள், விபத்துகள், வன்கொடுமைகள் செய்தியாகக் கூட வராமல் உள்ளது. 

ஒரு சம்பவம், ஒரு நிகழ்வு செய்தியாக வருவதற்கும் அரசியல் உள்ளது. வராமல் இருப்பதற்கும் அரசியல் உள்ளது. நாம்தான் தேடிச் செல்லவேண்டும். 

அறிந்ததை, கிடைத்ததை சொல்லவேண்டும். அதையும் உண்மையோடு சொல்லவேண்டும். அதனை அனுபவித்து எதிர்கொண்டு வாழ்ந்த மனிதர்களின் முன்னிறுத்தி, அவர்களின் வாழ்க்கையோடு சொல்லவேண்டும். அப்படித்தான் வாழை சொல்லியுள்ளது. அதனால்தான் எல்லோர் மனதிலும் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

வாழை தனது சொந்தக் கதை என்று மாரி சொன்னதற்கும், திரையில் அவர் காட்டிய அந்த விபத்துச் செய்தி கூடுதல் அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. அந்த உண்மைத் தன்மைதான் எல்லோரையும் கொண்டாட வைக்கின்றது. 

(15.09.24 மாலை விழுப்புரத்தில் அண்ணன் இரவி கார்த்திகேயன் அவர்கள் ஒருங்கிணைப்பில் #வாழை #ஜமா ஆகிய இரு படங்கள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. வாழை படம் குறித்து நான் கூறிய கருத்துகள்)





No comments: