Monday, August 7, 2017

அண்ணா பல்கலைக் கழகத்தில் நுழையும் இருளர் மாணவர்.

கல்விக் கண் திறந்த   
திண்டிவனம் சார் ஆட்சியர்  திரு.பிரபு சங்கர் - 
அண்ணா பல்கலைக் கழகத்தில் நுழையும் இருளர் மாணவர். 
-----------------------------------------------------------------------------------------------------------------

திருமூர்த்தி. பழங்குடி இருளர் மாணவர். 12 ஆம் வகுப்பில் 963 மதிப்பெண் எடுத்திருந்தான். பொறியியல் படிக்க விருப்பம். சாதிச் சான்று இல்லாமல் விண்ணபிக்க முடியாத நிலை. கடைசி நாளன்று அண்ணா பல்கலைக் கழக இணையத்தில் பதிவு செய்தான். விண்ணப்பதை அனுப்ப ஒருநாள்தான் இடைவெளி. அப்போதுதான் திண்டிவனம் சார் ஆட்சியராக பிரபு சங்கர் அவர்கள் பொறுப்பேற்று சில நாட்கள் ஆகியிருந்தது. அவரை அனுகினோம். நேரடியாக விசாரணை செய்து மாலையே சாதிச் சான்றை வழங்கினார். அதனால் இறுதி நாளன்று விண்ணப்பதினை அனுப்ப முடிந்தது. கலந்தாய்வில் பங்கேற்றான். 

இயந்திரவியல் கிண்டியியே இடம் கிடைத்தது. பல்கலைக்கழகத்திலேயே இடமென்பதால் சில கட்டணங்கள் கட்டவேண்டியுள்ளது. முதல் தலைமுறை சான்றிதழ் இருந்தால் கட்டண விலக்கு கிடைக்கும். அதுவும் இல்லை. மூன்று நாள் அவகாசம் கேட்டதை பல்கலைக் கழக அலுவலர்கள் ஏற்றனர். கலந்தாய்வு முடித்த மறுநாள் இதனை சார் ஆட்சியர் கவனத்திற்கு பேராசிரியர் கல்யாணி கொண்டு சென்றார். இதனையும் சார் ஆட்சியர் தனிக்கவனம் எடுத்து செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அவரே பேசினார். இப்படி நேரடியாக அவர் தலையிட்டு அவசரத்தை வலியுறுத்தியதால் அன்றே விசாரணை முடிந்து மாலையே முதல் தலைமுறை சான்றிதழை பெறுமுடிந்தது. 

இப்படி சார் ஆட்சியர் சிறப்புக் கவனம் எடுத்துச் செய்யவில்லை என்றால் இன்று பழங்குடி இருளர் சமூகத்திலிருந்து முதல் தலைமுறை மாணவன் திருமூர்த்தி அண்ணா பொறியியல் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்திருக்க முடியாது.  பழங்குடியினர் நலனில் மிகுந்த அக்கறையுடன் செயல்படும்  சார் ஆட்சியர் பிரபு சங்கர் அவர்களுக்கு பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் கலந்தாய்வில் திருமூர்த்திக்கு வழிகாட்டியாக இருந்து, திருமூர்த்தியின் கல்விக்கு அனைத்து வகையிலும் உதவியாகவும், உறுதுணையாகவும் பொறுப்பேற்றுக்கொண்ட கல்வியாளர் நெடுஞ்செழியன் அவர்களுக்கும் அவரது குழுவினருகும்.இதயங்கனிந்த நன்றிகள்.




No comments: