நீட் தேர்வு
மையமும் சிறைச்சாலையும்
--------------------------------------------------------------
நாடு முழுவதும் 13,26,000 மாணவர்கள் நீட்
தேர்வினை எழுதினர். இதில் தமிழக மாணவர்கள் ஒரு லட்சத்து 7
ஆயிரத்து 288 பேர் தமிழ்நாட்டிலும்; 5,800 பேர்
கேரளம், கர்நாடகம், ராஜஸ்தான், சிக்கிம் ஆகிய பிறமாநிலங்களிலும் தேர்வு எழுதினர்.
இத்துடன் புதுச்சேரியில்
8,894 பேர் எழுதினர்.
மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத்
தேர்வு எழுத தமிழக அரசு ஓராண்டு விலக்கு பெற்றது.
கடந்த ஆண்டு
எவ்வளவு போராடியும் அனிதாவின் உயிர் இழந்ததுதான் மிச்சம். இந்த ஆண்டும் கேரளா
எர்ணாகுளத்தில் தேர்வு எழுதச் சென்ற மாணவனின் தந்தை இறந்துபோனதுடன்,
திரும்பும் வழியில் இரு மாணவனின் பெற்றோர் என மூன்று தந்தைகள் மரணமடைந்துள்ளனர்.
நீட் தேர்வு வேண்டாம், ரத்து
செய்யப்படவேண்டும் என்ற நிலையில் நீட் தேர்வையொட்டி உயிரிழப்புகள்
தொடரும் சூழலில் இந்தத் தேர்வு நடத்தப்படும் விதம் குறித்து சிலவற்றை பார்க்கவேண்டியுள்ளது.
மீறப்படும் குழந்தை உரிமைகள்.
நேற்று எர்ணாகுளத்தில்
உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடலை, அவரது மகனும், தேர்வெழுதிய மாணவனுமான கஸ்தூரி
மகாராஜாவிடம் ஒப்படைக்கப்படவில்லை. காரணம் மாணவனின் வயது 17 சிறுவன். அதனால்
அவர்களது உறவினரை வரவழைத்து உடலை ஒப்படைத்தனர். சர்வதேச சட்டங்கள்
மற்றும் ஐ.நாவின் குழந்தை உரிமைகள் உடன்படிக்கை படி 18 வயதுக்கு கீழானவர்கள் குழந்தைகள்
ஆகும். இதனை ஏற்று உடன்படிக்கைளில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது.
இந்தியாவிலும் 18 வயதுவரை குழந்தைகளாகவே கருதப்படுகின்றனர். (பாலியல் குற்ற வழக்கு
வேறு)
குழந்தைகளை எப்படி நடத்தவேண்டும், நடத்தக்கூடாது
என்பதுடன் அவர்களுக்கான உரிமைகளாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சமமான உரிமை(பிரிவு
14), பாரபட்சமாக நடத்தப்படுவதற்கு எதிரான உரிமை (பிரிவு 21), தனிப்பட்ட
சுதந்திரத்திற்கும், சட்டப்பூர்வமான செயல்பாடுகளுக்குமான உரிமை (பிரிவு 21) என
குறிப்பிட்டுள்ளது. மேலும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சிறப்பு சலுகைகள்
வழங்கப்படவேண்டும் எனவும் தனியாக பிரிவு 15(3) ல் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா குழந்தை உரிமைகள் உடன்படிக்கையில் 1.உயிர்
வாழ்தல், 2. பாதுகாப்பு, 3. வளர்ச்சி
4. பங்கேற்பு ஆகிய 4 உரிமைகளையும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு அரசும் வழங்கவேண்டும்
எனக்கூறப்பட்டுள்ளது. இதனை செய்வதாக இந்திய அரசும் இந்த ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டுள்ளது.
இதனடிப்படையில் பார்த்தோமானால் நீட்
தேர்வு மையத்தில் சோதனை என்ற பெயரில் மாணவர்கள் நடத்தப்படுவது குழந்தை உரிமை
மீறலாகும். மேலும் இது குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் உளவியல் ரீதியான
வன்கொடுமை, சித்திரவதை, தாக்குதல் என்றும் கூறலாம். குழந்தைகள்/மாணவர்கள் மிகமிக மென்மையான,
நுட்பமான மனநிலையையும், உணர்வுகளையும் கொண்டவர்களாகும். சந்தோஷமாக
பட்டாம்பூச்சிகளாக வண்ண வண்ண சிறகடித்து பறப்பதுதான் குழந்தைகளின் இயல்பு. அது அவர்கள் உரிமையும் கூட. வண்ணத்துப்பூச்சியின்
சிறகுகள் வெட்டப்படுவதுபோன்று தேர்வு மையங்களில் ஆழ்ந்த மனவேதனைக்கும்,
அவமானத்திற்கும் குழந்தைகள் ஆளாக்கப்படுகின்றனர்.
குழந்தைகள் இவ்வாறு நடத்தப்படுவதை குழந்தை
உளவியல் நோக்கில் அனுகினால் பெரும் ஆபத்தும் உள்ளது. அதாவது அலைச்சலும்,
காத்திருத்தலும் தரும் வேதனையான மனநிலையில் தேர்வு மையம்
செல்லும்போது அங்கு சோதனை என்ற பெயரில் அனுபவிக்கும் சித்திரவதை / வன்கொடுமைகள்
குழந்தைகள் மனதில் மாறாத வடுக்களாக நிற்கும். காலப்போக்கில் இந்த வேதனை, அலைச்சல்,
அவமானம், சித்திரவதை எல்லாம் வன்மமாக மாறுவதற்கான ஆபத்தும் உள்ளது. பிற்காலத்தில்
மருத்துவராக பணியாற்றுகையில் இந்த வன்மம் அரசு மற்றும் ஆட்சியாளர்களுக்கு எதிரானதாக
இருக்கவேண்டும். மாறாக சிகிச்சைக்கு செல்லும் ஏழை, எளிய மக்கள் இந்த வன்மத்திற்கு ஆளாக
நேரிடுமோ என்ற ஆபத்து உள்ளது. நான் சொல்கின்ற இந்த சிக்கலை
மேம்போக்காக அனுகினால் என்னை திட்டுவதோடும், விமர்சிப்பதோடும் முடிந்துவிடும்.
மாறாக மாணவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் சிக்கல்களோடு புரிந்து
அனுகினால் தீர்வை நோக்கி செல்லமுடியும்.
குறிப்பாக சொந்த மாவட்டத்தில் தேர்வு
எழுதும் மாணவர்கள் தவிற பிறமாவட்டங்களில் தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவருக்கும்
ஆற்றுப்படுத்துதல் (கவுன்சிலிங்) கட்டாயம் தேவை. வெளிமாநிலம் சென்று தேர்வு எழுதிய
மாணவர்களுக்கு கட்டாயம் கவுன்சிலிங் அளிக்கப்படவேண்டும். அப்போதுதான் மனதில் உள்ள
அழுத்தங்கள் வெளியாகும். மனம் இளகுவாகும்.
தேர்வு மையமும் சிறைச்சாலையும்
மாணவர்கள் தேர்வு மையத்திற்குள்
அனுப்பப்படும் காட்சிகளைப் பார்க்கும்போது, சிறைகளில் குற்றவாளிகளை அனுப்புவது
போன்று உள்ளது. சிறைச் சாலையில் அடைக்கப்படும் குற்றவாளிகளை சிறைக்குள்
நுழைந்ததும் உடைகள் களையப்படும், அணிகலன்கள்
(கைகடிகாரம், மோதிரம், தோடு, மூக்குத்தி, கயிறு, சங்கிலி உள்ளிட்ட அனைத்தும்.
சோதனையிடும் காவலரின் மனநிலை பொறுத்தே செருப்பு அணிவது, கையில் எடுப்பது, வீசி
எறிவது எல்லாம்) நீக்கப்படும். வெறும் உள்ளாடையுடன் மட்டுமே சிறைக்குள்
அனுமதிக்கப்பட்டு அதன்பிறகு உடைகள் அணிய அனுமதி கிடைக்கும். இதற்கு கொஞ்சமும்
குறைந்ததாக இல்லை, மாணவர்கள் அனுமதிக்கப்படும் காட்சிகள்.
சிறையில் அடைக்கப்பட்டோரை பார்க்க
மனுபோட்டு காத்திருப்பவர்களைப் போல உள்ளது, பெற்றோர்கள் பள்ளி முன்பு
மரத்தடியிலும், கடைகள் அருகிலும், சாலை ஓரங்களிலும் காத்திருக்கும் அவலம்.
கல்வியை எட்டமுடியாத மக்கள்
இன்னமும்கூட நீட் தேர்விற்கு
எப்போது, எப்படி விண்ணப்பம் செய்வது என்பது தெரியாமல் பலகிராமப்புற மாணவர்கள்
உள்ளனர். இன்னும் வெளிப்படையாக நேரடியாக சொல்வதெனில் இன்றும்கூட பள்ளி கல்லூரி
செல்லமுடியாத நிலையும், சூழலும் பல கிராமப்புற மாணவர்களுக்கு உள்ளது என்பது
மறுக்கமுடியாத ஒன்றாகும்.
தற்போது கல்வி என்பது பணம் உள்ளவர்களுக்கு
ஒரு கல்வி, பணம் இல்லாதவர்களுக்கு ஒரு கல்வி என்பதாக மாறிவருகிறது. ஏழை, எளிய
மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்வியை எளிதில் அணுகமுடியாத, பெற முடியாத சூழலே
உள்ளது.
இறுதியாக திருமுருகன்
காந்தி அவர்களின் முகநூல் பதிவில் இருந்த வாக்கியத்தோடு இதனை நிறைவுசெய்வது
பொருத்தமாக இருக்கும். ‘’மாணவர்கள் அரசியலாக்கபடாமல், போராடும் குணம் கொண்டவர்களாக
மாற்றப்படாமல் அவர்களையும், அவர்களது உரிமைகளையும் நம்மால் பாதுகாக்க முடியாது. மாணவப்
பருவத்தில் இயல்பாக வரும் போராடும் குணத்தை நமது பள்ளிகளும், ஆசிரியர்களும்,
பெற்றோர்களும் காயடித்து வைப்பது இன்றைய அவலத்தினை எதிர்த்து நிற்கும் போர்குணம்
கொண்ட மாணவர் எழுச்சியைத் தடுத்து வைத்திருக்கிறது.
நாம் இன்று
கொந்தளிக்கின்றோம். கவலைப்படுகின்றோம். கோபம் கொள்கின்றோம். இதே உணர்வு
மாணவர்களிடத்தில் உண்டு. அவர்களைக் கட்டுப்படுத்தும் ஆசிரியர்கள், பெற்றோர்கள்
தங்களது இரும்புப் பிடியைத் தளர்த்தினாலேயே நீட் போன்ற அக்கிரமங்களுக்கான தீர்வை
மிக எளிதாகப் பெற்றுவிட இயலும். பிராய்லர் கோழிகளாக மாணவர்களை மாற்றிய பின்னர்,
நீட் போன்ற வன்மங்களை-அயோக்கியத்தனங்களை மிகத் தைரியமாக களமிறக்குகிறது அரசு”
திருமுருகன் காந்தி அவர்களின் இந்தக் கருத்து மிகமுக்கியமான ஒன்றாகும். இன்றையச்
சூழலில் அரசியல்மயமாவது, அரசியல்படுத்துவது என்றால் அது வாக்கு அரசியல் என்று
பார்க்கப்படுகின்றது. இச்சூழல் மாறவேண்டும்.
கடந்த ஆண்டைவிட இந்த
ஆண்டு 31% மாணவர்கள் கூடுதலாக விண்ணப்பித்தால் தேர்வு மையம் ஒதுக்கமுடியவில்லை என
சிபிஎஸ்சி கூறுகின்றது. ஆனால் மார்ச் மாதமே விண்ணப்பிக்க கடைசி என்ற நிலையில்
மொத்தம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 288 பேர் விண்ணப்பித்துள்ளனர். தங்களிடம்
கேட்கவில்லை எனக்கூறிவிட்டு தமிழக அரசு எளிதாக இதிலிருந்து கழண்டுகொள்கிறது.
தமிழ்நாடு தேர்வாணையத் தேர்வுகளை சுமார் 6 லட்சம் பேர் தமிழகத்திலேயே
எழுதியுள்ளனர்.
தமிழ்நாட்டில்
விண்ணப்பத்திருந்த 1 லட்சத்து 7 ஆயிரத்து 288 பேருக்கு தமிழகத்தின் 10 நகரங்களில்
மொத்தம் 170 மையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், கர்நாடகத்தில்
விண்ணப்பித்திருந்த 96,000 பேருக்கு 187 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது
என்பதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும்.
1 comment:
Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper | Kollywood News
Post a Comment