Sunday, September 20, 2015

1 மணி நேர தற்கொலைக் கடிதமும்.. சில சந்தேகங்களும்

ஒரு மணி நேரத்திற்கும் மேலான
தற்கொலை கடிதமும் சில சந்தேகங்களும்…
விஷ்ணுபிரியாவின் தந்தை கூறுகின்றபடி கடிதம் சந்தேகத்திற்கு உரியது என்பதை நாம் உணரமுடியும்.
பாதிக்கப்பட்டு காவல் நிலையத்தில் நாமே எழுதிய புகாரை அளிக்கும்போது பல நேரங்களில் போலீசார் நாங்கள் சொல்வது போல் எழுதிக்கொடுங்கள் என்று புகாரை மாற்றி எழுதச் சொல்வார்கள். அதில் போலீசார் தங்களுக்கு தேவையானவர்களை காப்பாற்றுகின்ற நோக்கில் சில சட்ட நுணுக்கங்களுடன் சில வார்த்தைகளை வரவழைப்பார்கள். அதே நேரத்தில் போலீசார் தங்களுக்கு வேண்டாதவர்களை வழக்கில் சிக்க வைக்க நுணுக்கமான சில சொற்களை சேர்ப்பார்கள்.
இப்படியான சந்தேகம்தான் விஷ்ணுபிரியாவின் கடிதத்தில் தற்போது முழுமையாக படிக்கும்போது எழுகின்றது..
1.   கடிதத்தில் உள்ள சில வார்த்தைகளை கவனிக்க வேண்டும்…
-    போலீசுக்கு கஷ்டத்தை கொடுக்க வேண்டாம்.
-    என்னுடைய முடிவு. இதில் யாருக்கும் சம்பந்தம் இல்லை.
-    எந்த அரசியல் கட்சியினரையும் நாடவிடவேண்டாம்.
-    ஊடகம், அரசுக்கு செல்லவேண்டாம். தூண்டிவிடுபவர்களை வீட்டை விட்டு வெளியே போகச்சொல்லுங்கள்.
-    நிவாரணம் கேட்க வேண்டாம்.
-    பிரச்சனை செய்யவேண்டாம்.
-    எனக்கு வேறு யாரும் எதுவும் பண்ணவில்லை.
-    பிரேதப் பரிசோதனை முடிந்ததும் பிரச்சனை செய்யாமல் உடலை வாங்கிக்கொள்ளுங்கள்.
-    கோகுல் ராஜ் வழக்குடன் தொடர்புபடுத்தவேண்டும்
2.   எந்தவொரு சந்தேக மரணத்திலும், கொலையிலும் நாம் எதையெல்லாம் செய்வோமோ அதையெல்லாம் தன்னுடைய மரணத்தில் செய்யக்கூடாது என்று தெளிவாக, கவனமாக ஒவ்வொன்றாக குறிப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாக தற்கொலையை நினைத்துக்கொண்டே எழுதமுடியுமா?
3.   ஒரு நேர்மையான உயர் காவலதிகாரி தன்னைக் காப்பாற்றிகொள்ள முடியவில்லை என்பதால் தற்கொலை முடிவெடுக்கின்றார். அதில் தனது தற்கொலைக்கு காரணமான எல்லோரையும் காப்பாற்றுவது போன்று எழுத முடியுமா?
4.   செய்தியாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் தெரியும் நான்கு பக்க செய்தியோ, கட்டுரையோ எழுதுவதில் உள்ள சிரமங்கள். இந்நிலையில் இந்த 9 பக்க கடிதம். ஒரு பக்கம் எழுத 7 நிமிடங்கள் என்றால் கூட மொத்தம் 63 நிமிடங்கள் அதாவது ஒரு மணி நேரத்திற்கு மேல் தேவைபடுகின்றது. எவ்வளவுதான் உறுதியான நிலையில் தற்கொலைதான் என முடிவெடுத்தாலும் மனம் உறுதி குலையாமல் எவர்மீதும் குற்றஞ்சாட்டுகள் இல்லாமல், எல்லோரையும் காப்பாற்றுகின்ற நோக்கில், காரணமும் சொல்லாமல் இவ்வளவு கவனமாக, தெளிவாக சுமார் 1 மணி நேரம் தொடர்ந்து எழுத முடியுமா?
கடிதத்தில் எவையெல்லாம் இல்லை, வேண்டாம் என்று சொல்கின்றாரோ அதையெல்லாம் உண்டு, வேண்டும் என்று மாற்றி யோசித்தால்.. தொடர்புடைய அனைவரும் வழக்கில் சிக்குவார்கள்.


No comments: