நாய்க்கடிப் பிரச்சினை: நாடு தழுவிய தீர்வு தேவை.
இந்தியாவில் நாய்க்கடிச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருவது மிகுந்த கவலை அளிக்கிறது. தெரு நாய்களால் மட்டுமல்லாமல், வளர்ப்பு நாய்களாலும் ஆபத்து ஏற்படுவதைப் பார்க்க முடிகிறது. இவ்விஷயத்தில் அரசு ஒரு திட்டவட்டமான முடிவை எடுக்காதவரை, வெறிநோய் (ரேபிஸ்) போன்ற பாதிப்புகளுக்குப் பலரை இழக்க வேண்டிய சூழலுக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
2023-ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி, இந்தியாவில் தோராயமாக 6.2 கோடி தெருநாய்கள் உள்ளன. 2019-2022 காலக்கட்டத்தில், நாட்டில் 1.6 கோடி நாய்க்கடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 2023இல் மட்டும், 30 லட்சம் நாய்க்கடிச் சம்பவங்கள் பதிவாகின.
2024இல் 21.95 லட்சம் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. உலகளவில் வெறிநோய் தொடர்பான இறப்புகளில் இந்தியாவின் பங்கு 36% என்கிறது உலக சுகாதார நிறுவனம். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த கபடி வீரர் பிரிஜேஷ், இரண்டு மாதங்களுக்கு முன் நாய்க்குட்டி கடித்ததற்கு வெறிநோய்த் தடுப்பூசி போட்டுக்கொள்ளாததால் பரிதாபமாக உயிரிழக்க நேரிட்டது இதற்கு உதாரணம்.
தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் 2.80 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் 18 பேருக்கு வெறிநோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. 2024இல் மட்டும் தமிழகத்தில் 43 பேர் வெறிநோயால் இறந்துள்ளனர். இது முந்தைய ஐந்து ஆண்டுகளைவிட மிக அதிகம்.
நாய்களுக்கு வெறிநோய்த் தடுப்பூசிகளைச் செலுத்துவதில் காணப்படும் சுணக்கம் இத்தகைய பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது.
தெருநாய்களின் பிரச்சினை ஒரு பக்கம் என்றால், வளர்ப்பு நாய்களால் கடிக்கப்பட்டு பாதிப்புக்கு உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கையும் அச்சுறுத்துகிறது. ஜூலை 5 அன்று திருவள்ளூர் மப்பேடு என்கிற ஊரில் வளர்ப்பு நாயான ராட்வீலர் வகை நாய், ஏழு வயதுச் சிறுமியைக் கடித்ததில் அவர் படுகாயம் அடைந்த சம்பவம் ஓர் உதாரணம்.
ராட்வீலர், பிட்புல் டெரியர், அமெரிக்கன் புல்டாக் உள்ளிட்ட 23 ரக நாய்களை இறக்குமதி செய்யவும், விற்பனை செய்யவும், வளர்க்கவும் தடை விதிக்க மத்திய கால்நடைப் பராமரிப்பு - பால்வளத் துறை பரிந்துரைத்திருக்கிறது. இதுதொடர்பாக, அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. புதிதாக இந்த நாய்களை வாங்கவோ வளர்க்கவோ அனுமதி அளிக்க வேண்டாம் என்று உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே, இந்த ரக நாய்களை வளர்ப்பவர்கள் அவை இனப்பெருக்கம் செய்வதைத் தடைசெய்யும் சிகிச்சைகள் அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். எனினும், இதுவரை தேசிய அளவில் உறுதியான தடை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே, வளர்ப்பு நாய்களின் விஷயத்திலும் கண்டிப்பான வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.
இந்தியாவில் விலங்குப் பிறப்புக் கட்டுப்பாடு விதிகளின்படி (2001), தெருநாய்கள் கொல்லப்படுவதில்லை. கருத்தடைச் சிகிச்சை, தடுப்பூசி போன்ற சிகிச்சைகளே வழங்கப்படுகின்றன. தெருநாய்ப் பிரச்சினைகள் அதிகமாவதற்கு இந்த அணுகுமுறையும் ஒரு காரணம் என்கிற விமர்சனத்தில் உண்மை இல்லாமல் இல்லை.
நெதர்லாந்து போன்ற நாடுகளில், தெருநாய்களை முறையாகக் கண்காணிப்பது, அவற்றுக்குத் தடுப்பூசி போடுவது, கருத்தடைச் சிகிச்சை அளிப்பது போன்ற நடவடிக்கைகளுடன், செல்லப் பிராணிகளைத் தத்தெடுப்பதை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. செல்லப்பிராணிகளைக் கைவிடுவது உள்ளிட்ட விலங்கு கொடுமைகளுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களும் அங்கு நடைமுறையில் இருக்கின்றன.
அதேபோல், நாய் கடித்தாலே வெறிநோய்த் தொற்று ஏற்பட்டுவிடுவதில்லை. எனினும், இவ்விஷயத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். ஆரம்ப நிலையிலேயே உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டால், விபரீதங்களைத் தவிர்க்க முடியும் எனச் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். நாய்க்கடிச் சம்பவங்கள், வெறிநோய் பாதிப்பு என இந்த விவகாரம் மேலும் மேலும் மோசமடைந்துகொண்டிருக்கும் சூழலில், நாடு முழுமைக்கும் உறுதியான தீர்வை அரசு முன்வைக்க வேண்டும்.
- இந்து தமிழ்திசை, 18.007.2025