Monday, May 27, 2019

ஆலோசனைக் கூட்டம்

திண்டிவனம் பேராசிரியர் பிரபா கல்விமணி @ கல்யாணி, இரா.முருகப்பன் இருவரையும் மனிதாபிமானமற்ற முறையில் கைது செய்து, பொய் வழக்கு பதிவு செய்த 
மயிலம் காவல் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் மீது நடவடிக்கை எடுக்கக்கோருதல் தொடர்பாக 
ஆலோசனைக் கூட்டம்
---------------------------------------------------------------------------------------------------
நாள் : 19.05.2019, காலை 10.00 மணி
இடம் : பி.கே.மஹால், காந்தி சிலை அருகி, திண்டிவனம்.
------------------------------------------------------------------------------------------------------------
அன்புடையீர் வணக்கம். 
• வானூர் வட்டம் பொம்பூர் கிராமத்திலுள்ள பழங்குடி இருளர் தம்பதியினரான மோகன் – ரோஜா தங்களுக்குள் எழுந்த கருத்துவேறுபாடு காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். மோகன் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள செங்கல்சூளையிலும், ரோஜா புதுச்சேரி அருகே உள்ள செங்கல் சூளையிலும் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் பெரிய மகள் சுப்புலட்சுமி தாயிடமும், சிறிய மகள் சுபாஷினி தந்தையிடம் உள்ளனர்.

• கணவன் மோகன் சென்னை செல்லும்போது, பொம்பூர் வீட்டில் விட்டுச் சென்றிருந்த, இரு சக்கர வாகனத்தை, அதே ஊரைச் சேர்ந்த தங்களது உறவினர் மணிகண்டன் மூலமாக மனைவி ரோஜா எடுத்துச் சென்றுள்ளார்.
• 11.05.2019 அன்று சென்னையிலிருந்து பொம்பூர் வந்தனர் மோகனும், சுபாஷினியும். மறுநாள் 12.05.2019 அன்று மேற்படி மணிகண்டனின் இருசக்கர வாகனத்தை வாங்கிய மோகன், “என்னுடைய வண்டியை கொண்டுவந்து விட்டுவிட்டு உன்னுடைய வண்டியை வாங்கிக்கொள்” என்று கூறியுள்ளார்.
• மறுநாள் 13.05.2019 அன்று மாலை, அதே ஊரைச் சேர்ந்த பெரியண்ணன் த/பெ கிருஷ்ணமூர்த்தி கவுண்டர் என்பவர் மோகனை தாக்கிவிட்டு இரு சக்கர வாகனத்தை பிடுங்கியுள்ளார். தடுக்க முயன்ற மகள் சுபாஷினியையும் தாக்கியுள்ளார். அன்று இரவே, பெரியண்ணன் தூண்டுதலின் பேரில், ரோஜா கொடுத்த பொய்வழக்கின் பேரில் மயிலம் போலீசார் மோகனை கைது செய்துள்ளனர்.
• மறுநாள் 14.05.2019 அன்று மோகனின் 15 வயது மகள் சுபாஷினி தன்னையும், தனது தந்தையையும் தாக்கிய மேற்படி பெரியண்ணன் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நடவடிக்கை எடுக்கக்கோரி மயிலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றார். உதவி ஆய்வாளர் விவேகானந்தன் புகாரை வாங்காமல், மறுநாள் வரும்படி திருப்பி அனுப்பியுள்ளார்.
• இதற்கிடையே, 14.05.2019 அன்று பகல் 1.00 மணியளவில் மயிலம் காவல் நிலையத்தில் விசாரணை என்ற பெயரில், காவல் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் பழங்குடி இருளர் மோகனை கடுமையாகத் தடியால் தாக்கி, அடிக்கின்றார். காவல் நிலைய சித்திரவதையில் பாதிக்கப்பட்ட மோகன் அன்று இரவே திண்டிவனம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சையில் அனுமதிக்கப்படுகின்றார்.
• மேற்படி மோகன் போலீசாரால் பாதிக்கப்பட்டது தொடர்பாக புகாரினைத் தயாரித்துக்கொண்டு, மறுநாள் 15.05.2019 அன்று காலை 8.00 மணியளவில் பேராசிரியர் கல்யாணி, இரா.முருகப்பன் இருவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குச் சென்று, புகார் மனுக்களில் மோகனிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு 8.30 மணிக்கு மருத்துவமனையைவிட்டு வெளியில் வந்ததும், வாசலிலேயே பேராசிரியர் கல்யாணி, முருகப்பன் இருவரையும் மயிலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விவேகானந்தன் மற்றும் சீருடை அணியாத காவலர்களான வெங்கடேசன், அறிவுநிதி ஆகிய மூவரும் மனிதாபிமானமற்ற முறையில், மூர்க்கத்தனமான முறையில் கைது செய்து, அவர்கள் எடுத்துவந்திருந்த தனியார் காரில் தூக்கிப்போட்டுக்கொண்டு இழுத்துச் சென்றனர்.
• காலை 10.30 மணிவரை மயிலம் காவல் குடியிருப்பில் காரிலிருந்து இறங்கவிடாமல் அடைத்துவைத்திருந்து, 10.40 மணியளவில் மயிலம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பிறகு 11.30 மணியளவில் வழக்கு பதிவு செய்து, சொந்தப் பிணையில் இருவரையும் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் வெளியே அனுப்பினார்.
காவல் நிலைய சித்திரவதையால் பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர் மோகனுக்கு நீதி கிடைத்திட புகார் மனு எழுத உதவிய பேராசிரியர் கல்யாணி, இரா.முருகப்பன் இருவரையும் மூர்க்கத்தனமாக கைது செய்து, பொய் வழக்கு பதிவு செய்த மயிலம் காவல் உதவி ஆய்வாளர் விவேகானந்தன் மற்றும் இரு காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று ஆதரவளிக்க அன்போடு அழைக்கின்றோம்.
தி.அ.நசீர் அகமது மு.பூபால்
நகரக் கல்வி மக்கள் மேம்பாட்டுக்குழு
ப.இளங்கோவன். சு.ஆறுமுகம்.
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்.
---------------------------------------------------------------
நகரக் கல்வி மக்கள் மேம்பாட்டுக்குழு
பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம்
9443045315,, 9442622970, 9894207407


No comments: