Thursday, August 27, 2015

சேசசமுத்திரம் கிராமத்தில் நடந்த சாதிய வன்கொடுமைகள் என்ன?

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டத்திலுள்ள சேச சமுத்திரம் கிராமத்தில் தலித் மக்கள் தங்களுடைய மாரியம்மன் கோவிலுக்கு திருவிழா நடத்தி தேரோட்டம் செய்யவிருந்த நிலையில், சுதந்திர தினத்தன்று தேர் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு, 5 வீடுகள் முழுமையாகவும், 4 வீடுகளின் ஒரு பகுதியும் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்த உணவு, உடை, பாத்திரம், மாணவர்கள் சான்றிதழ், ரொக்கப்பணம், குழந்தைகளின் தோடு, கொலுசு உள்ளிட்ட நகை, புத்தங்கள், சான்றிதழ், அரசு வழங்கியுள்ள குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலாயின. பாதுகாப்பிற்கு இருந்த 8 போலீசார், 3 கிராம உதவியாளரும் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
பாதிப்புற்ற தலித் மக்களை நேரில் சந்தித்துப் பேசியபோது கிடைத்த தகவல்கள்:
• சுமார் 80 தலித் குடும்பங்களும், 5000 சாதி இந்துக்களும் வாழ்கின்றனர். இக்கிராமத்தில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வன்னியர் சமூகத்தினர் 3 பேர் போட்டியிட்டுள்ளனர். இதில் சுப்பிரமணியம் என்பவர் தலித் மக்களிடம் "அனைவரும் மொத்தமாக தனக்கு வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்தால் தங்கள் அம்மன் கோவிலுக்குத் தேவையான தேரினை செய்து தருவதாக" வாக்களித்துள்ளார். அதன்படி தலித் மக்கள் அனைவரும் வாக்களித்துள்ளனர். வெற்றிபெற்ற சுப்பிரமணியன் தலித் மக்களிடம் கோவில் பணம் 1 லட்சம் ரூபாயைப் பெற்று, தனது பங்காக சுமார் 1 லட்சம் ரூபாய் போட்டு தேர் செய்து கொடுத்துள்ளார். அதே நேரத்தில் ஊரோடு சேர்ந்து தலித்துகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதுடன், இந்த ஆண்டு அரசே அனுமதி அளித்து நடைபெறவிருந்த தேரோட்டத்திற்கு தடை கேட்டு சங்கராபுரம் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார்.
dalit sesa samuthiram• இதுவரை 20க்கும் மேற்பட்ட அமைதிக் கூட்டங்களை நடத்திய வருவாய் மற்றும் காவல் அதிகாரிகளே சட்டம் ஒழுங்கு பிரச்சனையென 144 தடையுத்தரவு பிறப்பித்து தேரோட்டத்திற்கு தடைவிதித்து வந்துள்ளனர். இந்துக்களாக இருந்தும், இந்துக் கடவுளையே வழிபடமுடியாத நாங்கள் புத்தம் மதம் மாறப் போகின்றோம் என்று கடந்த ஆண்டு தேரோட்டம் தடை செய்யப்பட்டதும் தலித் மக்கள் அறிவித்துள்ளனர். இதனையொட்டி அமைதிக் கூட்டம் நடத்திய அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் ஒப்புதலுடன் 16 ஆம் தேதி தேரோட்டம் நடத்த அனுமதி வழங்கியுள்ளனர். ஆடல், பாடல் போன்ற கொண்டாட்டம் எதுவும் இல்லாமல் அமைதியாக நடத்த வேண்டும் என்பதை அமைதிக் கூட்டத்தில் இருதரப்பினரும் ஏற்றுள்ளனர். இந்நிலையில் திட்டமிட்டு தேர் முற்றிலும் எரிக்கப்பட்டுள்ளது.
• ஆகஸ்ட் 15 ஆம் அன்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பா.ம.க அன்புமணியின் கூட்டத்திற்கு கிராமத்திலிருந்து பா.ம.கவைச் சேர்ந்தவர்கள் வாகனங்களில் சென்றுள்ளார்கள். சமீப ஆண்டுகளாக பா.ம.க பல்வேறு செயல்படுகள் மூலமாக நேரடியான, வெளிப்படையான தலித் விரோத நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக அன்புமணி கூட்டம் முடிந்ததும், கூட்டத்தில் பங்கேற்ற பா.ம.கவினர் மாலை 6.00 மணியளவில் கிராமத்திற்கு திரும்பி வந்து (300 பேர் கொண்ட கும்பல்), தலித்துகளுக்கு எதிராக கோஷமிட்டுக் கொண்டு, தலித் குடியிருப்பைச் சுற்றிச் சுற்றி வந்துள்ளது. பாதுகாப்பிற்கு நின்றிருந்த போலீசார் இங்கெல்லாம் வரக்கூடாது என்று கூறி தடுத்துள்ளனர். கொஞ்சம் இருட்டியபிறகு இரவு 7 மணியளவில் அவர்களது பகுதியிலிருந்த 2 டிரான்ஸ்பார்மரை நிறுத்தி மின்சாரத்தை தடை செய்துள்ளார்கள். அதே வேகத்தில் தலித் குடியிருப்பிற்குள் புகுந்து, அங்கிருந்த 2 டிரான்ஸ்பார்மர்களை உடைத்து ஊரையே இருட்டுக் காடாக்கியுள்ளனர். உடனே அங்கிருந்த போலீசார் திருவிழாவிற்காக எடுத்து வரப்பட்டிருந்த இரு ஜெனரேட்டர்களையும் ஓட்டச்சொல்லி ஆன் செய்துள்ளனர். அவர்கள் சுமார் 300 பேரும் கூட்டமாக வந்து ஜெனரேட்டர் இரண்டையும் அடித்து உடைத்து சுத்தமாக இருள் பகுதியாக்கினார்கள். அதன்பிறகு குவாட்டர் மதுபாட்டிலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தி தலித் குடியிருப்புகள் மீதும், தேர் மீதும் வீசி எரிந்துள்ளனர். இதில் குடிசைகள் தீ பற்றி எரிந்தன. தேர் எரியாத நிலையில் பெரிய டயர் ஒன்றில் பெட்ரோல் ஊற்றி தேருக்கு அடியில் அதனை வைத்து தீ வைத்து எரித்துள்ளார்கள். தடுக்க முயன்ற போலீசார் மீதும் தாக்கியுள்ளனர். 300 பேர் கும்பலை 30 போலீசாரால் தடுக்க முடியவில்லை. கொஞ்ச நேரத்தில் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் வந்துள்ளார். அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதில் அவருக்கு லேசான காயம்பட்டுள்ளது. அதன் பிறகே வானத்தை நோக்கி துப்பாக்கியால் போலீசார் சுட்டுள்ளார்கள்.
• தலித்துகளின் குடிசைகள் எரிக்கப்பட்டது, கற்கள் மற்றும் பெட்ரோல் எரிகுண்டுகள் கொண்டு தாக்கியது தொடர்பாக கு.எண் 329/2015 பிரிவுகள் 147, 148, 341, 323, 324, 307, 506(ii), 436 மற்றும் வன்கொடுமை தடுப்புச் அவசரச் சட்டம் 3(ii)(v)(a) பிரிவுகளில் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் 11 பெண்கள் உட்பட 88 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
• ஆதிக்கச் சாதியினரின் இத்தாக்குதலில் 8 போலீசாரும், கிராம உதவியாளரும் காயமடைந்தது தொடர்பாக ராஜன்பாபு என்கிற போலீசார் கொடுத்த புகாரின் அடிப்படையில் கு.எண் 330/2015 என்கிற வழக்கு பதிவுசெய்துள்ள போலீசார் இவ்வழக்கில் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை. இரு வழக்கிலும் மற்றும் பலர் என சுமார் 500 பேர் பெயர் குறிப்பிடாமல் சேர்க்கப்பட்டுள்ளனர்.
• தாக்குதலை முன்நின்று நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தற்போதைய பஞ்சாயத்து தலைவர் சுப்பிரமணியன் (தே.மு.தி.க), துணைத்தலைவர் வேல்முருகன் (தே.மு.தி.க), முன்னாள் தலைவர் பூச்.சின்னதுரை (தி.மு.க), ஒன்றிய கவுன்சிலர் அண்ணாமலை (அதிமுக) உள்ளிட்ட எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
எமது பரிந்துரைகள் :
• தொடர்ந்து 4 ஆண்டுகளாக தலித் மக்கள் நடத்துகின்ற வழிபாடு மற்றும் தேர்த் திருவிழாவினை தீண்டாமை பாகுபாட்டை காரணம் காட்டி தடை செய்து வருவதால் இக்கிராமத்தை வன்கொடுமை நிறைந்த கிராமமாக (Atrocity prone village) அறிவிக்க வேண்டும்.
• காயமடைந்த போலீசார் 8 பேருக்கும் தலா 50 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வீடுகளை முழுமையாக இழந்த 5 குடும்பத்திற்கு தலா 5 ஆயிரம் ரூபாயும், பாதி எரிந்த 2 குடும்பத்திற்கு தலா 2500 ரூபாயும், 7 குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி, வேட்டி, புடவைகள் தற்காலிக நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. இது பாதிப்பிற்கேற்ற போதுமான நிவாரணமில்லை என்பது வெளிப்படையாகும். எனவே, வன்கொடுமையால் பாதிப்புற்ற தலித் மக்களுக்கு சட்டத்தின்படி உரிய நிவாரண உதவிகள் உடனடியாக அளிக்கப்பட வேண்டும்.
• மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி மூன்று மாதத்திற்கோ அல்லது இயல்பு வாழ்க்கை திரும்பும் வரையிலோ பாதிப்புற்ற தலித் மக்கள் அனைவருக்கும் உணவு, உடை, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்பட வேண்டும். வீடுகளை இழந்த அனைவருக்கும் ரூபாய் 5 லட்சம் மதிப்பில் காங்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். தீயில் எரிந்துபோன அடையாள அட்டை உள்ளிட்டவைகளை மீண்டும் வழங்குவதுடன், உரிய ஆய்வுகள் செய்து எரிந்துபோன சொத்துக்களுக்கான உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்.
• முதன்மைக் குற்றவாளிகள் அனைவரின் அரசியல் செல்வாக்கினை கணக்கில் கொள்ளாமல் உடனடியாக கைதுசெய்யப்பட்டு, தலித் மக்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கிட வேண்டும். பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் மீதும், விடுதலைச் சிறுத்தைகள் மீதும் கலவரத்தைத் தூண்டிவிடுவதாக கிராமத்தைச் சேர்ந்த இருவர் சார்பாக பா.ம.க வின் வழக்கறிஞர் கே.பாலு கொடுத்துள்ள புகார் இப்பகுதிகளில் மேலும் பதட்டத்தை உருவாக்குவதாகவும், தீண்டாமைப் பாகுபாடுகளை மேலும் தொடரச் செய்வதுமாக உள்ளதுடன், இச்சம்பவத்தின் தீவிரத் தன்மையின் கவனத்தை திசை திருப்புவதுமாக உள்ளது.
• அரசு தனது இந்து சமய அறநிலையத் துறையின் மூலமாக தலித் மக்களின் தேரினை சீர் செய்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேரோட்டம் நடத்தி தீண்டாமை இல்லா கிராமமாக இதனை மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, முன்மாதிரி கிராமமாக மாற்ற வேண்டும்.
• தற்போது நடைமுறையில் இல்லாத வன்கொடுமை தடுப்பு அவசரச் சட்டம் 2014&இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது வழக்கினையும், விசாரணையையும் வலுவிழக்கவே செய்யும். தலித்துகளுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி நீதி கிடைப்பதற்கு பதிலாக, வழக்கினை நீர்த்துப்போகவே செய்யும். எனவே காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனடியாக எஸ்.சி/எஸ்.டி சட்டம் 1989&இன் வழக்கினை திருத்தம் செய்திட வேண்டும்.
- இரா.முருகப்பன்
(19.08.2015)
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/29007-2015-08-19-14-17-34

No comments: