Saturday, January 6, 2007

கொத்தடிமைத் தமிழர்கள்

தமிழகத்தின் சில கிராமப்பகுதிகளில், தீபாவளியன்று ஆடு வெட்டுவார்கள். தீபாவளியன்று ஆடு கிடைக்காமல் போய்விடும் என்பதால், அதற்கு முன்பிருந்தே நிறைய ஆடுகளைப் பிடித்தும், வாங்கியும் அடைத்து வைப்பார்கள். இந்த ஆடுகளைப் போன்றுதான் தற்பொழுது, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பழங்குடி இருளர்கள், கரும்பு மேஸ்திரிகளால் கடத்திச் செல்லப்பட்டு, மறைவான இடத்தில் அடைத்து வைக்கப்படுகின்றனர். தேவையான ஆட்கள் கிடைத்ததும், நல்ல விலைக்கு கொத்தடிமைகளாக லாரிகளில் ஆந்திராவிற்கு அனுப்பப்படுகிறார்கள்.

தமிழகத்தில் 36 வகைப் பழங்குடியினர் வசிக்கின்றனர். இந்திய மக்கள் தொகையில் 8 சதவிகிதம் உள்ள பழங்குடியினர், தமிழக மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் இருக்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் 0.52% ஆகவும், விழுப்புரம் மாவட்டத்தில் 2.16%ஆகவும் உள்ள இருளர்கள், இன்று கொத்தடிமைகளாக ஆந்திராவிற்குக் கடத்தப்படுகிறார்கள். கிராமப்புறங்களில் ரெட்டியார் போன்றோர் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் மிகப்பெரும் ஆதிக்க சக்திகளாக வலம் வருகிறார்கள். பழங்குடியினர் மட்டும் அடிமைகளாகவும், கேட்பதற்கு நாதியற்ற நிலையில், அச்சத்துடனும் பாதுகாப்பற்ற சூழ்நிலையிலும் வாழ்ந்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தின் கீழ் அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவர், கரும்பு மேஸ்திரி. இருளர்களை நீண்ட நாட்களாக ஆந்திராவிற்கு அனுப்பும் இவர், தி.மு.க.வில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார். இவர் மனைவி, தி.மு.க.வின் அருங்குண ஒன்றியத்தின் கவுன்சிலராக இருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு அதிகாரிகளை மிரட்டியும், பணங்கொடுத்தும் ஆதிக்கம், அதிகாரம் செய்கிறார். அருங்குணம் அருகில் உள்ள பாரதி நகல், நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் குடும்பங்கள் உள்ளன. இவர்களில் 46 குடும்பத்திற்கு காளிமுத்து முன்பணமாக 2,75,480 ரூபாய் கொடுத்து அனைவரிடமும் பத்திரம் எழுதி வாங்கி உள்ளார்; 4 குடும்பத்தினரிடமிருந்து வீட்டுமனைப் பட்டாவையும் பிடுங்கி வைத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் அவர்களிடம், இன்னும் கடன் முடியவில்லை என்று மிரட்டியே அவர்களைப் பிடித்து வைத்து தொடர்ந்து அனுப்பி வருகிறார்.

இந்த ஆண்டு கரும்பு வெட்ட ஆந்திராவுக்கு ஆட்களை அனுப்பும் காலம் நெருங்கிவிட்டதால், பல பகுதிகளில் இருந்து ஆட்களைப் பிடித்துக் கொண்டுவந்து, காளிமுத்து தன் வீட்டில் அடைத்து வைத்துக் கொள்வார். செல்வம் என்ற இருளர், ஆந்திரா போக மறுத்துள்ளார். இதனால், தேவராசனை 15.11.05 அன்று காளிமுத்து கடத்திக் கொண்டுபோய் அவரது வீட்டில் அடைத்து வைத்துள்ளார். அவரை மீட்கச் சென்ற செல்வம், அவரது தந்தை பாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் கடுமையாகத் தாக்கி, சித்திரவதை செய்த காளிமுத்து, ஓர் அறையில் அடைத்து வைத்துப் பூட்டிவிட்டார். அங்கு ஏற்கனவே, பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 11 இருளர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் அன்று இரவு புகார் தரப்பட்டது. அன்றிரவே பழங்குடியினரை அடையாளம் காட்ட கூடவே அழைத்துச் சென்று, காளிமுத்துவை போலிசார் கைது செய்தனர். ஆனால், சற்று நேரத்தில் நெல்லிக்குப்பம், பண்ருட்டி பகுதி தி.மு.க. பிரமுகர்கள் காளித்துவை அழைத்துச் சென்றுவிட்டனர். புகார் கொடுக்கச் சென்ற இருளர்கள், காவல் நிலயத்திலேயே தி.மு.க.வினரால் புகாரை வாபஸ் பெறும்படி மிரட்டப்பட்டுள்ளனர்.

