Wednesday, September 10, 2008

இரட்டணை : தடியடி, துப்பாக்கிச்சூடு









விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மயிலம் ஒன்றியத்தில் உள்ளது இரட்டணை கிராமம். சாதி இந்து வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாகவும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதற்கடுத்தும், பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்தவர்கள் உள்ளிட்ட, பிற சாதி இந்து சமூகத்தவர்களும் என சுமார் 10,000 குடும்பத்தினர் வசிக்கின்ற மிகப்பெரும் ஊராட்சியாகும். மொத்தம் 5 வார்டுகளைக் கொண்ட இக்கிராமத்திற்கு பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பவர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார்.















  • தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் இக்கிராமத்தில் நடைபெறும் வேலைகளை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வார்டைச் சேர்ந்தவர்கள் செய்து வந்துள்ளனர். தொடக்கத்தில், திட்டத்தில் கூறியுள்ளபடி நாளன்றுக்கு ரூ.80 கூலியாக வழங்கியுள்ளனர். அதன்பின்பு படிப்படியாக ரூ. 70, ரூ.60, ரூ.50 எனக் குறைத்துக் கொடுத்துள்ளனர். மக்கள் நலப் பணியாளர் நந்தகோபால், மற்றும் ஊராட்சி மன்ற எழுத்தர் கலையரசன் ஆகிய இருவரும் சேர்ந்து இந்த வேலைத் திட்டத்தை நடைமுறைபடுத்தியுள்ளனர். ஊராட்சி மன்றத் தலைவரான கலைச்செல்வனை கலந்தாலோசிக்காமல் செயல்பட்டுள்ளனர்.




  • கடந்த 16.08.08 அன்று ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தலித் மக்கள் இரண்டு குழுவாக சுமார் 500 பேரும், தலித் அல்லாத சாதி இந்துக்கள் ஒரு குழுவாக சுமார் 250 பேரும் என மொத்தம் சுமார் 750 பேர் இரட்டணையில் உள்ள புதுக்குளம், தலைவாழைப்பட்டு கால்வாய் ஆகிய பகுதிகளில் சீரமைப்பு பணிகளைச் செய்து வந்துள்ளனர். காலை 10 மணியளவில் மக்கள் நலப்பணியாளர் நந்தகோபால் வேலை செய்துகொண்டிருந்த மக்களிடம் வழக்கமாக செய்கின்ற வேலை அளவைவிட கூடுதலாக செய்யவேண்டும் என்றும், கூலியாக ரூ.40 அல்லது 45&தான் தருவோம், அதுவும் கூட பி.டி.ஓ தந்தால்தான் தரமுடியும் என்று கூறியுள்ளார்.• தினசரி செய்கின்ற வேலை அளவைவிட கூடுதலாக செய்ய வேண்டியிருப்பதுடன், வழக்கமான கூலியையும் குறைத்து கொடுப்பது ஏன் என்று வேலைசெய்துகொண்டிருந்த மக்கள் கேட்டுள்ளனர். அதற்கு மேற்படி மக்கள் நலப்பணியாளர் நந்தகோபால், ‘‘இதெல்லாம் எனக்குத்தெரியாது இஷ்டம் இருந்தா செய்ங்க. இல்லன்னா போங்க. அதிகாரிய வேணா போய் கேளுங்க’’ என்று கூறியுள்ளார். அதனால் மக்கள் அனைவரும் அதிகாரியிடம் விவரம் கேட்கலாம் என வேலைசெய்து கொண்டிருந்த இடத்திலிருந்து கிளம்பி ஊருக்குள் வந்து மேம்பாலத்தில் நின்றுள்ளனர்.• தகவலறிந்த திண்டிவனம் வட்டாட்சியர் கல்யாணம், மயிலம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் இளங்கோ ஆகியோர் கிராமத்திற்கு சென்றுள்ளனர். மேலும், வட்டாட்சியர் அக்கிராமத்திற்கு செல்லும்போது பெரியதச்சூர் காவல் நிலையத்திலிருந்து காவலர்களை வரவழைத்துள்ளார். காலை 11&00 மணி முதல் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்நிலையில் கூட்டம் கலையாமல் மேலும் மேலும் கூடியுள்ளது. பேச்சு வார்த்தையின் போது தற்போதைய தலைவர் கலைச்செல்வன், முன்னாள் தலைவர் ராமலிங்கம் ஆகியோரும் இருந்துள்ளனர்.• பெரியதச்சூர் போலீசார் தகவல் தந்து விக்கிரவாண்டி காவல் நிலையத்திலிருந்தும் காவலர்களை வரவழைத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சுமார் 2&00 மணியளவில் அதிரடிப்படைபோலீசார் வண்டி வந்துள்ளது. வண்டி வந்து நின்றதும் வண்டியில் இருந்து இறங்கிய அதிரடிப்படை போலீசார் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அங்கு நின்றிருந்த மக்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர்.• வந்ததும் தாக்கத்தொடங்கிய அதிரடிபடை போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலை எதிர்பார்க்காத மக்கள் சிதறி ஓடத்தொடங்கினர். அவ்வாறு ஓடிய மக்களை துரத்தி துரத்தி தாக்கியுள்ளனர் போலீசார். அதிகாரிகளிடம் பேசிக்கொண்டிருக்கும் மக்களை தாக்காதீர்கள் என தடுக்கமுயன்ற ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வன் மீதும், அவருடன் இருந்த அவரது தம்பியும், சட்டக்கல்லூரி மாணவருமான தமிழரசனையும் போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். • தன்னைத் தாக்கியவர்கள் விக்கிரவாண்டி காவல் நிலைய போலீசார் என்றும், தன்னை அவர்களுக்கு நன்கு தெரியும் என்றும், மேலும் தான் ஊராட்சி மன்றத் தலைவர் என்று கூறிய பின்பும் போலீசார் தன்னை கடுமையாகத் தாக்கினார்கள் என்று நேரில் சந்தித்தபோது ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வன் கூறியுள்ளார். போலீசாரின் தாக்குதலில் தலைவர் கலைச்செல்வனுக்கு தலையிலும், இடது கையிலும் கடுமையாக அடிப்பட்டுள்ளது. அவரது தம்பி தமிழரசனுக்கு இடது கை, முதுகு, தலை ஆகிய இடங்களில் கடுமையாக அடிபட்டு பாதிக்கப்பட்டுள்ளார்.• ஊராட்சி மன்றத் தலைவரும், அவரது தம்பியும் அடிபட்டு இரத்த காயத்தில் கீழே விழுந்ததை கண்ட மக்கள் பீதியில் அங்கும், இங்கும் கலைந்து ஓடியுள்ளனர். இந்நிலையில் அதிரடிப்படைபோலீசார் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பயந்து ஓடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.• போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் தலித் இளைஞரான மூர்த்தி முதுகில் குண்டடிபட்டு காயமடைந்தார்.• மறுநாள் வெளியான அனைத்து நாளிதழ்களிலும் இரட்டனை மக்கள் பயந்து ஓடுவதும், போலீசார் தடியடி நடத்துவதும், ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வன், அவரது தம்பி தமிழரசனையும் போலீசார் கூடி நின்று தாக்குவதும் புகைப்படங்களாக வெளியாகியுள்ளன.• முன்னறிவிப்பின்றி நடத்திய தடியடி தாக்குதலில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர். முதலில் சென்ற சிலருக்கு மட்டும் இரட்டனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சையளித்துள்ளனர். குறிப்பாக தடியடியில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு இதுவரை எந்தவித சிகிச்சையும் அளிக்கப்படவில்லை.• அதிரடிப்படை போலீசார் நடத்திய தடியடிக்கும், துப்பாக்கிச் சூட்டிற்கும் தான் உத்திடவில்லை என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அமுல்ராஜ் எமது கள ஆய்வுக்குழுவினரிடம் கூறினார்.• திண்டிவனம் வட்டாட்சியர் திரு.கல்யாணம் அவர்களை சந்தித்தபோது அவர் எம்மிடம், ‘‘மக்கள் சாலை மறியல் செய்கிறார்கள் என்ற தகவல் கிடைத்து கிராமத்திற்கு சென்றேன். ஊராட்சி ஒன்றிய அலுவலரையும் வரவழைத்து நான் ஒருபக்கமும், அவர் ஒருபக்கமுமாக மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்து, சமாதானப்படுத்திக்கொண்டிருந்தோம். எங்களுடன் பெரியத்தச்சூர் போலீசார் நின்றிருந்தனர். இந்நிலையில் அதிரடிப்படை போலீசார் கிராமத்திற்கு வந்தபோது, முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர் ராமலிங்கம், எங்கள் ஊருக்கு எதுக்கு போலீசை வரவழைத்தாய் என்று கேட்டு எங்களிடம் வாக்கு வாதம் செய்தார். அப்போது அவர் குடித்திருந்தார். என்னுடன் இருந்த போலீசார் அவரை தள்ளி நிற்கச்சொல்லி கைவைத்து தள்ளினார். அதில் அவர் கிழே விழுந்துவிட்டார். இதனைக் கண்டதும் மக்கள் தலைவரை அடிச்சிட்டாங்க என்று கூறி எங்களை தாக்க முயன்றார்கள். எங்கள் உயிரை பாதுகாத்துக்கொள்ள தடியடி நடத்த உத்திரவிட்டேன். மேலும் மக்கள் கைகளில் கட்டை, தடிகளுடன் எங்களைத் தாக்க வந்தார்கள். அதனால் துப்பாக்கிச் சூடு நடத்த உத்திரவிட்டேன். அதன் பின்பு அக்கிராமத்தை விட்டு வெளியேறி மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தேன்.’’ என்று கூறினார்.




