ஆசிரியர் மாணவர் விகிதம் 1 : 20 தேவையென வற்புறுத்தியும்
பள்ளிக்கல்வி மாநாடு
22-02-2009, காலை 9-00 மணி முதல் மாலை 4-00 மணி வரை, விழுப்புரம்.
ஏன் இந்த மாநாடு?
தமிழக அரசு தொடக்கப்பள்ளிகளில் செயல்வழிக்கற்றல் என்ற புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் சமீபத்தில் எழுந்துள்ளது. ஒருசில ஆசிரியர் சங்கங்கள் செயல்வழிக் கற்றலை எதிர்த்துப் பிரச்சாரங்களும், ஆர்ப்பாட்டங்களும் செய்துவருகின்றன. அதே வேளையில் வகுப்பறையில் செயல்வழிக் கற்றலை முறையாக நடைமுறைப்படுத்திப் பார்த்த ஆசிரியர்கள், இது ஒரு நல்ல முறை என வரவேற்கிறார்கள். மாணவர்களின் கற்றல் திறனில் முன்னேற்றம் உள்ளதாகக் கூறுகிறார்கள். தொடக்கக் கல்விதான் எல்லாவற்றுக்கும் அடிப்படையாகும். எனவே இது தொடர்பாக நாம் ஆராய்ந்து முடிவு செய்து செயல்பட வேண்டியது நமது கடமையாகும்.
செயல்வழிக் கற்றல் எப்படி வந்தது?
முதலில் இம்முறையானது ஆந்திராவில் உள்ள ரி´ வேலி பள்ளியில் பின்பற்றப்பட்டு வந்தது. இது பற்றி ஆய்வு செய்ய, திட்ட ஒருங்கிணைப்பாளர் நான்கு பேருடன் 26 ஆசிரியர்கள் அடங்கிய குழு தமிழ் நாட்டிலிருந்து சென்றது. அந்தப் பள்ளியில் பாடங்கள் சிறு சிறு அலகுகளாகப் பிரிக்கப்பட்டுக் குழந்தைகள் தாமாகவே அவற்றைக் கற்றுக்கொள்ளும் விதத்தைக் கவனித்தனர். அதன் அடிப்படையில் உருவானதே இந்த செயல்வழிக் கற்றல் ஆகும்.
ரிஷி வேலி முறையை அப்படியே எடுத்துக் கொள்ளாமல், அதை தமிழகச் சூழலுக்கு ஏற்றவாறு மேம்படுத்தப்பட்டுள்ளது. பின்பு இம்முறையானது 2003-ல் சென்னை மாநகராட்சியில் உள்ள 13 பள்ளிகளில் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டது. நிறை குறைகளைக் கண்டறிந்து, மேலும் செழுமைப்படுத்தி 2004-ல் சென்னை மாநகராட்சியில் உள்ள 264 பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தினார்கள். மாநிலம் முழுவதும் இருந்து கல்வியாளர்களும், அலுவலர்களும் மாநகராட்சிப் பள்ளிகளை, பார்வையிட்டு பாராட்டினார்கள். ஐ.நா. சபையில் கல்விக்கான பொறுப்பாளர்களும் இதுவே
சிறந்தமுறை என சான்றளித்தனர். இதன்பின்புதான் இக்கல்விமுறை 2006 இல் ஊராட்சி ஒன்றியத்திற்கு 10 பள்ளிகள் வீதமும், 2007 இல் அனைத்து பள்ளிகளுக்குமாக விரிவுபடுத்தப்பட்டது.
செயல்வழிக் கற்றல் என்றால் என்ன?
இது தானே கற்றல், மகிழ்வுடன் கற்றல், மாணவர் மையக் கல்வி, தனியாய் கற்றல், குழுவாய் கற்றல், ஆசிரியர் துணையுடன் கற்றல் போன்ற பல்வேறு கற்றல் முறைகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு திறனைக் கற்பதற்கும் பல்வேறு செயல்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு செயல்பாடும் ஒவ்வொரு அட்டையில் வண்ண வண்ண நிறங்களில் கண்ணைக் கவரும் படங்களுடன் அச்சிடப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஆறு குழுவாகப் பிரிந்து அமரும் வண்ணம் தரையில் பாய்கள் போடப்பட்டு இருக்கும். முதல் மூன்று குழுக்கள் ஆசிரியர் துணையுடனும், 4,5
-வது குழுக்கள் சக மாணவர் உதவியுடனும், 6-வது குழு தனியே கற்றலுக்கும் ஏற்றவாறு குழு அட்டைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் ஒரு செயல் அட்டை முடிந்தவுடன் அடுத்து எந்தச் செயல் செய்ய வேண்டும் என்ற வழிகாட்டியும் (ஏணிப்படி),அடையாளச் சின்னங்களுடன் (முத்திரை) வழங்கப்பட்டுள்ளது.
செயல்வழிக் கற்றலின் சிறப்புகள் :
மாணவர்கள் ஒரு திறனை அடைந்த பிறகுதான் அடுத்தத் திறனை அடைய முடியும். இது போன்று ஒரு வகுப்பிற்கான திறன்களை முடித்த பிறகுதான் அடுத்த வகுப்பிற்கான திறன்களை கற்க முடியும். மாணவர்களின் தனித்திறன் மற்றும் வேகத்திற்கு ஏற்பக் கற்க முடியும். இது ஆசிரியர் மைய வகுப்பறையை, மாணவர் மைய வகுப்பறையாக மாற்றியுள்ளது. கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக உள்ளது.
கல்வியின் நோக்கமான அறிவியல் மனப்பான்மை, கற்பனைத்திறன், படைப்பாற்றதன்னம்பிக்கை மற்றும் ஆளுமைப் பண்புகளை வளர்ப்பதாக இக்கல்வி முறை உள்ளது. இதனை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வரவேற்றுள்ளது.
அ.கி.வேங்கடசுப்பரமணியன், டாக்டர் வசந்தி தேவி, எஸ்.எஸ். ராஜகோபாலன், எழுத்தாளர் ரவிக்குமார் போன்ற கல்வியாளர்கள் செயல்வழிக் கற்றலை ஆதரிக்கிறார்கள். தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இந்தியா முழுவதும் 7341 பள்ளிகளில் மேற்கொண்ட ஆய்வில் மொழி மற்றும் கணிதப் பாடத்தில் தமிழகம் முதல் நிலையில் உள்ளது. இதற்கு செயல்வழிக் கற்றலே காரணமாகும்.
மாணவர் சேர்க்கை எதனால் குறைகிறது?
செயல்வழிக் கற்றல் முறையை விரும்பாமல் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழிப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள் என்று சில ஆசிரியர் சங்கங்கள் கூறுகின்றன. உண்மையில், ஆங்கில மோகம் கவனிப்பாரற்றுக் கிடக்கும் அரசுப் பள்ளிகள், உள் கட்டமைப்பு, மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை கல்வியில் வணிகமயம் போன்ற பல காரணங்களால் கடந்த பல ஆண்டுகளாகவே, அரசுப் பள்ளிகளில் சேர்க்கைக் குறைந்து வருகிறது. இதனால் 1985-ல் 212 ஆக இருந்த மெட்ரிகுலேசன் பள்ளிகளின் எண்ணிக்கை 2005-ல் 3386 ஆகக் கூடியுள்ளது. செயல்வழிக் கற்றலை நன்கு செயல் படுத்தினால், அரசுப் பள்ளிகளின் தரம் உயரும். தாய் மொழியில் பயில்வதே சிறந்தது என்பதையும், செயல்வழிக் கற்றலின் சிறப்புகளையும் மக்களிடம் விளக்கினால், மெட்ரிகுலேசன் பள்ளிகளை பொதுமக்கள் புறக்கணிப்பார்கள், அரசுப் பள்ளிகளை ஆதரிப்பார்கள்.
20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் :
ஆண்டுதோறும், சைக்கிள் வழங்க ரூ.120 கோடி, டி.வி. வழங்க ரூ.750 கோடி, ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி போட ரூ. 1,000 கோடி என “வாரி வழங்கும்” இவர்களால் 20 மாணவருக்கு ஒரு ஆசிரியர் போட முடியாதா?
பள்ளிக்கல்வி மாநாடு
ஆன்மீகவாதிகளும் அரசியல்வாதிகளும் போட்டிப் போட்டுக்கொண்டு கல்வி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர், எனவே நாம்தான் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்காக குரல் கொடுக்கவேண்டும். எனவேதான் இந்த மாநாடு.
ஆதரவு தாரீர், அணிதிரண்டு வாரீர்.
மக்கள் கல்வி கூட்டமைப்பு
துரும்பர் விடுதலை இயக்கம். சமூக நீதி அறக்கட்டளை, சாந்தி நிலையம். கவசம்.சுரபி. மக்கள் கல்வி இயக்கம்.
பழங்குடி இருளர் கல்வி அறக்கட்டளை. புனித அன்னாள் கல்விச்சுடர். மலரகம்-சமூக செயல்பாட்டு அரங்கம். மனித உரிமைகள் கண்காணிப்புக் கழகம். கிராமக் குழந்தைகள் கல்வி முன்னேற்ற சமூகசேவை நிறுவனம். சமூகக்கல்விக்கான கிராமப் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை. பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம். திண்டிவனம் நகரக் கல்வி மக்கள் மேம்பாட்டுக்குழு. குழந்தைகளைக் கொண்டாடுவோம்-கல்வி இயக்கம், ஆனந்தன் கிராமப்புற வளர்ச்சி அறக்கட்டளை - பெருங்கலம்பூண்டி. ( தொடர்புக்கு : 94433 28740 )
No comments:
Post a Comment