அது மட்டுமின்றி, குப்பு என்பவன் வீட்டை காளிமுத்து தீ வைத்து எரித்துள்ளார். இதனால் பயந்துபோன பாரதி நகர் பழங்குடியினர் பலர், தமது ஊரைவிட்டு வெளியூரில் போய் தங்கியுள்ளனர். பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் மேற்கொண்ட முயற்சிக்குப் பிறகு, காளிமுத்து மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லிக்குப்பம் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் பலராமன், மருத்துவமனை வார்டில் பொறுப்பில் இருந்த ஆண் செவிலியர் கண்ணன் என்பவர் மூலம், காளிமுத்தால் பாதிக்கப்பட்ட செல்வம், பாலகிருஷ்ணன் இருவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாகப் படுக்கையில் இருக்கும்போதே, "காணவில்லை' எனப் பதிவேட்டில் எழுதி, போலி ஆவணங்களைத் தயாரித்துள்ளனர்.

இதேபோன்று பண்ருட்டி அருகே உள்ள பூங்குணம் கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி என்கிற கரும்பு மேஸ்திரியிடம், பாக்கி பணம் வாங்குவதற்காக, விழுப்புரம் மாவட்டம் பாப்பனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இருளர்களான கதிர்வேலு, அவர் மனைவி குப்பு இருவரும் சென்றுள்ளனர். கலியமூர்த்தி அவர்களுக்குப் பணம் தராமல், அவர்களை இழுத்துக் கொண்டு போய் எபிட்டவெளி என்ற கிராமத்தில் மறைத்து வைத்துள்ளார். 10 நாட்களாகியும் அவர்களை கலியமூர்த்தி விடவில்லை. காணாமல் போன தன் அண்ணன், அண்ணியைத் தேடி கிராமத்திற்குச் சென்ற முருகன் மற்றும் ராமு ஆகிய இருவரையும் கலியமூர்த்தியும், அவர் தம்பியும் கடுமையாக அடித்து, சித்திரவதை செய்துள்ளனர். முருகன் செங்கல் சூளையில் வேலை செய்து, வாங்கி வைத்திருந்த 10,045 ரூபாயையும் பிடுங்கிக் கொண்டு துரத்தி அடித்து உள்ளனர். இது தொடர்பாக பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கரும்பு வெட்டத் தொடங்குகின்ற இந்த மாதத்தில் டன் ஒன்றுக்கு, ஒரு நபருக்கு 100 ரூபாயும், இரண்டு மாதம் கழித்து 200 ரூபாய் எனவும் உயர்த்துவர். ஆனால், மேஸ்திரிகள் இருளர்களுக்கு வெறும் 80 ரூபாய் மட்டுமே கணக்கு எழுதுவார்கள். அதையும் கடனுக்கு வட்டி, போக்குவரத்துச் செலவு என கணக்கு எழுதி ஏமாற்றுவார்கள். பிறந்த கைக்குழந்தை இருந்தாலும் குடும்பத்துடன் சென்று, 8 மாதம் வேலை செய்தும் வெறும் கையுடன் திரும்புவார்கள் இருளர்கள். இது குறித்துப் பல்வேறு புகார்கள் மேலிடத்திற்குக் கொடுக்கப்பட்டும் எந்தப் பயனுமில்லை.

இதைவிட, நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு கொடுமையை அனுபவித்து, கொத்தடிமையாக உள்ளனர் விழுப்புரம் மாவட்ட இருளர்கள். 23.11.05 அன்று இரவு 12 மணி அளவில், கோலியனூர் கரும்பு மேஸ்திரி பாலு என்பவருடைய அடியாட்கள் 8 பேர், ஒரு மினி லாரியில் இளங்காடு இருளர் குடியிருப்பிற்குச் சென்று, ஒவ்வொரு வீடாகக் கதவைத் தட்டி, கண்ணன், சுப்புராயன், ஜெயராமன் ஆகியோரை குண்டுக்கட்டாக வண்டியில் தூக்கிப் போட்டனர். இத்தகவலை ஊருக்குள் சொல்ல ஓடிய ஜெயராமன் மனைவி லட்சுமியையும் பிடித்து இழுத்து வண்டியில் தூக்கிப் போட்டுக் கொண்டு, கோலியனூர் சென்றனர். அவர்களை பாலு மேஸ்திரி வீட்டில் கொண்டுபோய் அடைத்துள்ளனர்.

அங்கு ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட இருளர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். பின்பு கண்ணன், சுப்புராயன் இருவரையும் பாலு வெளியில் அனுப்பியுள்ளார். தன்னைக் கடத்திக் கொண்டு போன பாலு மீது நடவடிக்கை எடுத்து, அவரால் அடைத்து வைக்கப்பட்டுள்ள மற்றவர்களையும் விடுதலை செய்யும்படி வளவனார் காவல் நிலையத்தில் கண்ணன் புகார் செய்தார். ஆனால், போலிசார் பாலு மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கண்ணனிடம் சமாதானமாகப் போகும்படி கூறி உள்ளனர். இதே பாலு மேஸ்திரி மூலம், புதகரிளத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி, அவர் மனைவி அஞ்சலை, மகன் முருகன், மகள் சுதா ஆகியோர் ஆந்திராவுக்கு நான்கு ஆண்டுகளாக கரும்பு வெட்டச் சென்று வந்தனர். ஆளுக்கு நூறு ரூபாய் என மொத்தம் 400 ரூபாய் தந்து கரும்பு வெட்ட அனுப்பி உள்ளார் பாலு மேஸ்திரி.

வேலை செய்த இடத்தில் கரும்பு உரிமையாளர் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு அய்ந்து ரூபாயும், ஒரு லிட்டர் அரிசியும் தந்துள்ளனர். எட்டு மாதம் வேலை செய்யும் இருளர்களுக்கு மேஸ்திரி பாலு வேறு எந்தப் பணம் தந்ததில்லை. அதனால் கலியமூர்த்தி 5 ஆண்டுகள் கரும்பு வெட்ட ஆந்திரா போக மறுத்துள்ளார். அதனால் பாலு சவுக்குக் கட்டையால் கலியமூர்த்தியை கடுமையாக அடித்துள்ளார். அதன் காரணமாக கலியமூர்த்தி உடல் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் எந்த வேலையும் செய்ய முடியாமல் இன்றுவரை அவதிப்படுகிறார்.

அதே ஊரில் இருந்தால் பாலுவால் தொடர்ந்து தொல்லைக்கு உள்ளாவோம் என்று பயந்த கலியமூர்த்தி, குடும்பத்துடன் சாலையாம்பாளையம் கிராமத்திற்குச் சென்று விட்டார். நான்கு ஆண்டுகளாக பாலுவால் எந்தப் பிரச்சனையுமின்றி வாழ்ந்தனர். பாலுவால் பாதிக்கப்பட்ட கண்ணன் காவல் நிலையத்தில் புகார் தந்த அன்று, சாலையாம்பாளையம் சென்று கலியமூர்த்தி குடும்பத்தினரிடம் கணக்கு பார்க்க வேண்டும், ஆந்திரா போக வேண்டும் என்று பாலு ஆட்கள் மிரட்டியுள்ளனர். கண்ணன், கலியமூர்த்தி மகன் முருகன் இருவரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து முறையிட்டு, புகார் தந்துள்ளனர்.

மேற்கூறிய அனைத்துச் சம்பவங்கள் குறித்தும் மாவட்ட ஆட்சியருக்கும், வருவாய்க் கோட்டாட்சியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. "கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டம் 1976'இன்படி, மாவட்ட ஆட்சியர்தான் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை மீட்க வேண்டும். இவர்களும் எதுவும் செய்யவில்லை. குற்றவியல் வழக்காக காவல் துறையும் எதுவும் செய்யவில்லை. ஒரு நபரோ அல்லது அவர் முன்னோரோ பணமோ அல்லது விவசாயப் பொருட்களோ ஒருவரிடம் இருந்து பெற்றதற்காக, அந்த நபரை தனக்காக உழைக்கும்படி சொல்வதும், ஏதேனும் வேலை செய்வதற்கு முன்பணம் எனக் கொடுப்பதோ கொத்தடிமை முறையாகும். கலியமூர்த்தி, காளிமுத்து, பாலு போன்ற கரும்பு மேஸ்திரிகளிடம் மட்டும் இல்லாமல், செங்கல் சூளைகளிலும் இருளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள்.

கொத்தடிமையாக இருந்தவர்களிடம், முன்பணமாகத் தரப்பட்ட தொகையை, தந்தவர் கேட்க முடியாது. ஆனால், அந்த முன்பணம் என்பதைச் சொல்லிச் சொல்லியே செங்கல், கரும்பு மேஸ்திரிகளால் இருளர்கள் அடிமைகளாக வைக்கப்படுகிறார்கள். கொத்தடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் மூலம் மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும். இருக்கின்ற வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கும் இருளர்களுக்கு மறுவாழ்வு எப்போது?


(நன்றி: தலித்முரசு டிசம்பர் 2005)



No comments: