Tuesday, June 15, 2010

விழுப்புரம்-பேரணி இரயில் தண்டவாளம் வெடிவிபத்து ; உளவுத்துறையின் சதியாகவும் இருக்கலாம்.

விழுப்புரம் மாவட்ட அனைத்துக்கட்சி மற்றும் இயக்கங்கள்
ஆலோசனைக் கூட்ட முடிவுகள்

13.06.2010 இன்று விழுப்புரத்தில் அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நூறு பூக்கள் அறக்கட்டளை பேரா.த.பழமலய் தலைமையேற்றார்.
இக்கூட்டத்தில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் பேரா.பிரபா.கல்விமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் ஏ.வெற்றிச்செல்வன், ம.தி.மு.க. ம.நரசிம்மன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மருத்துவர் ந.சுந்தர், மருதம் ஒருங்கிணைப்பாளர் ஆ.இரவிகார்த்திகேயன், வழக்கறிஞர் அ.இராஜகணபதி, ஆசிரியர் சங்கம் த.பாலு, மார்க்சியப் பெரியாரிய பொதுவுடைமைக்கட்சி சீனி.தங்கரசு, மனித உரிமைகள் கண்காணிப்புக் கழகம் சி.வீராசாமி, பெரியார் திராவிடர் கழகம் மா.கணேசன், மக்கள் கண்காணிப்பகம் ஜெயராமன், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் இரா.முருகப்பன், தமிழிளைஞர் கூட்டமைப்பு இரா.கருணாநிதி, பிரபு, சிவராமன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்.
1. 12.06.2010 அன்று அதிகாலை பேரணி இரயில்வே நிலையம் அருகில் தண்டவாளம் வெடிவைத்து தகர்க்கப்பட்டுள்ளது. கார்டு இராஜாராமன் தகவலில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்து சம்பவத்தை நிகழ்த்தியவர்களை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

2. மேற்படி இச்சம்பவம் தொடர்பாக விழுப்புரத்தைச் சேர்ந்த கா.தமிழ்வேங்கை, பா.ஜோதிநரசிம்மன், கோ.பாபு, தே.ஏழுமலை, எழில்.இளங்கோ, கோ.கணேசன், கொத்தமங்கலத்தை சேர்ந்த ஜா.ஜெயராமன், உளுந்தூர்பேட்டை-எடைக்கல் க.குமார் ஆகிய 8 பேரும் காவல்துறையினரால் விசாரணை என்கிற பெயரில் நேற்று 12.06.2010 அன்று அழைத்துச்செல்லப்பட்டு கஞ்சனூர், காணை, கெடார், திருவெண்ணெய்நல்லூர் ஆகிய காவல்நிலையங்களில் வைக்கப்பட்டனர். இரவு 1.00 மணியளவில் மேற்படி தமிழ்வேங்கை, ஜோதிநரசிம்மன், எழில்.இளங்கோ ஆகிய மூவரும் விடுவிக்கப்பட்டனர். மீண்டும் இன்று (13.06.2010) காலை 11.00 மணியளவில் விசாரணை என்ற பெயரில் போலிசாரால் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
மேற்படி நபர்கள் பல்வேறு அமைப்புகளின் மூலம் மாவட்டத்தில் தொடர்ந்து மனித உரிமைகளுக்காகவும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், தமிழ் மொழி, இனப்பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பொதுப்பிரச்சனைகளுக்காகவும் செயல்பட்டு வருகிறார்கள். நேற்றைய விசாரணையின்போது கூட விசாரணை அதிகாரிகள் இவர்களிடம் “சம்பவத்தில் உங்களுக்கு தொடர்பில்லையென எங்களுக்கு நன்றாக தெரியும். ஆனாலும் விசாரிக்க வேண்டுமென்பதால் விசாரிக்கிறோம்” என்று வெளிப்படையாகக் கூறியுள்ளனர்.
எனவே இச்சம்பவத்தையொட்டி மேற்படி மனித உரிமை ஆர்வலர்களின் மீது போலிசார் பொய் வழக்கு போடமாட்டார்கள் என இக்கூட்டம் நம்புகிறது. மாறாக அவர்கள் மீது பொய் வழக்குப்போடப்பட்டால் அதனை எதிர்த்து போராட்டங்கள் மேற்கொள்வதென தீர்மானிக்கப்படுகிறது.

3. இந்த வெடிவிபத்து நிகழ்வு உளவுத்துறையின் சதிச்செயல்களில் ஒன்றாகவும் இருக்கலாம் என்று இக்கூட்டம் சந்தேகிக்கிறது. எனவே சம்பவம் தொடர்பாக முறையான, வெளிப்படையான விசாரணை மேற்கொண்டு உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்படவேண்டும் என்றும், பொதுப்பிரச்சனைகளுக்காக செயல்படும் மேற்படி மனித உரிமை ஆர்வலர்களை இச்சம்பவத்தில் தொடர்புப்படுத்தி அச்சமூட்டி களங்கப்படுத்தும் நடவடிக்கையை போலிசார் உடனடியாகக் கைவிட வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

நாள் : 13.06.2010

1 comment:

Anonymous said...

உண்மைதான். இது தமிழன விரோத சக்திகளினால் செய்யப்பட்ட சதி. தமிழன் அழிய வேண்டும் என நினைக்கும் சக்திதான் இதைச் செய்திருப்பார்கள். இலங்கை அரசின் கைககூலிகள்.

மொழி வளர வேண்டுமாம். ஆனால் தமிழன் அழிய வேண்டுமாம்.

நெஞ்சுக்கு நீதி எழுதிய கலைஞர் அய்யா மனம் திறந்து சொல்லுங்கள் உண்மையை!