பள்ளிக்கல்வி தொடர்பாக தொடர்ந்து அறிவிப்புகளும், தகவல்களும் வந்தபடியே உள்ளன. 1 ம் தேதி பள்ளிகள் திறப்பு என்பது ஏறக்குறைய 100% முடிவானது போன்றுள்ளது. நல்லது. இந்நிலையில், 20 மாதங்களுக்குப் பிறகான பள்ளிகள் திறப்பு குறித்த வழிகாட்டுதல்கள் இன்னும் முறையாக அறிவிக்கப்படவில்லை என நினைக்கின்றேன்.
ஊரடங்கு தொடங்கிய ஒன்றிரண்டு மாதங்களுக்குப் பிறகு, குழந்தைகள் சலிப்பான மனநிலையிலிருந்து விடுபட்டு, பள்ளிகள் மறந்த தற்போதைய சூழலுக்கு மிகவும் பழகியிருப்பார்கள்.
1ம் தேதி பள்ளித் திறப்பை, ஏதோ, சனி, ஞாயிறு விடுமுறைக்கு பிறகு திங்களன்று பள்ளி திறப்பதைப் போன்று அரசு | கல்வித்துறை கருதி விடக்கூடாது.
20 மாதங்கள் குழந்தைகள் கட்டுபாடுகள் இன்றி, சுதந்திரமாக, இயல்பாக இருந்திருப்பார்கள். அதனால், பள்ளிகள் திறந்த அன்றே பாடம், புத்தகம், குறிப்பேடு, படிப்பு, வீட்டு பாடம் என்றில்லாமல், குழந்தைகளை நிறைய பேசவைத்து எல்லோருடனும் சகஜமாக பழக வைக்க வேண்டும். பள்ளிச் சூழலுக்கு அவர்கள் இயல்பாக பழக வேண்டும். சுமையாகவோ, தொந்திரவாகவோ நினைத்து விடக்கூடாது.
குறைந்தபட்சம் 1 முதல் 5 வகுப்பு வரையுள்ள குழந்தைகளுக்கு ஒன்றிரண்டு மாதங்களுக்கு முழு நாளும் பள்ளி இல்லாமல், பள்ளி வேலை நேரத்தைக் குறைக்கலாம்.
No comments:
Post a Comment