"மனிதனுக்கு உண்மையான வலுவுள்ள கருவி கத்தியும் துப்பாக்கியும் அல்ல. தன்னுடைய நினைப்பும், பேச்சும் செய்கையும் நேர்மையானவை என்று தனக்குள் தானே நம்பி உணர்ந்து பெருமைபடுகிற பெருமிதம் தான் அவனுடைய மெய்யான வலிமை."
"பழக்கப்பட்டு விட்ட மனிதனால் ருசிகளில் எப்போதுமே ஏமாற முடிவதில்லை. இன்னொருவர் மேல் நாம் வைக்கிற நம்பிக்கை அல்லது இன்னொருவர் நம் மேல் வைக்கிற நம்பிக்கை - பிரியம், அன்பு, அநுதாபம், ஆதரவு - இவையெல்லாம் கூட வாழ்க்கையில் மனிதன் கண்டு விட்ட மனத்தின் உணர்ச்சி பூர்வமான ருசிதான்".
"நம் மனத்தை நாம் எப்போது அதிகமாகப் பிறருக்கு ஒளித்து விட முயல்கிறோமோ அப்போதுதான் அது அவர்களுக்கு நன்றாகத் தெரிந்து விடுகிறது"
"வாழ்க்கை எந்த மூலையிலோ அழுகியிருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் எந்த இடத்திலிருந்து அழுகத் தொடங்கியிருக்கிறது என்பதுதான் சரியாகத் தெரியவில்லை. அரசியலிலா, சமுகப் பிரச்னைகளிலா, மதத்திலா, ஒழுக்கத்திலா, எங்கு அழுகத் தொடங்கியிருக்கிற தென்பது மட்டும் தெளிவாக விளங்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இந்த அழுகல் எந்த இடத்தில் தொடங்கி இருக்கிறதோ அந்த இடத்தோடு அப்படியே நின்றுவிடாது. அழுகல் முழுவதும் பரவினால்தான் கெடுதல் என்பதில்லை. அழுக ஆரம்பித்து விட்டது என்பதே கெடுதல் தான். இந்த அழுகலைப் பார்த்து மனம் கொதித்துச் சமூகத்தின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் நியாயத்தையும் உண்மையையும் அணுக வேண்டுமென்று..."
'மனிதனின் மனத்தை அவனறியாமலே திறப்பதற்குப் பிறர் பயன்படுத்துகிற சுலபமான கள்ளச் சாவி, முகமன் வார்த்தைகள் தான்'
- நெற்றிக்கண் நாவலில் நா.பார்த்தசாரதி
"........சிதம்பரத்துக்கு அருகில் கவரப்பட்டு என்ற கடற்கரைக்கோ, சரக்குக் கடத்திவர அத்தனை 'ரதங்களும்' புறப்பட்டுப் போயிருப்பதாக அர்த்தம்...." நா.பா. எழுதியுள்ள நெற்றிக்கண் நாவலில் வரும் ஒருவரி இது.
தமிழக அரசியலைக் கவனித்துக் கொண்டிப்பவர்களுக்கு கவரப்பட்டு என்பதை விட, "வாண்டையார்" என்று சொன்னால் நன்கு தெரியும். சிதம்பரம் அருகே உள்ள இந்தக் கவரப்பட்டு என்கிற கிராமம் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளிலும் இன்றும் வாண்டையார்கள் ஆதிக்கம் உள்ளது. வாண்டையார்கள் விரும்புவர்கள் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்க முடியும். மீறி நிற்க விரும்பினாலும் அவர்களது வீட்டிற்கு அழைத்து அன்பாகக் கூறுவது போல் மிரட்டுவார்கள். இவர்களது ஆதிக்கம்வெறும் அதிகாரத்திலானது மட்டுமல்ல, சாதி ஆதிக்கத்தையும் கடைபிடிப்பவர்களாகும்.
வாண்டையார்கள் இப்படி அரசியல் மற்றும் சாதி ஆதிக்கம் கொண்டவர்களாக இப்பதற்கு கடத்தல்தான் முழுநேர தொழிலாக இருந்துள்ளது. இக்கடத்தல் தொடர்பாக இன்றும் அப்பகுதியில் உள்ள பலரும் பல கதைகள் சொல்கிறார்கள்.
அநேகமாக நா.பா அவர்கள் 1965 வாக்கில் இந்த நாவலை எழுதியிருப்பார் என நினைக்கிறேன். அப்போது கவரப்பட்டு குறித்து குறிப்பிட்டுள்ளார் என்பது ஆச்சரியமாக உள்ளது. கார்களைத்தான் ரதங்கள் என குறிப்பிட்டுள்ளார்.
- நெற்றிக்கண் நாவலில் நா.பார்த்தசாரதி
No comments:
Post a Comment