  • மேலும் இக்கிராமத்தில், தலித் மக்கள் மீது தீண்டாமை பாகுபாடுகள் கடைபிடிக்கப்படுவதையும் கண்டறிய முடிந்தது. கிராமத்தில் உள்ள ஈஸ்வரன், பெருமாள், வெண்ணியம்மன் போன்ற கோயில்களில் தலித் மக்கள் வழிபாடு நடத்த சாதி இந்துக்கள் தடைசெய்துள்ளனர். கடந்த ஆண்டு இக்கிராமத்தில் உள்ள தலித் ஒருவர் திருமணம் நடத்துவதற்கு சாதி இந்துக்கள் திருமண மண்டபத்தை தருவதற்கு மறுத்துள்ளனர். மேலும், சாதி இந்துக்கள் வீட்டில் தலித் மக்கள் யாரும் உள்ளே நுழைய முடியாது. இதுபோன்ற தீண்டாமைகளை தலித் மக்கள் மீது, இக்கிராமத்தின் சாதி இந்துக்கள் கடைபிடித்து வருகின்றனர்.




பரிந்துரைகள் :








  • வேலை அதிகரிக்கப்பட்டு, கூலி குறைக்கப்பட்டது குறித்து அதிகாரிகளிடம் விவரம் கேட்க கூடியிருந்த மக்கள் மீது எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தி அத்துமீறலில் ஈடுப்பட்ட பெரியத்தச்சூர், விக்கிரவாண்டி காவல் நிலைய போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசார் ஆகிய அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து, துறை ரீதியான விசாரனைக்கு தமிழக அரசு உத்திரவிடவேண்டும். மேலும், தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள் அரசுக்கு பரிந்துரைகளை அளிக்கவேண்டும்.




  • துப்பாக்கிச்சூட்டில் காயம்பட்ட தலித் இளைஞன் மூர்த்திக்கு அரசு தனது பொறுப்பில் சென்னையில் உயர்மருத்துவ சிகிசைக்கு ஏற்பாடு செய்து, பத்தாம் வகுப்பு முடித்துள்ள மூர்த்திக்கு அரசு தனது செலவில் மேல்நிலை மற்றும் உயர்கல்வியை வழங்கவேண்டும்.




  • போலீசாரின் தடியடியில் காயம்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வன், அவரது தம்பி தமிழரசன் ஆகியோருக்கு உரிய நட்ட ஈடு வழங்குவதுடன், தடியடியில் காயம்பட்ட அனைவருக்கு அரசு நிவாரணம் வழங்கவேண்டும்




  • கிராமத்தில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் நடைபெற்றுள்ள அனைத்து பணிகளையும் மறு ஆய்வு செய்து, முறைகேட்டில் ஈடுப்பட்டுள்ள ஊராட்சி மன்ற எழுத்தர் கலையரசன், மக்கள் நலப்பணியாளர் நந்தகோபால் ஆகியோரை உடனடியாக பணிநீக்கம் செய்து, துறை ரீதியான விசாரணைக்கு அரசு உத்திரவிடவேண்டும்




  • உயரதிகாரிகளிடம் தகவல் அளிக்காமல், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கூடியிருந்த மக்கள் மீது தடியடியும், துப்பாக்கிச் சூடும் நடத்த திண்டிவனம் வட்டாட்சியர் கல்யாணம் உத்தரவிட்டுள்ளார். ஊரகவேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்தும் ஊராட்சி ஒன்றிய ஆணையர் இளங்கோ இரட்டனையில் இத்திட்டத்தில் உள்ள முறைகேடுகளை களைவதற்கான எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. இவர்களின் அலட்சியம் மற்றும் பொறுப்பற்ற தன்மையால் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், காவல் மற்றும் வருவாய்த் துறையின் அத்துமீறலை, வருவாய்த் துறை அதிகாரிகளே விசாரிப்பதன் மூலம், சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நியாயமும் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே, இரட்டனையில் நடந்த தடியடி, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட அத்துமீறல் சம்பவத்தை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடத்த உத்திரவிடவேண்டும்.




  • இக்கிராமத்தில் நிலவும் தீண்டாமை பாகுபாடுகளைக்களைய அரசு உரிய முன்முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். தீண்டாமை கடைபிடிப்பவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


  • தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டதின் கீழ் வழங்கப்படவேண்டிய கூலியை வழங்குமாறு கேட்ட மக்கள் மீது தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்திய வருவாய் துறை மற்றும் காவல் துறையின் இந்த அத்துமீறல் சம்பவம் குறித்தும், இக்கிராமத்தில் நிலவும் தீண்டாமை பாகுபாடுகள் குறித்தும், தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள் மட்டுமில்லாமல், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையமும் தாமாகவே முன்வந்து இவ்வழக்கை விசாரித்து, அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி, நிவாரணம் மற்றும் மருத்துவ சிகிச்சை கிடைக்கவும் வழிவகை செய்யவேண்டும்.




  • மக்கள் தங்கள் பிரசனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்வதற்கான குறைந்தபட்ச வழிமுறையாக சாலைமறியில் போன்ற போராட்டங்களை நடத்துகிறார்கள். அரசு அதிகாரிகள் பேசியபின்பு ஆறுதலடைந்த மக்கள் கலைந்துசெல்வார்கள். இதுதான் இம்மாவட்டத்திலும் நடைமுறையாக உள்ளது. ஆனால், மாவட்டத்திற்கு காவல் கண்காணிப்பாளராக திரு. அமுல்ராஜ் பொறுபேற்ற பின்பு, போராட்டடம் நடத்துகின்ற மக்கள் மீது தடியடி நடத்துவது, பெண்கள் என்று கூட பார்க்காமல் எல்லோரையும் கைது செய்து சிறையில் அடைப்பது, மேலும் துப்பாக்கிச் சூடு நடத்துவது போன்ற அத்துமீறல்கள் அனைத்தும் நடந்தேறி வருகின்றன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தைரியம் பெற்று மாவட்டத்தில் உள்ள பிற காவல் அதிகாரிகளும் தொடர்ந்து மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகின்றனர். சரவணபாக்கம், இறையூர், பேரங்கியூர், சொரத்தூர் போன்ற பல்வேறு சம்பங்களை உதாரணமாகச் சொல்லலாம். மாவட்டத்தில் எண்ணிலடங்காத வரலாற்று நினைவுச் சின்னங்கள் உள்ள நிலையில், எலவனாசூர்கோட்டை மலையிலிருந்த பீரங்கியை கொண்டுவந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிறுவியதன் மூலம் காவல் கண்காணிப்பாளரின் ஆயுதங்களின் மீதான ஈடுபாடும், ஆதிக்க மனோபாவத்தை அறியலாம்.




  • மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திரு.அமுல்ராஜ் பொறுபேற்றதிலிருந்து மாவட்டத்தில் நடைபெற்ற காவல் துறையின் அத்துமீறல் சம்பவங்கள் அனைத்தையும் விசாரனை கமிஷன் அமைத்து அரசு விசாரிக்கவேண்டும். மாவட்டத்தில் காவல் துறை தொடர்ந்து மனித உரிமை மீறலில் ஈடுபடுகின்ற தன்மைக்கு முழுமையான காரணமாக உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அமுல்ராஜை அரசு உடனடியாக இம்மாவட்டத்திலிருந்து நீக்கவேண்டும்.

No comments: