மயிலம் காவல் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் அவர்களைக் கண்டித்து தொடர்ந்து ஆர்பாட்டம் - பொதுக்கூட்டங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------
திண்டிவனம் பேராசிரியர் பிரபா கல்விமணி @ கல்யாணி, இரா.முருகப்பன் இருவரையும் மனிதாபிமானமற்ற முறையில் மூர்க்கத் தனமாக நடத்தி, பொய் வழக்கில் கைது செய்த மயிலம் காவல் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் மீது நடவடிக்கை எடுக்கக்கோருதல் தொடர்பாக இன்று 19.05.2019 காலை திண்டிவனத்தில் அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு பொருளாளர் தி.அ.நசீர் அகமது தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்க தலைவர் ப.இளங்கோவன் அனைவரையும் வரவேற்றார். சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மு.பூபால் கூட்டத்தை ஒருங்கிணைத்தார். ந.க.மே.கு.செயலாளர் இரா.முருகப்பன் நன்றியுரை கூறினார்.
அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்களிலிருந்து 78 பேர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்
1. பழங்குடி இருளர் மோகன் என்பவரை காவல் நிலையத்தில் சித்திரவதை செய்ததோடு, பாதிக்கப்பட்டவருக்கு உதவிய பேராசிரியர் பிரபா கல்விமணி, இரா.முருகப்பன் இருவரையும் மூர்க்கத்தனமான முறையில் பொய் வழக்கில் கைது செய்து அத்துமீறலில் ஈடுபட்ட மயிலம் காவல் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் அவர்களின் மனிதத்தன்மையற்ற செயலைக் இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
2. அத்துமீறலில் ஈடுபட்ட மயிலம் காவல் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் மீது வழக்குப் பதிவு செய்து, சி.பி.சி.ஐ.டி புலன் விசாரணைக்கு உத்திரவிடவேண்டும்.
3. விசாரணை என்ற பெயரில் நடைபெறும் காவல் நிலைய சித்திரவதைகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும்.
4. மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 31.05.2019 அன்று மயிலத்தில் கண்டன ஆர்பாட்டம் நடத்துவது என்றும், 15.06.2019 அன்று திண்டிவனத்தில் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களை வைத்து கண்டன பொதுக்கூட்டம் நடத்துவது என்றும், 30.06.2019 அன்று அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்கள் பங்கேற்கும் கண்டனப் பொதுக்கூட்டத்தை விழுப்புரத்தில் நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
இவண்,ப.இளங்கோவன்.
தலைவர்.
சு.ஆறுமுகம்.
பொதுச் செயலாளர்.
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்.
No comments:
Post a Comment