Thursday, March 5, 2020

தற்கொலைக் குறிப்புகள் : தேசிய குற்ற ஆவணக் காப்பகமும் தமிழக அரசும்.

மூன்று நாட்களுக்கு முன்பு, கவிஞர் சபிதா மறைவையொட்டி முகநூலில் தற்கொலை தொடர்பான தகவல்கள் நிறைய வெளிவந்தது.
நேற்று முதல்நாள், விழுப்புரம் செஞ்சி காவல் நிலையத்தில், பணியில் சேர்ந்து ஒரு வருடமே ஆன காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட செய்தியும் பரவலாக வெளியானது இரு நாட்களில் 5 காவலர்கள் தற்கொலை செய்துகொண்டதாகவும் செய்தி வரும் அதே நேரத்தில், நேற்றும் ஒரு காவல் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பணிச்சுமை மற்றும் உயரதிகாரிகளின் அழுத்தம் ஆகியவை இந்தத் தற்கொலைகளுக்கு காரணம் என்பது வெளிப்படையானது.
0
இந்த நிலையில் தமிழக அரசு, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும், ’’பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனி கவனம்” என்ற தலைப்பில் பயிற்சி அளித்து வருகின்றனர். இப்பயிற்சிக்கான செலவினத் தொகை தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என்று கல்வித்துறையால் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க..


0
இரு நாட்களுக்கு முன்பு, தேசிய குற்ற ஆவண காப்பகம் இந்தியாவில் 2018 ஆம் ஆண்டில் நிகந்த தற்கொலைகள் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டு உள்ளது;
இதில் 6656 பேர் 2018ல் தற்கொலை செய்துகொண்டதாக, மகாராஷ்டிரா முதலிடத்திலும், 4552 பேர் தற்கொலையானதாக தமிழகம் இரண்டாம் இடத்திலும் உள்ளது.
இத்தகவல்கள் தொடர்பாக தினமணி நாளிதழ், ‘’தற்கொலை ஒரு சமூக அவலம்” என்ற தலைப்பில் தலையங்கம் எழுதியுள்ளது
0
2018ம் ஆண்டு மொத்தம் 1,34,516 தற்கொலைகள் இந்தியாவில் நடந்ததாக பதிவாகியுள்ளது இது 2016 ஆம் ஆண்டில் நிகழந்ததைவிட 3.6 சதவீதம் அதிகம். இதுவும் கூட பதிவான தகவல்கள் மட்டுமே. பாதிக்கும் மேற்பட்ட தற்கொலைகள் பதிவாகவில்லை என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
தற்கொலை செய்துகொண்டதில், வேலை இல்லாதவர்கள் சுயதொழில் புரிபவர்கள் 26, 085 பேரும், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துகொண்டு குடும்பத்தைக் கவனித்துக்கொண்டிருந்த பெண்கள் 42,319 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இந்த தற்கொலைப் பதிவுகளில் 9.7% வேலை இல்லாதவர்கள்; 7.7 பேர் விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள் ஆவர். 2018 ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி 45 நிமிடத்திற்கு ஒருவர் இந்தியாவில் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
0
பணியிடங்களில் நிகழும் சிக்கல்கள்; தனிமை; திட்டுவது மற்றும் அவமானத்தால் ஏற்படும் மன அழுத்தம்; வன்முறைக்கு ஆளாவது; குடும்ப பிரச்சினை; மனநல பாதிப்பு; போதைப்பழக்கம்; பொருளாதார இழப்பு; உடல் பிரச்சினைகள்; காதல் தோல்வி போன்ற காரணங்களால் தற்கொலைகள் நிகழ்வதாக குற்ற ஆவண காப்பகம் பதிவு செய்துள்ளது
தற்போது அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக வரும் ஆண்டில் தற்கொலைகள் அதிகரிக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது
0
மனநல ஆலோசனை பெற்றுக்கொண்டால், பெரும்பாலான தற்கொலைகள் நடப்பதற்கான வாய்ப்பே இல்லை என்ற நிலையில் மனநல ஆலோசனை பெறுவதில் பெரும் தயக்கமும் அச்சமும் சமூகத்தில் நிலவுகிறது.
ஒரு ஒருவேளை தயக்கமின்றி மனநல ஆலோசனை அல்ல சிகிச்சை பெற்றுக்கொண்டால் அவர்களை இழிவாக பார்க்கின்ற நிலை உள்ளதால், இச்சிகிச்சை பெறுவதும் கூட ஒரு மனச் சிக்கலாக உள்ளது.
மேலும், நமது நாட்டில், மனநல ஆலோசனைகள் வழங்கவும், மன நல சிகிச்சை அளிப்பதற்கும் போதிய மருத்துவர்கள் இல்லை என்பதும் பெரும் கவலைக்குறிய ஒன்றாகும்.

No comments: