Sunday, July 15, 2012


தாய்த்தமிழ்ப் பள்ளி - மே மாதக் கூட்ட அறிக்கை
2012 மே மாதத்திற்கான ஆலோசனைக் கூட்டம் மாத இறுதி ஞாயிற்றுக் கிழமையான 27.05.12 அன்று மாலை பள்ளியில் நடைபெற்றது. பள்ளித் தாளாளர் பிரபா.கல்விமணி, அறக்கட்டளைத் துணைத் தலைவர் தி.அ.நசீர் அகமது, மேலாளர் இரா.முருகப்பன், மதிய உணவுத் திட்டத் தலைவர் மு.பூபால், தலைமை ஆசிரியர் சீ.தயாளீசுவரி, பெற்றோர் ஆசிரியர் கழகப் பொருளார் பா.செல்வி, அறங்காவலர்கள் இரா.வைத்திலிங்கம், கோ.வடிவேல், மதிய உணவுத் திட்ட ஆலோசகர் மருத்துவர் வே.மணி ஆகியோர் கலந்துகொண்ட இக்கூட்டம் 3.30 முதல் 5.30 வரை நடைபெற்றது. கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

12-ஆம் ஆண்டு விழா
· ஏப்ரல் 29, 30 ஆகிய இரண்டு நாட்களும் நடைபெற்ற 12&ஆம் ஆண்டுவிழாவிற்கு ரூ. 32,540/& நன்கொடையாக அளித்த பெற்றோர்கள், அறங்காவலர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்டோருக்கும்ஆண்டு விழாவில் பங்கேற்று சிறப்பித்த உதவித் தொடக்கக் கல்வி அலுவர், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர், ஒலக்கூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர்  உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
·         ஆண்டுவிழா செலவினமாக ரூ.25,000/- போக மீதமுள்ள தொகையினைப் பள்ளி ஆண்டு மலர் தயாரிக்க பயன்படுத்திக்கொள்வது எனத் தீர்மானிக்கப்படுகின்றது. மேலும் ஆண்டுமலர் சூன் இறுதிக்குள் தயாரிப்பது என்றும், அதனை சூலை மாதம் நடைபெற உள்ள காமராசர் பிறந்த தினவிழாவில் வெளியிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமனம்
  எதிர்வரும் கல்வியாண்டிற்கு தலைமையாசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு அளிக்கப்பட்ட விளம்பரத்தைத் தொடர்ந்து வரும் விண்ணப்பங்கள், ஏற்கனவே பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் ஆகியவைகளுக்கு, ஓய்வு பெற்ற ஆசிரியர்களான திரு.தருமமூர்த்தி, திரு.மரியதாஸ், திரு.அருணகிரி ஆகிய 3 பேர் கொண்ட குழு மூலம் நேர்காணல் நடத்தி, புதிய தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர்கள் ஆகியோரை தேர்ந்தெடுப்பது எனத் தீர்மானிக்கப்படுகின்றது.
  உதவி ஆசிரியர் செ.எத்திராஜ் அவர்களின் 22.05.12 அன்று அளித்த பணிவிலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டு, அவரின் பணியிடத்தில்,  ஏற்கனவே உதவி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவரும், பள்ளியில் நடத்தப்பட்ட சிறப்புப் பயிற்சி வகுப்புகளில் பாடங்கள் நடத்தியவருமான, முருங்கம்பாக்கம் அ.பெ.மே.நி.பள்ளியில் ஓராண்டு பெ.ஆ.க.சார்பில் பணியாற்றிய அனுபவம் உள்ளவருமான ந.சக்திவேல் என்பவரை 28.05.12 அன்று முதல் பணியமர்த்தி நியமனம் செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
   மேற்படி ஆசிரியர் செ.எத்திராஜ் அவர்கள் உடனடியாக பள்ளியில் இருந்து விலக இருப்பதால், அவர் பணியாற்றிய காலங்களில் பள்ளியில் முழுமையாக, சிறப்பாக செயலாற்றியமைக்காக 1 மாத ஊதியத்தினை பிடித்தம் செய்யாமல் அளித்து, அவரை 25.05.2012 முதல் பணியிலிருந்து விடுவிப்பது  எனமுடிவெடுக்கப்பட்டது. 
        மதிய உணவுத் திட்டத்தில் பணியாற்றி பணிவிலக கடிதம் கொடுத்துள்ள சமையலர்கள் இருவர் மற்றும் அமைப்பாளர் ஆகியோரை புதிய பணியாளர்கள் நியமிக்கின்ற வரையில் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. 

மாணவர் சேர்க்கை
 பள்ளியில் புதிய மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி, பள்ளியில் சுற்றுப்பகுதிகளில் எதிர்வரும் 04.05.12 அன்று மாலை 4.00 மணியளவில் மாணவர் சேர்க்கை ஊர்வலம் நடத்துவது எனத்தீர்மானிக்கப்பட்டது. 
   மேலும் அன்று 04.05.12 அன்று மாலை 6.00 மணியளவில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
வரவு&செலவு தணிக்கை
        கடந்த மூன்று ஆண்டுகளுக்கான வரவு மற்றும் செலவினங்களை சூன் மாத இறுதிக்குள் தணிக்கை செய்து, சான்று பெறுவது எனவும் தீர்மானம் செய்யப்பட்டது.
ஏப்ரல், மே மாத வரவு மற்றும் ஓராண்டு நன்கொடை இலக்கு
  ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரண்டு மாதங்களில் கட்டிட வளர்ச்சி நிதியாக ரூ60,300/- மதிய உணவுத் திட்டத்திற்கு ரூ.38,500/- இலவயக் கல்வித் திட்டத்திற்கு ரூ.77,052/-  நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.
        மேலும் எதிர்வரும் கல்வியாண்டில் இலவயக் கல்வித் திட்டத்திற்கு ரூ. 5 லட்சம், மதிய உணவுத் திட்டத்திற்கு ரூ.5 லட்சம், கட்டிட வளர்ச்சி நிதியாக ரூ. 20 லட்சம் இலக்கு வைத்து நன்கொடை திரட்ட முயற்சிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
நிர்வாகக் குழு உறுப்பினர்
•   பள்ளி வளர்ச்சிக்கான திட்டமிடுதல் மற்றும் செயலாற்றுதல் பணியினை செய்கின்ற நிர்வாகக் குழுவில் அறக்கட்டளைத் துணைத்தலைவர் தி.அ.நசீர் அகமது அவர்களையும் இணைத்துக்கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.  

No comments: