குறிப்பு : கடந்த ஆண்டு சூலை 11 அன்று அத்தியூர் விஜயா அவர்கள் உடல் நிலை சரியில்லாமல் இறந்துபோனார். அப்போது எனது முக நூலில் பதிவிட்ட தகவல் இது. கடந்த ஆண்டு இந்த நாளில் என முகநூல் தற்போது கடந்த ஆண்டு பதிவுகளை இதே நாளில் நினைவூட்டி வருகின்றது... அப்படி மீண்டும் பதிவிட்ட இப்பதிவு.. பலர் விஜயா தற்போதுதான் இறந்துவிட்டார் என்றும் கூட விசாரித்தனர்... எத்தனையாண்டுகள் ஆனாலும்... விஜயாவின் மரணம் கொடுமையானதுதான்...
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
புதுச்சேரி போலீசார் 6 பேரால்
பாலியல் வன்புணர்ச்சியான பழங்குடியினப் பெண்
பாலியல் வன்புணர்ச்சியான பழங்குடியினப் பெண்
------------------------------------------------------------------------------------------
விழுப்புரம் மாவட்டம், அனந்தபுரம் அருகேயுள்ள சிறிய கிராமம் அத்தியூர். இக்கிராமத்தைச் சேர்ந்த இருளர் மாசி-தங்கம்மாள் தம்பதியரின் மகள் விஜயா 29-7-1993 அன்று அனந்தபுரம் சென்று அரிசி வாங்கி அத்தியூருக்கு தனது வீட்டிற்கு கொடுத்தனுப்பிவிட்டு, சித்தரசூர் கிராமத்திலுள்ள தனது சித்தி தனபாக்கியத்தைச் பார்க்கச் சென்றுள்ளார். அப்போது வியஜயாவிற்கு 17 வயதிருக்கும். காலை 10.00 மணியளவில் அனந்தபுரம் காவல் நிலைய காவலர் மணி என்பவர் விஜயாவிடம் ‘‘ஊருக்குப் போகாதா, இங்கேயே இரு. ஒரு திருட்டு கேசுல உன்னோட பெரியப்பா மகன் வெள்ளையன பத்தி விசாரிக்க பாண்டிசேரி போலீஸ் வருவாங்க’’ என்று கூறியுள்ளார். சித்தியுடன் திரைப்படம் பார்த்துவிட்டு சித்தி வீட்டிலேயே தங்கிய விஜயாவை, நள்ளிரவு 12.00 மணியளவில் எழுப்பி அழைத்துச் சென்றுள்ளனர் புதுச்சேரி போலீசார். வழியில் செட்டிகுளம் என்ற இடத்தில் வேனை நிறுத்தி வெள்ளையன் பற்றி விஜயாவிடம் விசாரித்துவிட்டு அத்தியூர் அழைத்துச் செல்கின்றனர். அங்கிருந்த அவருடைய தந்தை மாசி, தாய் தங்கம்மாள் இருவரையும் வேனின் பின்புறம் ஏற்றிக்கொண்டு வெள்ளாமை கிராமத்திற்குச் சென்றனர். வேனில் விஜயா இருப்பது பின்புறமிருந்த அவரது பெற்றோருக்குத் தெரியாது. முன்புறமிருந்த விஜயாவிற்கு பின்புறம் தனது பெற்றோர் இருப்பது தெரியும்.
வெள்ளாமை கிராமத்தில் வெள்ளையனுக்கு சொந்தமான வயலுக்கு அருகே வேனை நிறுத்திவிட்டு, விஜயாவை மட்டும் அழைத்துச் செல்கின்றனர். அங்கிருந்த ஒரு மாட்டுக்கொட்டகை அருகில் வைத்து, 17 வயதான பழங்குடி இருளர் பெண் விஜயாவை பாண்டிச்சேரி போலீசார் 5 பேர் அடுத்தடுத்து பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளனர். ஆறாவதாக வந்த போலீஸ் இரக்கப்பட்டு, வலியால் துடித்துக்கொண்டிருந்த விஜயாவை தூக்கிவிட்டு யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். அதன்பிறகு அத்தியூர் சென்று அவரது பெற்றோர்களை இறக்கிவிடுகின்றனர். அதன்பிறகு சித்தரசூர் சென்று விஜயாவை விடுகின்றனர். அப்போது விடியற்காலை மணி 4.00.
மறுநாள் 30.7.93 அன்று மகளைத்தேடி தாய் தங்கம்மாள் சித்தரசூர் செல்கிறார். அசதியில் தூங்கிய மகளை எழுப்பி ஏன் வீட்டிற்கு வரவில்லை எனக்கேட்கிறார். நடந்ததை விஜயா கூறுகிறார். உடனே நேராக அனந்தபுரம் காவல் நிலையம் சென்று அங்கிருந்த உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் முறையிடுகின்றனர். ஆனால் அவர் பாதிப்புற்ற இருளர் பெண்களை திட்டி, மிரட்டி அனுப்பிவிடுகின்றார். அதன்பிறகு பல்வேறு நெருக்கடிகளுக்குப் பின்பு 13.8.93 அன்று வழக்கு பதிவு செய்யப்படுகின்றது. அதுவும் விஜயா அளித்த புகாரினை ஏற்காமல் போலீசாரே புகாரினை எழுதி கையெழுத்து மட்டும் வாங்கிக்கொண்டனர். அப்போதைய திண்டிவனம் ஆர்.டி.ஓ ஜெகதீசன் அவர்கள் விசாரித்து, பாலியல் வன்புணர்ச்சி நிகழ்ந்துள்ளதை உறுதி செய்து அரசுக்கு அறிக்கை அளித்தார். அதனைத் தொடர்ந்து தமிழக அரசு இவ்வழக்கில் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டது.
வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 2-7-1997 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் புதுச்சேரி போலீசார்களான நல்லாம் கிருஷ்ணராய பாபு (உதவி ஆய்வாளர்), வி.ராஜாராம் (தலைமைக் காவலர்), ஜி.பத்மநாபன் (காவலர்), கே.முனுசாமி (காவலர்), ஜி.சுப்புராயன் (காவலர்), கே.சசிகுமார் நாயர் (தலைமைக் காவலர்) ஆகியோர் விஜயாவை பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் இவ்வழக்கில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 பிரிவுகள் சேர்க்கப்பட்டன. மேலும், பாதிக்கப்பட்ட விஜயாவின் வேண்டுகோளை ஏற்று விழுப்புரம் முன்னாள் - அரசு குற்றவியல் வழக்கறிஞர் எம். ரகுமான் ஷெரிப் அவர்கள் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. 11-8-2006 அன்று விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி திரு. என். ரத்னராஜ் அவர்கள் புதுச்சேரி போலீசார் ஆறுபேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூபாய் 31,000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
பாதிக்கப்பட்ட பழங்குடி இருளர் விஜயாவுக்கு 13 ஆண்டுகள் கழித்து நீதிகிடைத்ததே என ஆறுதல் அடைவதற்குள், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட புதுச்சேரி போலீசார் ஆறு பேருக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.சி.ஆறுமுகம் ஆகியோர் பிணை வழங்கினர். தண்டனை வழங்கி மூன்று மாதத்திற்குள் பிணை வழங்கப்பட்டது என்பது விஜயாவுக்கு காலங்கடந்து கிடைத்த நீதியைக் கேள்விக் குறியாக்கியது.
மேலும், பாலியல் வன்கொடுமை செய்த புதுச்சேரி போலீசார் புதுச்சேரி அரசில் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தண்டனை அளிக்கப்பட்ட நாள் வரை அதாவது 13 ஆண்டுகள் பணியில் இருந்து வந்தனர். மேலும், பலருக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டது. புதுச்சேரியில் கோ.சுகுமாரன் முயற்சியில் நடைபெற்ற மனித உரிமை ஆர்வலர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து 5-1-2007 அன்றுதான் ஆறு போலீசாரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதன்பிறகு இறுதியாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம் புதுச்சேரி போலீசாருக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டு, பழங்குடியினபெண் விஜயாவை பாலியல் வன்புணர்ச்சி செய்த பாண்டிச்சேரி போலீசார் அனைவரையும் விடுதலை செய்தது. அதன்பிறகு அப்போலீசார் மீண்டும் வேலையில் சேர்ந்து விருப்ப ஓய்வு பெற்று, அரசின் அனைத்து ஒய்வூதியப் பலனையும் பெற்றும் நிம்மதியாகவும், வசதியாகவும் வாழ்ந்துவருகின்றனர். குற்றமிழைத்தவர்கள் எவ்வித பாதிப்பும் இன்றி வாழ்கின்றனர்.
பாதிப்பிற்கு ஆளான விஜயா கடைசி வரை உறுதியாக நின்றார். ஆனால் இப்போது உயிரோடு இல்லை. குற்றவாளிகளை தப்பிக்க நீதிபதியும், நீதிமன்றங்களும் தயாராக உள்ளது. ஆனால், பாதிப்புற்ற விஜயாவிற்கு வன்கொடுமை தடுப்புச் சட்ட்த்தின் கீழ் உரிய நீதி கிடைத்திருந்தால், இந்த இளம் வயதில் இவ்வாறு இறந்திருக்க மாட்டார். பாலியல் வன்புணர்ச்சி அல்லது கொலையான பாதிப்புற்றோர் அல்லது பாதிப்புற்றோர் குடும்பத்திற்கு வன்கொடுமை தடுப்புச் சட்ட்த்தின் கீழ் அரசு வேலை அல்லது ஓய்வூதியம், வீடு ஆகியவை வழங்கப்படவேண்டும். சட்டத்திலுள்ள இவைகளோ நீதியின்படி நீதிபதியோ அல்லது அரசோ வழங்கியிருந்தால் வியஜா இன்னும் பல்லாண்டுகள் உலகில் உயிரோடும், கெளரவத்தோடும் வாழ்ந்திருப்பார்.
சட்டமும், நீதியும், அரசும் இணைந்து விஜயாவை படுகொலை செய்துள்ளது. நீதித்துறையே இதன் சாட்சியாக உள்ளது. இதனை யார் விசாரிக்க முடியும்? எல்லாவே வெளிப்படையாக உள்ளது.
காலை பேராசிரியர் கல்யாணி மூலமாக தகவல் அறிந்து அத்தியூர் கிராமத்திற்குச் சென்றோம். பேராசிரியர் கல்யாணி, புதுவை கோ.சுகுமாரன், இவ்வழக்கில் புதுச்சேரி போலீசாருக்கு ஆயுள் தண்டனை கிடைக்க திறம்பட வழக்கு நடத்திய சிறப்பு வழக்கறிஞர் திரு.ஷெரீப், பழங்குடி இருளர் முன்னணி தோழர் சுடரொளி சுந்தரம், சகோதரி லூசினா, வழக்கறிஞர் லூசி ஆகியோருடன் தம்பிகள் பாபு, செந்தில் மற்றும் நான் உள்ளிட்ட அனைவரும் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று அடக்கம் செய்யும் உடனிருந்து கனத்த இதயத்துடன் கிராமத்திலிருந்து கிளம்பி வந்தோம்.
No comments:
Post a Comment