மீள்பதிவு 2014
-------------------------- -
நிறைவான 2014 – 1
எனது அப்பா தொ.பா.இராமசாமி. ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், தலைமை ஆசிரியராக பணியாற்றியவர். எப்போதும் பல்வேறு வகையான புத்தகங்களைப் படிப்பார். நிறைய குறிப்புகள் எடுப்பார். நிறைய கவிதைகள், சில சிறுகதைகள், தமிழ் சொற்கள் குறித்த கருத்துகள் என எழுதியுள்ளார். தனது இறுதிக் காலத்திற்குள் எப்படியேனும் அவைகளை புத்தகமாக பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
எனது இரு அண்ணன்கள் (துரையப்பன், அண்ணாதுரை) நிறைய கவிதை எழுதுவார்கள். அவர்களுக்கும் புத்தகமாக வேண்டும் என்ற கனவு உண்டு. இவர்களின் பாதிப்பில் நானும் கவிதைகள் எழுதத் தொடங்கினேன். கையெழுத்திலும், அச்சிலுமாக சிற்றிதழ்கள் சில கொண்டுவர முடிந்தது.
பிறகு, செயல்பாட்டுத் தளம் மாறியது. இலக்கியத்திலிருந்து சமூக அரசியல் ஈடுபாடுகளின் காரணமாக கண்ணோட்டம் – பார்வை விரிவடைந்து வளர்ந்தது. இத்தணையாண்டுகளுக்குப் பிறகு எனது தந்தை, அண்ணன்களின் விருப்பங்கள் என் மூலமாக நிறைவேறிய.. முக்கியத்துவம் மிகுந்த ஆண்டாக இது அமைந்தது.
இலக்கியம் குறித்த புத்தகம் அல்ல. சமூக கொடுமைகள் குறித்த புத்தகம். ’’நொறுக்கப்படும் மக்களும்.. மறுக்கப்படும் நீதியும்.” நூல் எழுதி வெளியான ஆண்டு. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் தலித் மற்றும் பழங்குடியினர் மீது கடந்த 2007 முதல் நிகழ்ந்த வன்கொடுமைகள், அதில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் செயல்பாடுகள் குறித்த ஒரு ஆய்வு நூல்.
குறிப்பாக இதில் மிக முக்கியமாக 1921 ஆம் ஆண்டு சென்னை மில் ஒன்றில் தலித் மக்கள் மீது நிகழ்த்த சாதிய வன்கொடுமைத் தாக்குதல் தொடங்கி 2014 மரணக்காணம் வன்கொடுமை நிகழ்வு வரையிலான தொகுப்பு மிகுந்த கவனம் பெற்றதாக அமைந்தது. என் எழுத்துகளுக்கு உந்து சக்தியாக உள்ள பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்களின் அணிந்துரை முக்கியமானதாகும்.
சாதிய உணர்வை கடக்க உதவும் நூல் என தமிழ் இந்துவும், சரியான நேரத்தில் வந்துள்ள முக்கியமான நூல் என ஜீனியர் விகடனும் நூலினை அறிமுகம் செய்தது பரவலான கவனம் பெற்றது. நூலினை முழுமையாக படித்து உள்வாங்கி அதனை வெளிப்படுத்தி எழுதிய திரு.நீதிராஜன்(தமிழ் இந்து), திரு.திருமாவேலன்(ஜீ.வி) இருவருக்கும் மிகுந்த நன்றிகள்.
மேலும் நண்பர்கள், தோழர்கள் பலரும் படித்துவிட்டு செயல்பாடுகளுக்கும், பயிற்சிகளுக்கும் பயன்படும் வகையில் உள்ளது எனத் தெரிவித்து உள்ளம் மகிழச் செய்தனர்.
எதிர்பார்த்த சிலரிடம் இருந்து எவ்வித கருத்தும் வெளிவராத அமைதியும், மெளனமும் பார்த்து ஆச்சரியபட்டதும் நிகழ்ந்தது.
இவைகளுக்கு காரணமான இருவரைக் குறிப்பிட்டுதான் நூல் வெளியீட்டு விழாவில் நன்றி கூறினேன். இப்போதும் அந்த இருவருக்கும் நன்றி கூறுவது கடமை.
ஒருவர் இந்த நூலினை நான் எழுத வாய்ப்பளித்து, எழுதுவதற்கான கருத்துகளைக் கூறி, அச்சகத்திலிருந்து நூல் வெளிவருகின்ற வரையிலான ஒவ்வொரு மணித்துளியும் நூல் குறித்து கலந்துரையாடி, நூலின் வெளியீட்டாளராகவும் உள்ள நான் பணியாற்றுகின்ற இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தின் இயக்குநர் திரு.வே.அ.இரமேசுநாதன். இவர் இந்த வாய்ப்பு அளிக்கவில்லை என்றால் இந்த நூல் இல்லை.
இன்னொருவர் எல்லோருக்கும் தெரிந்த பேராசிரியர் கல்யாணி. கடலூர் மாவட்டத்தில் சரியான சாலை வசதி கூட இல்லாத ஒரு சிறு கிராமத்தில் பிறந்த நான் இன்று பலருக்கும் தெரிகின்ற ஒரு அடையாளமாய் திண்டிவனத்தில் இருப்பதற்கு காரணமானவர். அழைத்து வந்ததுடன் வீட்டிலேயே வளர்த்து கற்றுக்கொள்வதற்கும், வளர்வதற்குமான எல்லா வாய்ப்புகளையும் வழங்கியவர். மனித உரிமை சார்ந்த கண்ணோட்டத்தையும், சமூக செயல்பாடுகளுக்கான கருத்தினையும் எனக்கு அளித்தவர். இன்றைய எனது செயல்பாடுகளுக்குமான மன வலிமையை உருவாக்கியவர். இவரின் கருத்தும், கண்ணோட்டமும் எனக்கு கிடைக்காமல் போயிருந்தாலும் இந்த நூல் இல்லை.
2014 மார்ச் மாதம் வெளியிடப்பட்டு தற்போது ஏறக்குறைய 800 புத்தகங்கள் விற்பனையாகியுள்ள நிலையில்.. முடிந்த 2014 நிறைவான மகிழ்வான ஆண்டாக அமைந்தது.
No comments:
Post a Comment