சரவணன் சந்திரன் எழுத்துக்களை முகநூலில்தான் படிக்கத்தொடங்கினேன்.
தெளிவான, நேரடியான ஒரு சமூக அரசியல் எள்ளல் இருக்கும். படிப்பதற்கும் ஆர்வமாக இருக்கும்.
படிக்கத் தூண்டும்.
பார்பி நாவல் படிப்பது ஒரு அனுபவமாக உள்ளது. நீண்டதூர ரயில்
பயணத்தில் நீண்டகால நண்பர் ஒருவர் தனது வாழ்க்கையை – அனுபவத்தை - கதையை நம்மிடம் சொல்வது
போன்ற நடையில் உள்ளது. படிக்கும்போது நம்மையும்
உள்ளே இழுத்துக்கொள்கிறது. நாமும் சேர்ந்தே பயணிக்கின்றோம். கதையில் நிறைய நண்பர்கள்
வந்தபடியும், சென்றபடியும் உள்ளனர்.
நாவலில் இதுதான் கதை என்று எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது.
நாயகனின் வளர்ச்சி, முன்னேற்றம்; அவனுடைய ஹாக்கி விளையாட்டு, மைதானம், பயிற்சி, விளையாட்டுத்
துறையின் ஊழல்; கல்லூரி, விடுதி; நட்பு; பெண் நட்பு, உறவு; எல்லாவற்றையும் விட மொத்த
ஊரும் ஹாக்கியில் ஒன்றிணைந்து விளையாடி பழகி, பயிலும் சூழல் கொஞ்சம் கொஞ்சமாக சாதியத்திற்கு
பலியாவது; கிராமச் சூழலே தனித்துபோவது; சாதிய படுகொலைகள் என பல்வேறு விஷயங்களையும்,
அதற்கு தொடர்புடைய பல்வெறு சம்பவங்களையும் இணைத்து பேசியபடியே செல்கின்றது.
மனிதன் மனதின் எண்ணங்களுக்கும், உணர்வுகளுக்கும் ஆட்பட்டாலும்
அதனுள்ளேயே சிக்கிக்கொள்ளாமல், பலநேரங்களில் அதனை மீறி, தாண்டி சமூகவியல் நோக்கில்
அதன் நியாயங்களுக்குட்பட்டு இருக்க முயற்சிக்கும் ஒரு இளைஞனுடன் சில காலம் சேர்ந்து
பயணித்ததைப் போன்ற நல்ல அனுபவத்தை நாவல் அளிக்கின்றது.
No comments:
Post a Comment