Tuesday, February 26, 2008

நவீன தீண்டாமை ..... தீர்வு ?

நவீன தீண்டாமை

கோவை மாவட்டம், உடுமலைப் பேட்டை வட்டம், பாப்பான்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சாளரப்பட்டி கிராமத்தில் சுமார் 70 தாழ்த்தப்பட்ட அருந்ததியர் குடும்பங்களும், சுமார் 600-க்கும் மேற்பட்ட சாதி இந்துக்கள் குடும்பங்களும் வாழ்ந்து வருகிறார்கள். இக்கிராமத்தில் சாதி இந்துக்களால் நடத்தப்படும் 11 தேநீர் கடைகளிலும் இரட்டை டம்ளர் முறை நடைமுறையில் உள்ளது. இந்த நடைமுறையை நீக்கி, தேநீர் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆதித்தமிழர் பேரவையின் மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர் அருந்ததியன் குமரலிங்கம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகார் மனு ஏற்புச் சான்று எண் 16/2008. போலீசார் நடவடிக்கை எடுக்காமல் சமாதானம் பேசியுள்ளனர். இதனிடையே சாதி இந்துக்கள் 11 தேநீர் கடைகளையும் அடைத்து எதிர்த்துள்ளனர். தினமும் மூடியிருப்பதால் வருமானம் பாதிக்கிறது என்பதால் கடந்த 14-ஆம் தேதி இரண்டு தேநீர் கடைக்காரர்கள் கடையை திறந்துள்ளனர். பிற தேநீர் கடைக்காரர்களும், சாதி இந்துக்களும் சேர்ந்து, அந்த இரண்டு கடைகளையும் அடித்து உடைத்துள்ளனர். அதே நேரத்தில், உடுமலைப்பேட்டையில் ஆர்பாட்டத்தை முடித்து விட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர் அருந்ததியர்கள். இந்நிலையில் ஊர்த்தெருவில் உள்ள சின்னான்டவர் கோயிலில் தலித்துகள் நுழையப்போவதாக பொய்ப்பிரச்சாரம் செய்து, ஊரில் உள்ள பிற சாதி இந்துக்களையும் அழைத்துக்கொண்டு தலித் குடியிருப்பிற்குள் நுழைந்து, வீட்டில் இருந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள், வயதானவர் என அனைவரையும் தாக்கி, அடித்துக் காயப்படுத்தி உள்ளனர். இரண்டு வீட்டருகில் தீ வைத்தும் எரித்துள்ளனர். சாதி இந்துக்களின் தாக்குதலில் காயமடைந்த சுமார் 18 தலித்துகள் உடுமலை, கோவை, திருப்பூர் மருத்துவமனைகளில் சிகிச்சப் பெற்று வருகிறார்கள்மேற்படி சம்பவம் தொடர்பாக விசாரித்ததில் கீழ்கண்டவைகளை அறியமுடிந்தது.

உடுமலைப்பேட்டை வட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களிலும், மேற்படி சாளரப்பட்டி கிராமத்திலும் தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறை நடைமுறையில் உள்ளது என்பதையும், தலித் மக்களுக்கு தனி குவளையில் தேநீர் தரப்படுகிறது என்பதையும், தேநீரை வெளியில் நின்றுகொண்டோ அல்லது தரையில் அமர்ந்துகொண்டோ குடிக்கின்ற நிலை உள்ளது என்பதையும், மேற்படி 11 தேநீர் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, இரட்டை டம்ளர் முறையை தடுக்கக்கோரி, ஆதித்தமிழர் பேரைவயின் மடத்துக்குளம் ஒன்றியச் செயலாளர் அருந்ததியன் கடந்த 07.02.08 அன்று குமரலிங்கம் காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளார், ரசீது எண் 16/2008 என்பதையும் கண்டறிய முடிந்தது.

புகாரைப்பெற்ற குமரலிங்கம் காவல் நிலைய ஆய்வாளர் பழனிமுத்து, தேநீர் கடைக்காரர்கள் அனைவரையும் அழைத்துப் பேசி, கடைகளில் இனி அனைவருக்கும் ஒரே மாதிரியான தம்ளரில் தேநீர் கொடுக்குமாறு பேசியுள்ளார்.

சாதி இந்து சமூகத்தைச் சேர்ந்த தேநீர் கடைக்காரர்கள் இந்த முடிவை ஏற்காமல் 11 தேநீர் கடைகளையும் அடைத்து எதிர்த்துள்ளனர். வருமானம் போகின்றதே என கிருஷ்ணசாமி செட்டியார், கருணாநிதி செட்டியார் ஆகிய இருவரும் கடந்த 14.02.08 அன்று தங்களது தேநீர் கடைகளை திறந்துள்ளார்கள் என்பதையும், பிற தேநீர் கடைக்காரர்களும், ஊரின் சாதி இந்துக்களும் சேர்ந்து, ஊர்க் கட்டுமானத்தை மீறி எப்படி கடையைத் திறக்கலாம் எனக்கூறி இரண்டு தேநீர் கடைகளுக்குள்ளும் புகுந்து கடையில் இருந்த பொருட்கள் அனைத்தையும் அடித்து உடைத்துள்ளனர்.

தகவலறிந்த போலீசார் கிராமத்திற்கு வந்துள்ளனர். பின்பு வட்டாட்சியர் சந்திரபோசு ஊர் மக்கள் அனைவரையும் மறுநாள் 15.02.08 அன்று குமரலிங்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். தொடர்ந்து போலீசார் பாதுகாப்பில் இருக்கும் படியும், தேநீர் கடைகளில், ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர் பயன்படுத்தும் படியும் பேசியுள்ளார். ஆனால் தேநீர் கடைக்காரர்கள் வட்டாட்சியரின் இந்த அறிவுறுத்தலையும் ஏற்காமல் எதிர்த்துள்ளனர். தொடர்ந்து தேநீர் கடைகளை அடைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ஆதித் தமிழர் பேரவை அமைப்பினர் உடுமலைப்பேட்டையில், கடந்த 07.02.08 அன்று மேற்படி அருந்ததியன் கொடுத்த புகாரின்மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர். ஆர்பாட்டத்தை முடித்துவிட்டு ஆதித்தழிழர் பேரவையைச் சேர்ந்த சாளரப்பட்டி பூபதி, கோட்டமங்கலம் வீராச்சாமி ஆகிய இருவரும் டி.வி.எஸ்.சுசுகி வண்டியில் சாளரப்பட்டி சென்றுள்ளனர். அங்கிருந்த அருந்ததியர் மக்களிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வீராச்சாமி கிளம்பியுள்ளார். அப்போது அவருடன் முருகன் என்பவரும் வண்டியில் சென்றுள்ளார்.

மேற்படி வீராச்சாமி, முருகன் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் ஊர்த்தெரு வழியாக செல்லும்போது, சாதி இந்து சமூகத்தைச் சேர்ந்த கனகராஜ் த/பெ முத்துசாமி கவுன்டர், மாரிமுத்து த/பெ வேலுச்சாமி, வேலுக்கண்ணன் த/பெ சின்னசாமி, வெள்ளியங்கிரி த/பெ முருகேசன், மயில்சாமி த/பெ பழனி கவுண்டர் உள்ளிட்ட சுமார் 25 பேர் மேற்படி வீராச்சாமி, முருகன் ஆகிய இருவரையும் வழி மறித்து கையில் வைத்திருந்த தடி, அருவாள், கத்தி, வண்டிப்பட்டா போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். ‘‘எங்களை எதிர்த்து ஆர்பாட்டம் செஞ்சிட்டு, சக்கிலி தாயாலிங்களா இங்க எங்க ஊருக்கு வர்ரீங்களா’’ என்றும், ‘‘நீங்கதான் இங்க வந்து இங்க இருக்கிற சக்கிலியன்கள தூண்டி விடுறீங்களா’’ என்றும் மிரட்டியுள்ளனர். இவ்வாறு தாக்கபட்டதில் மேற்படி வீராச்சாமிக்கு மூக்கிலும், மார்பிலும் கடுமையாக அடிப்பட்டுள்ளார்.

ஊர்த்தெருவில் மேற்படி வீராச்சாமியை அடித்த சாதி இந்துக்கள், சுமார் 200&க்கும் மேற்பட்டோர் அருந்ததியர் குடியிருப்பிற்குள் புகுந்து வீடுகளையும், கண்ணில் பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். சாதி இந்துக்களின் தாக்குதலில் அருந்ததியர் மக்களின் 16 வீடுகள் சேதமடைந்துள்ளன. ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட 18 பேர் கடுமையாக காயமடைந்து உடுமலைபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். இரண்டு வீடுகளில் துணிகளையும், ஓலைகளையும் தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.
சாதி இந்துக்களின் தாக்குதலில் காயமடைந்த மேற்படி வீராச்சாமி, நடந்த சம்பவம் தொடர்பாக குமரலிங்கம் காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளார். கா.நி.கு.எண் 24/08 பிரிவுகள் 147,148,341,324,307 இதச உடன் 3(1)(x) எஸ்.சி/எஸ்.டி சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்ய்துள்ளனர். அருந்ததியர்கள் குடியிருப்பிற்குள் புகுந்து சாதி இந்துக்கள் தாக்கியது தொடர்பாக மாரானி த/பெ திருமால் என்பவர் தந்த புகாரின் பேரில் கா.நி.கு.எண் 26/08 பிரிவுகள் 147,148, 324,307 இதச உடன் 3(1)(x) எஸ்.சி/எஸ்.டி சட்டம் ஆகியவற்றின் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 14&ஆம் தேதி நிகழ்ந்த சம்பவத்திலிருந்து போலீசார் பாதுகாப்பிற்கு கிராமத்தில் இருந்து வருகிறார்கள். ஆனால் சாதி இந்துக்கள் அருந்ததியர் குடியிருப்பிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி முடிக்கும் வரை போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், சாதி இந்துக்களுக்கு ஆதரவாகவே இருந்துள்ளார்கள்.
சாதி இந்துக்களின் தாக்குதலில் காயமடைந்த தலித் மக்களுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பதையும், அடிபட்டு வந்தபோது முதலுதவி செய்து உடனே அனுப்பும் முயற்சி நடந்துள்ளது என்பதையும், அதன்பின்பு கடுமையான வற்புறுத்தலுக்கு பின்புதான் உள்ளிருப்பு நோயாளியாக வைத்து சிகிச்சை அளிக்க தொடங்கியுள்ளார்கள் என்பதையும் அறிய முடிந்தது.

இரட்டை டம்ளர் முறையை நீக்கக் கோரி காவல் நிலையத்தில் கொடுத்ததற்காக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அருந்ததியர்கள் மக்களையும், அவர்களது வீடுகளையும் அடித்து உடைத்த சாதி இந்துக்கள், ‘‘அருந்ததியர்கள் சின்னான்டவர் கோயில் பூட்டை உடைத்து நுழைய முயன்றார்கள். தடுத்தத்ற்காக எங்களைத் தாக்கினார்கள்’’ என்று அப்பாவி தலித்துகள் மீது பொய்புகார் கொடுத்து, பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சாதி இந்துக்களால் மீண்டும் தாக்கப்படலாம், அல்லது தொடர்ந்து தாக்கப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாக பல அருந்தியர் குடும்பங்கள் ஊரைவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றனர்.

பள்ளியில் பயிலும் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 70 மாணவ, மாணவிகள், சாதி இந்து மாணவர்களால் தாக்கப்படலாம் என்பதால் பள்ளிக்குச் செல்லவில்லை என்பதையும், கடந்த 18.02.07 அன்று அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளை சாதி இந்து மாணவர்கள் தாக்கியுள்ளனர் என்பதையும், நடுநிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடியில் சாதி இந்து சமூகத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் மட்டுமே வந்திருந்தனர் என்பதையும் அறிந்தோம்.

மேற்படி நடுநிலைப்பள்ளியில் பயில்கின்ற அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் மதிய சத்துணவு சாப்பாட்டை, வகுப்பறைகளின் வெளி வராண்டாவில் அமர்ந்துதான் சாப்பிடுகிறார்கள். அனைவரும் அங்குதான் செருப்புகளை விட்டு வைக்கின்றார்கள். அந்த செருப்புகளின் அருகில் அமர்ந்துதான் தலித் மாணவர்கள் சாப்பிடுகிறார்கள். சாதி இந்து மாணவர்கள் வகுப்பறைகளின் உள்ளே வசதியாக உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள்.

கடந்த 20.02.08 அன்று மேற்படி கிராமத்தைப் பார்வையிட சென்ற மாவட்ட ஆட்சியர் திரு. நீரஜ் மித்தல் அவர்கள், பாதிக்கப்பட்ட தலித் குடியிருப்பை சில நிமிடங்கள் மட்டும் பார்வையிட்டு, தங்கள் குறைகளை முறையிட வந்த தலித் மக்களிடம் ஓரிரு நிமிடங்கள் மட்டும் பேசி, தொடர்ந்து மக்கள் பேசுவதற்குள் கிளம்பி, சாதி இந்துக்களின் பகுதிக்கு சென்று, அங்கங்கே நின்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சாதி இந்துக்களை அவராகவே அழைத்து பேசத்தொடங்கினார். அப்போது சாதி இந்து சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், ‘‘இனிமேல் டீ கடைகளில் அவங்களூக்கு(தலித் மக்களுக்கு) பிளாஸ்டிக் டம்ளரில் டீ தருகிறோம். சின்னான்டவர் கோயிலுக்குள் விடமுடியாது. சமுதாயக்கூடத்தில் வருவதற்கு வேண்டுமானால் ஊர்க்கூட்டம் போட்டு பேசிவிட்டு சொல்கிறோம்’’ என்று தாங்களே முன்வந்து தலித் மக்கள் மீது காட்டிவரும் சாதியப் பாகுபாட்டை ஒத்துக்கொண்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் அவர்களுடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள், அனைத்து பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள், மனித உரிமை அமைப்பினர் ஆகியோர் உடனிருந்தனர்.

இனியேனும் அரசு... இவைகளைச் செய்யுமா?
தமிழக அரசின் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவில் உள்ள காவல் அதிகாரிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேநீர் கடைகளில் டிஸ்போசல் கப் என்கிற ஒரு முறை மட்டுமே பயன்படுத்துகிற பிளாஸ்டி டம்ளரில் தேநீர் குடிக்க வைத்து, புகைப்படம் எடுத்து, இரட்டை டம்ளர் முறை இல்லை என பத்திரிக்கைளில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேற்படி சாளரப்பட்டி கிராமத்தில் இருந்த இரட்டை டம்ளர் முறையை தடுத்து நிறுத்தவேண்டும் என தாழ்த்தப்பட்ட சமூகத்து மக்கள் புகார் கொடுத்ததால், சாதி இந்துக்களால் மிகப்பெரிய வன்கொடுமைக்கு ஆளாக நேரிட்டது. எனவே, தமிழ அரசு உடனடியாக இரட்டை டம்ளர் முறை மூலம் தலித் மக்கள் மீது நிகழ்கின்ற தீண்டாமை வன்கொடுமையினை தடுத்து நிறுத்த புதிய சட்டம் இயற்றி, உடனடியாக அதை நடைமுறைப் படுத்த வேண்டும்.
மேற்படி இரட்டை டம்ளர் முறையை தடுக்க டிஸ்போசல் கப் என்கிற ஒரு முறை மட்டுமே பயன்படுத்துகிற பிளாஸ்டி டம்ளரில் தேநீர் கொடுத்து நவீன தீண்டாமை நிகழ்ந்து வருகிறது. அரசு தனிக்கவனம் செலுத்தி இந்த நவீன தீண்டாமையை தடுத்து நிறுத்தவேண்டும். மேலும் அவ்வாறு பிளாஸ்டிக் டம்ளரில் தேநீர் தரும் கடைக்காரர்கள் மீது சுற்றுச்சூழல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

No comments: