Friday, February 19, 2016

தலித் மக்கள் சார்பாக தமிழக சட்டமன்றத் தேர்தல்-2016 க்கான தேர்தல் அறிக்கை




தலித் மக்கள் சார்பாக 
தமிழக சட்டமன்றத் தேர்தல்-&2016 க்கான
தேர்தல் அறிக்கை
---------------------------------

சமுதாயத்தில் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள் ஜனநாயகத்தை அழிக்கின்ற கரையான்கள் ஆகும். ஆதலால் மக்களின் நல்வாழ்விற்கான திட்டங்கள், செயல்முறைகள் ஆகியவற்றைக் கொண்டதே உண்மையான ஜனநாயகம் ஆகும்.
                                                        &    புரட்சியாளர் அம்பேத்கர்


தமிழகத்தில் தலித் மக்களின் சமூக, பொருளாதார அரசியல் உரிமைகள் மற்றும்  வாழ்வியல் மேம்பாடுகளுக்காக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்ற சுமார் 15 மாவட்டங்களைச் சேர்ந்த 25 தலித் அமைப்புகள் இணைந்து உருவாக்கியதுதான் நீதிக்கான தலித் கூட்டமைப்பு(Dalit Collective for Justice).

இதேபோன்று தேசிய அளவில் 25 மாநிலங்களில் தலித் மனித உரிமை, வன்கொடுமை தடுப்புச் சட்டச் செயலாக்கம், அரசின் கொள்கை மற்றும் சட்ட உருவாக்கம் போன்றவற்றிற்காக பங்காற்றி வருகின்ற டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு கடந்த 17 வருடமாக செயல்படுகின்ற அமைப்பு நீதிக்கான தேசிய தலித் இயக்கம் (National Dalit Movement for justice).

விரைவில் தமிழக சட்ட மன்றத்திற்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தலித் மக்களின் சார்பாக இந்தத் தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகின்றது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்யவேண்டும். அதற்கு அக்கட்சிகளுக்கு ஆதரவளிக்கின்ற கட்சியின் துணை அமைப்புகள் மற்றும் பிற ஆதரவு இயக்கங்கள், அமைப்புகள் ஆகியவை கட்சிகளின் கவனத்திற்கு இக்கோரிக்கைகளை எடுத்துச் செல்லவேண்டும்.

தமிழகத்தில் தலித் மக்களின் நிலை
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் 20,13,78,086 தலித் மக்கள் வசிக்கின்றனர். இது மொத்த மக்கள் தொகையில் 16.6% ஆகும். தமிழ்நாட்டில் மொத்தம் 1,44,38,445 தலித் மக்கள் உள்ளனர். இது தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் 20.0% ஆகும்.
2004--&05 ஆண்டு கணக்கெடுப்பின்படி  நாட்டில் பழங்குடி மக்களில் 50% சதவீதம் பேரும், தாழ்த்தப்பட்ட மக்களில் 32% சதவீதம் பேரும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர்.
சமூக அடுக்கில் அனைத்து வகையிலும் கீழ் நிலையில் உள்ள தலித் மக்களை முன்னேற்றமடையச் செய்து மேம்படுத்த அரசியல் அமைப்பு மூலமாக பல்வேறு திட்டங்களும், சட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்கிற சமூக நீதி, சமூக பொருளாதார ரீதியிலான நலத் திட்டங்கள் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்டவைகள் உள்ளன.
நாடு முழுவதுமுள்ள தலித் மக்களின் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக 1965 ஆம் ஆண்டு அப்போதைய மத்திய அரசு நாடாளுமன்ற உறுப்பினர் எல்.இளையபெருமாள் தலைமையில் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்தது. 1969 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட அந்த அறிக்கையில் இந்தியா முழுவதும் தலித் மற்றும் பழங்குடி மக்கள் எதிர்கொள்ளும் வன்கொடுமைகளை பட்டியலிட்டிருந்த திரு இளையபெருமாள், தலித் மக்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலைமை கொஞ்சங்கூட முன்னேற்றமடையவில்லை என்பதைத் தெளிவாக குறிப்பிட்டிருந்தார். அதன்பிறகு 47 வருடங்கள் ஆனாலும் இந்நிலைகளில் எந்தமாற்றமும் இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
தமிழ்நாட்டில் கடந்த 2001 முதல் 2012 வரையிலான காலத்தில் மொத்தம் 18,623  வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 352 தலித்துகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 259  தலித் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு      உள்ளாக்கப்பட்டுள்ளனர். 2,269  தலித்துகள் கொடுந்தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இது வழக்காக பதிவு செய்யப்பட்டதால் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் மூலம் பதிவான தகவல்கள் ஆகும். வழக்காக பதிவு செய்யப்படாத வன்கொடுமைகள் ஏராளம் என்பது நாம் அறிந்ததே.
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குளில் குற்றவாளிகளை விடுதலை செய்யவதையே நீதிமன்றங்கள் தமது கடமையாகச் செய்துவருகின்றன. உதாரணத்திற்கு 2011, 2012, 2013 ஆகிய மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற வழக்கு விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மூன்று மாவட்டங்களில் பெறப்பட்ட தகவல்கள். மூன்றாண்டுகளில் கடலூர் மாவட்டத்தில் 69 வழக்குகளில் 42 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டு 9 இல் மட்டுமே தண்டனையளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மொத்தமுள்ள 9 வழக்கில் 8 விடுதலை செய்யப்பட்டு ஒன்றில் மட்டுமே தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலும் மொத்தமுள்ள 23 வழக்குகளில் ஒன்றில் மட்டுமே தண்டனையளிக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டில் நிலவுகின்ற ‘‘ஒயிட் காலர்பொருளாதாரச் சூழலில் தலித் மக்களுக்கு உரிய முக்கிய இடம் அளிக்கப்படவில்லை. கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டின் மூலம் இதை சரி செய்ய நமது அரசியல் சட்டங்கள் முயற்சித்தன. ஆனாலும் நடைமுறையில் இன்றளவும் செயல்படாமலே உள்ளதுதலித் மற்றும் பழங்குடியினருக்கான பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்படமால் உள்ளது.
மேலும், தலித் மக்களின் வீடுகளில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் 83 குழந்தைகள் ஒரு வயது முடிவதற்குள் இறந்துவிடுகின்றன. தலித் அல்லாதோர் வீடுகளில் இந்த விகிதாச்சாரம் 1,000 த்திற்கு 61 ஆக உள்ளது. ஐந்து வயதுக்கு உட்பட்ட தலித் குழந்தைகள் 1,000-ல் 39 பேர் இறந்துவிடுகின்றனர். தலித் அல்லாத குழந்தைகளில் இந்த விகிதாச்சாரம் 1,000:22 ஆகும். தலித் குழந்தைகளில் 75% நோஞ்சானாக இருக்கின்றன. தலித் அல்லாத குழந்தைகளில் இது 49%. 2000 ஆண்டு கணக்குப்படி 66% தலித் குடும்பங்கள் நிலமில்லாதவை. தலித் அல்லாத குடும்பங்களில் இது 33%.தலித் மக்களில் முக்கால்வாசிக்கும் மேல் கூலித் தொழிலாளிகளாகவே உள்ளனர்இதர சாதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களிடையே இந்த விகிதாச்சாரம் கால்வாசியாக உள்ளது. மேலும் தலித் அமைப்புகள், கட்சிகள் வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. அவர்களுக்கான உரிய முக்கியத்துவமோ, பிரநிதித்துவமோ கொடுக்கப்படுவது இல்லை. அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்படுவதும் இல்லை. முதன்மைக் கட்சிகளில் தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சிக்கு விசுவாகமாக மாற்றப்பட்டு வாய்மூடி அமைதியாக்கப்படுகின்றனர்
நாட்டில் மலிந்துவிட்ட ஊழல் காரணமாக அரசின் எந்தவொரு சலுகை அல்லது நலத்திட்டங்களையும் தலித் மக்களால் அணுகமுடியாத நிலை உள்ளது. சமூகம் நாகரீகமடைந்ததாக கூறிக்கொண்டாலும் இன்னும் தலித் மக்கள் கையால் மலம் அள்ளும் மற்றும் கழிவுகள் அகற்றும் தொழிலில் கட்டாயப்படுத்தப்பட்டு ஈடுபடுத்தப்படுத்தப்படுகின்றனர். இன்றைய உலகமயமாக்கலின் தாக்கமும் தலித் மக்களை வெகுவாக பாதித்துள்ளது. இதன் தாக்கத்தால் தலித் மக்கள் மேலும் பலவகையிலும் பாகுபாடுகளுக்கும், தனிமைப்படுத்தலுக்கும் ஆளாகின்ற  அவல நிலை உள்ளது.
இத்தகையச் சூழலில் தலித் மக்களின் பிரச்சனைகளில் தனிக்கவனம் செலுத்தப்படவேண்டும் என்ற நோக்கில் தலித் மக்கள் சார்பாக இந்தத் தேர்தல் அறிக்கையினை வெளியிடுகின்றோம்.

கோரிக்கைகள் :

1.   தலித் மக்களுக்கு நிலம், குடியிருப்பு மனை, பட்டா வழங்கப்படவேண்டும்

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் தமிழகத்தில் மொத்தம் 14.4% தலித் மக்கள்தான் குடியிருப்பில் வசிக்கின்றனர். மீதமுள்ள அனைவரும் குடியிருப்பு என கணக்கெடுக்கமுடியாத குடிசைகளில் வசித்து வருகின்றனர். நாடு முழுவதும் தலித்துகளும், பழங்குடியினரும் நிலமற்ற அன்றாடக் கூலிகளாகவே உள்ளனர். அதனால் சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள இவர்கள் நாட்டில் அனைத்துவித ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாகின்றனர். எனவே, கோயில் நிலங்கள் மற்றும் நில உச்சவரம்பு சட்டங்களில் உரிய திருத்தங்களைச் செய்து அதன் மூலம் கிடைக்க கூடிய கூடுதல் நிலங்கள்தரிசு நிலங்கள்வனத்துறைக்குச் சொந்தமான விவசாயம் செய்யக்கூடிய  நிலங்கள் போன்ற அனைத்துவகை நிலங்களும் விவசாயக் கூலிகளாக உள்ள நிலமற்ற தலித் மக்களுக்கு வழங்கப்படவேண்டும்.
·  பல தலைமுறைகளாக அரசுக்கு சொந்தமான இடத்தில் வாழ்ந்து வரும் தலித் குடும்பங்கள் அனைவருக்கும் அரசு வீட்டுமனைகளும், பட்டாக்களும் வழங்கப்படவேண்டும்.
      பஞ்சமி நிலங்களை மீட்டெடு : ஆங்கிலேயர் காலத்தில் தலித் மக்களுக்கு என ஒப்படைப்பு செய்யப்பட்ட பஞ்சமி நிலங்களை அடையாளங்கண்டு, தனிச் சட்டமியற்றி மீட்டு தலித் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்துள்ள பிறசாதியினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நிலங்கள் மீட்கப்படவேண்டும்.

2.----------கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை
குடிசையில்லா மாவட்டங்களாக மாற்ற சிறப்பு குடியிருப்புத் திட்டங்கள்
  
தமிழகத்தில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இன்றளவும் தலித் மக்கள் பெருமளவில் குடிசைகளில் வசிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர்களாலும், கோடைகாலத்தில் தீ போன்ற விபத்துகளாலும் குடிசைகள் பாதிப்படைகின்றன. எனவே இவ்விரண்டு மாவட்டங்களையும் குடிசைகள் இல்லாத நிலையினை உருவாக்க சிறப்பு குடியிருப்புத் திட்டமியற்றி அனைத்து குடிசைகளையும் கட்டிடங்களாக மாற்றவேண்டும்.
மேலும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள தலித் குடும்பங்களுக்கு உடை, உணவு, சுகாதாரம் போன்றவற்றை உறுதி செய்வதோடு, தற்போதைய நவீன சூழலில் வருமானத்திற்கும் வழி காணக் கூடிய பொருளாதார மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும்

3.----------------கல்வி, வேலை வாய்ப்புகளில் தலித் மக்களுக்கான உரிமைகள் வழங்கப்படவேண்டும்.

கல்வி, வேலை வாய்ப்புகளில் அனைவருக்கும் சம வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டாலும் தலித்/பழங்குடியினர் இதனை அனுபவிக்க முடிவதில்லை. குறிப்பாக மேல் மற்றும்  நடுத்தர வகுப்பினர் மட்டுமே இவைகளை அனுபவிக்கின்றனர். கல்வி என்பது இன்று பொருளாதாரத்தில் மிகவும் முன்னேறிய, அதிகாரத்துடன் தொடர்புடையவர்கள் மட்டுமே பெறமுடியும் என்ற நிலையும் உள்ளது. தலித் மாணவர்கள் கல்வி பயில்வது என்பது அதுவும் உயர் கல்வி என்பது எட்டாக்கனியாக உள்ளது. அதன் ஒரு உதாரணம்தான் ஹைதாராபாத் பல்கலைக் கழக ஆராய்ச்சி மாணவர் ரோகித் மரணம்.
அரசின் அடிமட்ட, பிறருக்கு ஏவல் செய்கின்ற பணியிடங்களில் மட்டுமே இன்றும் தலித்துகள் நியமிக்கப்படுகின்றனர். அரசின் உயர் பதவிகளிலோ, பணியிடங்களிலோ இடஒதுக்கீட்டின்படிகூட நியமனங்கள் நடைபெறுவதில்லை. உதாராணமாக தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழங்களின் துணைவேந்தர்கள் மொத்தம் 25 பேர் உள்ளனர். இதில் ஒருவர் கூட தலித் இல்லை. இதுபோன்ற நிலைகளை மாற்றி உரிய பணியிடங்கள் நிரப்பட்டு, கல்வி வழங்கப்படவேண்டும்.

4. தனியார் துறையில் இடஒதுக்கீடு :
இன்று நாட்டில் தனியார் துறைகள் அனைத்தும் கார்ப்பரேட் மயமாகி வருகின்றனஇந்த கார்ப்பரேட் துறையின் நுழைவு வாயில் அருகில்கூட தலித் / பழங்குடியினர் அனுமதிக்கப்படுவதில்லை. இதனை நியாயப்படுத்திக்கொள்ள நாடு வளர்கிறது என்று வெளிப்படையான பொய்யினைக் கூறுகின்றனர். உலகின் 4-&வது மிகப்பெரிய நாடான இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர்  இருக்க கூடிய தலித் மக்களை புறக்கணித்து விட்டு அர்த்தமுள்ள வளர்ச்சியை இந்தியா எட்ட முடியாது. தலித் மற்றும் பழங்குடியின மக்கள் முன்னேறுவதன் மூலமே நாடு வறுமையின் பிடியில் இருந்து விடுபடும். எனவே அனைத்து வகையிலான தனியார் துறையான கார்ப்பரேட் நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு தலித் பழங்குடியினர் பணியமர்த்தப்படவேண்டும். இதற்கான தனிச்சட்டம் இயற்றப்படவேண்டும். இதில் தலித் கிறிஸ்துவர்களையும் உள்ளடக்கவேண்டும்.

5.பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் துணைத் திட்டம்: தனி சட்டம் தேவை
சமூகத்தில் நிலவும் பல்வேறு ஏற்றத்தாழ்வு மற்றும் பாகுபாடுகளின் காரணமாக தலித் மற்றும் பழங்குடியின மக்கள் வாழ்வில் எவ்வித மேம்பாடோ, முன்னேற்றமோ அடையமுடியாத நிலை உள்ளது. இதனால், பிற சமூகத்திற்கான இணையான சமமான வளர்ச்சியினை தலித் / பழங்குடியின மக்கள் அடையவெண்டும் என்பதற்காக பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கான துணைத்திட்டங்களை மத்திய அரசு உருவாக்கியது. இதன் மூலம் தலித் மக்கள் முன்னேற்றத்திற்கு என மத்திய அரசு பல்லாயிரம் கோடி கணக்காண ரூபாய்களை மாநில அரசுக்கு அளிக்கின்றது. மாநில அரசோ இதனை வேறு ஏதேனும் பொது திட்டங்களுக்கோ அல்லது இலவச திட்டங்களுக்கோ செல்வழித்துவிட்டு, தலித் மக்களுக்கான சிறப்பு திட்டங்கள் எதனையும் நடைமுறை படுத்துவதில்லை. குறிப்பாக கடந்த நிதியாண்டில் தாழ்த்தப்பட்டோருக்கான துணைத்திட்டத்திற்கு என ரூ பதினோறாயிரத்து ஐநூறு கோடியினை அரசு ஒதுக்கியது. ஆனால் இந்நிதியில் தலித் மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான புதிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவதற்கு பதிலாக, அரசு இலவச திட்டங்களான மிக்சி, கிரைண்டர் வழங்க பயன்படுத்தியுள்ளனர். திட்டமாக உள்ளதால் இவ்வாறு அரசு வேறு செலவினங்களுக்கு இந்நிதியை பயன்படுத்துகின்றது. இதற்கென தனிசட்டம் இயற்றினால் நிதி முறைகேடாக பயன்படுத்துவது தடுக்கப்படும்.
எனவே, ஆந்திர அரசாங்கம் இதற்கான தனிசட்டம் இயற்றியுள்ளதுபோல், தமிழகத்திலும் பட்டியலினத்துவருக்கான துணைத்திட்டத்திற்கு தனிச் சட்டம் இயற்றவேண்டும். இலவசங்கள் என்ற பெயரில் ஏழை மக்களை வஞ்சிக்காமல் சட்டத்தின்படி உரிமை மற்றும் வளர்ச்சியினை அளிக்கவேண்டும்.

6.குழந்தைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மீதான பாகுபாடுகள் / வன்கொடுமைகள் நிறுத்தப்படவேண்டும்பாடத்திட்டங்களில் மாற்றம் தேவை :

தலித் குழந்தைகளும், மாணவர்களும் கல்வி நிறுவனங்களில் பல்வேறு சாதிய பாகுபாடுகளுக்கும், புறக்கணிப்பிற்கும், ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாகின்றனர். சிறு வயது குழந்தைப்பருவத்தில் ஏற்படுகின்ற இதுபோன்ற பாதிப்புகளும், புறக்கணிப்புகளும் கடைசிவரையில் அவர்கள் மனதில் ஆறாத வடுக்களாக உள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளால் பெரும்பகுதி தலித் மாணவர்களின் கல்வி இடையிலேயே நின்றுவிடுகின்றது. தற்போதுள்ள இத்தகைய சமூகச் சூழலில்  87% தலித் குழந்தைகள் தங்களின் பள்ளிக் கல்வியை முழுமையாக முடிக்கமுடியாத நிலை உள்ளது. இதனால் குழந்தைத் தொழிலாளர்களாக மாறும் சூழல் நிலவுகின்றது. பல்வேறு கல்வி நிலையங்களில் தலித் குழந்தைகள் ஆசிரியர்களுக்கு பணிவிடை செய்கின்ற வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும், கழிவறை சுத்தம் செய்தல் போன்ற அடிமட்ட வேலைகளைச்  செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படுன்றனர். இவைகளில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி தடுத்து நிறுத்தவேண்டும். கல்வி நிறுவனங்களில் பணிபுரிகின்றவர்களுக்கு மனித உரிமை, சமத்துவம், பாகுபாடுகளை ஒழிப்பது உள்ளிட்ட சமூக நீதி தொடர்பான பயிற்சிகளை அளித்து சமூகக் கண்ணோட்டத்தினை உருவாக்கவேண்டும்.
·         அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான பாடத்திட்டங்களில் பாகுபாடுகளை ஒழிப்பது, சமத்துவத்தை உருவாக்குவது, பெண்களுக்கு சம வாய்ப்பு, தலித் / பழங்குடியினரை அக்கறையுடன் அணுகுவது, ஆதரவாய் இருப்பது, மூடநம்பிக்கைகளை ஒழிப்பது மற்றும் மனித உரிமைக் கல்வி போன்றவைகளை இணைத்து  புதிய பாடத்திட்டங்களை உருவாக்கவேண்டும். இவைகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சிகள் அளிக்கப்படவேண்டும். இவைகள் மூலம் பிரச்சனைகளை பாதிப்புற்றோர் தரப்பிலிருந்து அணுகுவது என்ற புதிய கண்ணோட்டங்கள் வளர்வதுடன், மதிப்பீடுகள் உயரும். நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் இந்தப் பாடத்திட்டங்களை நடைமுறைபடுத்தவேண்டும்.
·         தலித் பெண்கள் மீதான பாலியல் தொடர்பான வன்கொடுமைக் குற்றங்களில் 30% தலித் பெண் குழந்தைகளே பாதிப்புற்றுகின்றனர். இவைகளை தடுத்து நிறுத்த அரசு உடனடியாக சிறப்புக் கவனம் செலுத்தி, புதிய சட்ட நடைமுறைகளை உருவாக்கவேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைபடுத்தவேண்டும்.
·         பள்ளிக்கல்வி, கல்லூரி மட்டுமல்லாமல் உயர்கல்வி நிறுவனங்களிலும் தலித் மாணவர்கள் தங்கள் கல்வி மற்றும் ஆராய்ச்சிப் படிப்பினை தொடரமுடியாத இழிநிலை தொடர்வது ரோகித் மரணம் மூலம் நாம் அனைவரும் அறிந்த ஒன்றாக உள்ளது. எனவே உடடியான அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் தோரட் குழு அறிக்கையினை உடனடியாக நடைமுறைபடுத்தி பாகுபாடில்லா கல்விச்சூழலை உருவாக்கவேண்டும்.
·         மேலும் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி கட்டண சலுகை தொடர்பான தமிழக அரசின் அரசு ஆணை 92 எவ்வித பாகுபாடும், தடைகளும் இன்றி நடைமுறைபடுத்தப்படவேண்டும். இதனை செயல்படுத்தாத தனியார் கல்வி நிறுவனங்கள் மீது எவ்வித தயக்கமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

7.வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை முழுமையாக நடைமுறைபடுத்தவேண்டும்

நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் சரியாக நடைமுறைபடுத்தப்படாமல், அதிகாரிகள் வேண்டுமென்றே தமது கடமையை புறக்கணித்து வருகின்றனர். இதுபோன்ற அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2015&ன் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், சட்ட அமுலாக்கத்தில் தாமதமின்றி வழக்கு பதிவு, உரிய பிரிவுகள், உரிய அதிகாரி குறிப்பிட்ட நாளுக்குள் விசாரணை, சட்டத்தின்படி உரிய நிவாரணம், சிறப்பு வழக்கறிஞர் நியமனம் போன்றவைகளை உரிய கண்காணிப்பினை மேற்கொள்ளவேண்டும். இதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட விழிகண் குழுவும், முதல்வர் தலைமையிலான மாநில விழிகண் குழுவும் முறையாக காலமுறைப்படி கூடி மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும். மேலும், மாவட்டத்தில் வழக்கு நடைமுறை மற்றும் வழக்கு விசாரணை ஆகியவை குறித்து ஆய்வு மற்றும் மதிப்பீடு செய்யவேண்டும்.
தமிழக அரசு 28 மாவட்டங்களை வன்கொடுமை பகுதியாக அறிவித்துள்ளது. இம்மாவட்டங்களில் வன்கொடுமை நிகழ வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிந்து, அப்பகுதிகளில் வன்கொடுமை நிகழாமல் தடுக்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். மேலும் அப்பகுதிகளுக்கு என புதிய எதிர்பாரா செலவினங்களுக்கான புதிய திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும்.



8.வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளில் சிறப்பு வழக்கறிஞர் :

நீதிபதியே சிறப்புவழக்கறிஞர்களை நியமனம் செய்யவேண்டும் : வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதிப்புற்றோர் விருப்பத்தின்பேரில் சிறப்பு வழக்கறிஞரை நியமிப்பதில் மாவட்ட ஆட்சியர்களின்  அலட்சியம், அலைக்கழிப்பு போன்றவைகளினால் நீதிகிடைக்காமல் போகின்றது. எனவே, பாதிப்புற்றோர் விரும்புகின்ற சிறப்பு வழக்கறிஞர்களை சிறப்பு நீதிமன்ற நீதிபதியே நியமிக்கும் வகையில் உரிய சட்டத்திருத்தங்களையும் அரசு உருவாக்கவேண்டும்.

9.அரசியல் கட்சியினர் அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்படுவது தடுக்கப்படவேண்டும்:

தற்போது மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள அரசு வழக்கறிஞர்களே வன்கொடுமை வழக்குகளை நடத்துகின்றனர். அவர்களுக்கான பிற வழக்குகள், பிற அரசுப் பணிகள் போன்றவற்றால் இவ்வழக்கில் சிறப்புக்கவனம் அளிக்கமுடிவதில்லை. மேலும், தன்னை நியமித்துள்ள அரசாங்கத்தில் குற்றங்கள் அதிகம் நிகழ்ந்துள்ளது என்கிற நிலையேற்படமால் இருக்கவேண்டும் என்பதற்காக வழக்குகளில் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் இருந்து விடுதலையாக வழிசெய்கின்றனர். இத்துடன் இல்லாமல் குற்றஞ்சாட்டப்பட்டோர் தரப்பு சமரசத்திற்கு எளிதில் அணுகும் சூழலில் உள்ளனர். பாதிப்புற்றோருக்கு உரிய வழிகாட்டுதலோ, ஆலோசனைகளோ அளிப்பதில்லை. எனவே அரசு வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்படுவது என்பதை நிறுத்திவிட்டு, புதிய பணியிடமாக உருவாக்கவேண்டும்.

10.தலித் மற்றும் பழங்குடியின கிறித்துவர்களுக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை விரிவுபடுத்தவேண்டும்.
‘‘கிறித்துவ மதத்தில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் மீது சாதியத் தீண்டாமைக் கொடுமைகள் இழைக்கப்படுகின்றன. இவர்கள் தலித் அல்லாத கிறித்துவர்களாலும், மற்ற ஆதிக்கச் சாதியினராலும் தீண்டாமைக் கொடுமைக்குள்ளாக்கப்படுகிறார்கள்என்பதை அம்பேத்கர் (தொகுதி :5, பக்கம் :470) சுட்டிக்காட்டியுள்ளார். பிற தலித்துகளைப் போலவே தலித் கிறித்துவர்களும் சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களில் புறக்கணிப்பிற்கும், தீண்டாமைப் பாகுபாடுகளுக்கும், வன்கொடுமைகளுக்கும் ஆளாகின்றனர். சாதியின் பெயராலேயே தலித் கிறித்துவர்கள் மீது இந்த வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றது. இவ்வாறு பாதிப்புறும் தலித் கிறித்துவர்களுக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பொருந்தினால், குறைந்தபட்ச பாதுகாப்புகள் உறுதி செய்யப்படும். மேலும், ஆதிக்கச் சாதி மற்றும் தலித் அல்லாத பிற கிறித்துவ சமூகத்தினரால் நிகழ்த்தப்படும் வன்கொடுமை மற்றும் தாக்குதல்களினால் ஏற்படும் பாதிப்பு, சேதங்களுக்கு குறைந்தபட்ச நிவாரண உதவிகளைப் பெறமுடியும். எனவே  சாதிய வன்கொடுமையால் பாதிப்புறும் தலித் கிறித்துவர்களுக்கும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பொருந்தும் வகையில்  விரிவுபடுத்த சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி சட்டத் திருத்தம் கொண்டுவரவேண்டும்.

11.கையால் மலம் அள்ளும் பணித்தடைச் சட்டம் 2013 உடனடியாக நடைமுறைபடுத்தபடவேண்டும் :

கையால் மலத்தை அள்ளிக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் இழிதொழிலை ஒழித்துக்கட்டக் கோரும் போராட்டங்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தது. இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கொன்றில் உச்சநீதி மன்ற உத்திரவிட்டதின் பேரில் 2013 இல் - கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்துவதைத் தடை செய்தல் மற்றும் அவர்களது மறுவாழ்வுக்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் இதுவரை இச்சட்டம் நடைமுறைக்கு வரவில்லை. எனவே உடனடியாக இச்சட்டத்திற்கான விதிகள் உருவாக்கப்பட்டு உடனடியாக நடைமுறைபடுத்தப்டவேண்டும்.

12.இந்திய அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் தேவை :

இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 17 இல் ‘‘தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது, நடைமுறைப்படுத்தப்படுவது தடைசெய்யப்பட்டுள்ளதுயாரேனும் கடைப்பிடித்தால் அது குற்றமாக கருதப்பட்டு தண்டிக்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது. அதற்கான சட்டமாகத்தான் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளது. ஆனாலும் நடைமுறையில் தீண்டாமை, பாகுபாடு, வன்கொடுமைகள் ஆகியவை குறையாமல், வெவ்வேறு வடிவங்களில் அதிகரித்தே வருகின்றது. அதிலும் குறிப்பாக தீண்டாமையை நடைமுறைபடுத்தி, கடைபிடிக்கும் சாதியம் மிகவும் கெட்டித்தட்டி இறுகிப்போயுள்ளது. எனவே, அரசமைப்புச் சட்டம் பிரிவு 17 &இல் தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது என்பதை ‘‘சாதி முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது, மேலும், சாதியின் பெயரால் நடத்தப்படும் சங்கங்களும், வணிக மற்றும் தொழில் நிறுவனங்களும், திருமணத் தகவல் நிலையங்களும் முற்றிலுமாக தடைசெய்யப்பட்டுள்ளது’’ என புதிய சட்டத் திருத்தம் கொண்டுவர தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும். இதன் மூலம் சாதி ஆதிக்கத்தையும், சாதியின் பெயரால் நிகழும் தீண்டாமை மற்றும் வன்கொடுமைக் குற்றங்களையும் வெகுவாகக் குறைக்கமுடியும்.

13.சாதி மறுப்பு திருமணம் செய்வோருக்கு சட்டப்பாதுகாப்பு வேண்டும் :

சமூக நீதியின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாகவும், சாதி மற்றும் தீண்டாமை ஒழிப்பில் முக்கிய பங்காற்றுகின்ற சாதி மறுப்பு மற்றும் வேறு சாதிகளைச் சேர்ந்தோரின் காதல் திருமணங்களுக்கு அரசு சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கி சிறப்பிக்கவேண்டும். இதற்கு அரசு தனி சிறப்பு அறிவிப்புகளை வெளியிடவேண்டும். மேலும், இதுபோன்ற திருமணங்களுக்கு எதிராக செயல்படுகின்றவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.
சிறப்பு அறிவிப்புகளில் இதுபோன்ற திருமணங்களால் பாதிப்புற்றோருக்குக் குறிப்பாக தலித் மற்றும் பெண்களுக்கு நீடித்த, நிலைத்த மறுவாழ்வுத் திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். அதில் கல்வி, வேலைவாய்ப்பு, உதவித் தொகை, நிலம் போன்றவைகள் உள்ளடக்கப்படவேண்டும்.

14.சாதி ஆணவக் கொலைகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும் :

‘‘கலப்புத் திருமணம் செய்தால் கையை வெட்டுவேன்’’ ‘‘கலாசாரம் கெட்டுப்போகிறது’’ என சாதிய அமைப்புகள், கட்சிகள்  கூறுகின்றன. சாதி, மதம், பொருளாதாரம், ஏற்றத்தாழ்வுகள் என எவ்விதப் பாகுபாடுகளும் இல்லாமலும் உருவாகின்ற காதலுக்கு அன்பு, ஆதரவுதோழமை, சமத்துவம் ஆகியவை  அடிப்படையாக உள்ளது. இதுபோன்றக் காதலை எதிர்க்கும் சாதியம் தீண்டாமை, ஏற்றத்தாழ்வு, அடிமைத்தனம், பெண்ணடிமை, புறக்கணிப்பு, வேறுபாடு, ஒடுக்குமுறை போன்றவைகளை அடிப்படையாகக்கொண்டுள்ளது. இப்படியான சமூக சமத்துவத்துவமின்மையை காதலும், காதல் திருமணங்களும் உடைத்து, தகர்க்கின்றபோது காதலர்கள் கொலை செய்யப்படுகின்றனர். சாதியக் கட்டுமானத்தில் தன் சாதிக்கு கீழுள்ள சாதியை ஏற்கமுடியாத ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடாக கொலைகள் நிகழ்கின்றது.
இந்த ‘‘கௌரவக்கொலை’’ என்ற பெயரில் நிகழும் சாதி ஆணவக் கொலைகளில் பெண்கள் மட்டுமே கொலை செய்யப்படுகின்றனர். தேசிய மகளிர் ஆணையம் இதுபோன்ற கொலைகளில் 75% சாதிய அடிப்படையில் நிகழ்த்தப்படுகின்றது எனக்கூறியுள்ளது. இவ்வாறு சாதியின் பெயரால் நிகழும் கொலைகளில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். இதுபோன்ற கொலைகளில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

15.தலித் பஞ்சாயத்துக் கிராமங்களை சமூகக் கண்ணோட்டத்துடன் அணுகவேண்டும். பஞ்சாயத்துராஜ் சட்டத்தின்படி ஊராட்சிப் பதவிகளில் இடஒதுக்கீடு முறை நடைமுறையில் உள்ளது. தலித் ஒருவர் ஜனாதிபதியாக வரலாம, சாதி ஆதிக்கமுள்ள கிராமங்களில் பஞ்சாயத்து தலைவராக வரமுடியாது என்பதை இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பல உதாரணங்கள் நிருபித்து வருகின்றன. மீறியும் தலித் ஒருவர் ஊராட்சி மன்ற தலைவரானால் அவரால் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பயன்படுத்த முடியாது, அலுவலக நாற்காலியில் உட்கார அனுமதி கிடையாது, இந்திய தேசிய கொடியினை ஏற்றமுடியாது, ஊராட்சிக்கான நிதி மற்றும் காசோலைகளை கையாள முடியாது. மொத்தத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஒரு தலைவராக செயல்படமுடியாது.
மேலும் தலித் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது நிகழ்த்தப்படும் தீண்டாமைப் பாகுபாடுகள், வன்கொடுமைகள், புறக்கணிப்புகளால் பல தலைவர்கள் மரணமடைந்துள்ளனர். எனவேதலித் பஞ்சாயத்து தலைவர் மட்டும் பங்கேற்கின்ற கருத்தறியும் கூட்டத்தினை மூன்று மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது தேவையின் அடிப்படையிலோ மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொள்ள புதிய வழிமுறைகளை கண்டறியவேண்டும். அவர்கள் சுதந்திரமாக செயல்பட உரிய சட்டப்பாதுகாப்பினை வழங்கவேண்டும். இவ்வாறு தலித் ஊராட்சிப் பிரதிநிதிகளுக்கு எதிராக செயல்படுவோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

16.பேரிடர் காலங்களில் தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கான நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் பாகுபாடுகள் நீக்கப்பட்டு, தனிக்கவனம் செலுத்தப்படவேண்டும் :

தற்போதைய மழை, வெள்ள பாதிப்பில் அனைத்து சமூக மக்களும் பாதிக்கப்பட்டாலும், குடிசைகளிலும், அன்றாடக் கூலிவேலை செய்தும் வாழ்ந்து வந்த தலித் மக்களே பெருமளவில் பாதிக்கப்பட்டு சொல்லணாத் துயருக்கு ஆளானார்கள். அரசு மட்டுமல்லாமல் பல்வேறு தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் பெருமளவில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு மனிதநேயத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால் இந்த நிவாரணப் பலன் / பயன்கள் தலித் மக்களுக்கு போதுமானவகையில் சென்றடையவில்லை என்பதை ஊடகங்கள் பலவும் வெளியிட்டன.
நிவாரணப் பணிகளில் சிறப்புக் கவனம் : அரசு இனிவரும் பேரிடர் காலங்களில் அளிக்கும் நிவாரணப் பணிகளில் தலித் மற்றும் பழங்குடி மக்களையும், அவர்களின் குடியிருப்பினையும் கருத்திகொண்டு முன்னுரிமையின் மூலம் சிறப்பு கவனம் செலுத்தி செய்யவேண்டும். இதுகுறித்த கண்ணோட்டதை வளர்த்துக்கொள்ளும் வகையில் அதிகாரிகளுக்கு போதிய பயிற்சிகள் அளிக்கவேண்டும்.   தலித்&பழங்குடி மக்களுக்கான நிவாரணங்களைத் தடுப்போர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பேரிடர் மேலாண்மைச் சட்டம் : பேரிடர் காலங்களில் தலித் மற்றும் பழங்குடியினர் மீது நிகழும் வன்கொடுமை மற்றும் நிவாரணங்களில் புறக்கணிப்பு போன்றவைகளை தீர்க்கும் விதமாக தேசியப் பேரிடர் கொள்கையில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும். பேரிடர் காலங்களில் மத்திய மற்றும் உள்ளூர் சேத மதிப்பீட்டுக் குழு மட்டுமல்லாமல், பாதிப்புகளைப் பார்வையிடுகின்ற அனைவரும் தலித் & பழங்குடி மக்களையும், அவர்களின் குடியிருப்புகளையும் பார்வையிடும் வகையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு உருவாக்கவேண்டும்.

17.நீண்ட நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படவேண்டும் :

2011 ஆம் ஆண்டு விவரப்படி தமிழகச் சிறைகளில் இந்தியத் தண்டனைச் கீழ் சட்டத்தின் தண்டனைக் கைதிகளாக மொத்தம் 5200 பேர் இருந்துள்ளனர். இதில் தாழ்த்தப்பட்டோர் 1,609 (30.95%), பழங்குடியினர் 176 (3.36%), முஸ்லீம்கள் 671 (12.90%), கிறித்துவர்கள் 999 (19.21%). இந்த நான்கு பிரிவினரும் மொத்த தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கையில் 66.44% பேர் ஆகும். அதே 2011 ஆம் ஆண்டில் விசாரணைக் கைதிகளாக மொத்தம் 7682 பேர் இருந்துள்ளனர். இதில் தாழ்த்தப்பட்டோர் 2783 (36.22%), பழங்குடியினர் 757 (9.85%), முஸ்லீம்கள் 943 (12.27%), கிறிஸ்துவர்கள் 1213 (15.79%). இந்த நான்கு பிரிவினரும் மொத்த தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கையில் இது 74.14%  பேர் ஆகும். சமூகத்தின் விளிம்பில் மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையிலுள்ள இந்த நான்கு பிரிவினருமே மொத்த விசாரணை மற்றும் தண்டனைக் கைதிகளின் எண்ணிக்கையில் 75% வரை உள்ளனர். இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்-பட்டுள்ள இவர்கள் அனைவரும் குற்றங்களில் தொடர்புடை-யவர்கள் அல்ல என்பதும், பெரும்பாலானோர் அப்பாவிகள் என்பதும் நம் நேரடி அனுபவத்தில் கண்டுள்ள உண்மை-களாகும். இதுபோன்ற சிறைவாசிகள் அனைவரும் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்யப்படுவதுடன், மறுவாழ்வு தொடர்பான திட்டங்களும் உருவாக்கப்படவேண்டும்.

18.குற்றப்பரம்பரையினர் என்கிற கண்ணோட்டம் மாறவேண்டும் : தலித் மற்றும் பழங்குடியினர் மீதான காவல் நிலைய சித்திரவதை மற்றும் மரணங்கள்நீதிவிசாரணை வேண்டும் :

காவல் துறையினரால கண்டுபிடிக்கமுடியாத திருட்டு வழக்குகளில் கணக்கு காட்ட அழைத்துச் செல்லப்பட்ட தலித்&பழங்குடி இளைஞர்களை திருட்டு வழக்கினை ஒப்புக்கொள்ளும்படி காவல் நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்படுகின்றனர். ஒப்புக்கொள்ள மறுப்பவர்களை தொடர்ந்து அடித்து, சித்திரவதை செய்து பொய்வழக்கில் சிறையில் அடைக்கின்றனர். இதுபோன்ற வழக்குகளில் இன்று தஞ்சை, விழுப்புரம், மதுரை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த குறவர் சமூக மக்களை குறிவைத்து கடத்தி செல்கின்றனர் போலீசார். குறவர் சமூக மக்களை இன்றும் குற்றப்பரம்பரையினராகவே கருதுகின்ற அவலநிலை மாற்றப்படவேண்டும்.
மேலும் இதுபோன்ற காவல் நிலைய சித்திரவதையில் ஏராளமான தலித் மற்றும் பழங்குடியினர் இறந்துபோயுள்ளனர். இதுபோன்ற மரணங்களில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுதில்லை. கொலையுண்டவர் குடும்பத்திற்கு எவ்வித நிவாரணமும் அளிக்கப்படுவதில்லை. காவல்துறையின் என்கவுன்டர் மரண நிகழ்வில் தொடர்புடைய நிலைய காவலதிகாரிகள் மீது .. பிரிவு 302 இன்படி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டுமென தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல் உள்ளது. இதனைக் காவல் நிலைய மரணம் சம்பவத்திலும் பின்பற்ற அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். இனி இதுபோன்று காவல் நிலைய மரணங்கள் நிகழ்ந்தால் காவலதிகாரிகள் மீது .. பிரிவு 302 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யவெண்டும். மேலும், இதுவரை நிகழ்ந்துள்ள காவல் நிலைய மரணங்கள் தொடர்பாக பதவியிலுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி, மனித உரிமை ஆர்வலர்கள், துறை வல்லுநர்கள் உள்ளிட்டோர் கொண்ட குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு, கொலையுண்டவர்களின் குடும்பத்திற்கு குறைந்தபட்ச நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை உறுதி செய்யவேண்டும்.

 
 --------------


நீதிக்கான தேசிய தலித் கூட்டமைப்பு(DCJ)தமிழ்நாடு
Dalit Collective For Justice(DCJ),
Secretirate :  SASY, 33A, Anna Nagar, 4th Street,
Marakanam Road, Tindivanam-604001.

நீதிக்கான தேசிய தலித் இயக்கம் (NDMJ-NCDHR) & புதுடெல்லி.
National Dalit Movement for Justice-NDMJ,

7/58, 1st Floor, South Patel Nagar, New Delhi-110008

No comments: