Monday, September 24, 2012

அதிகரிக்கும் ஆண்-பெண் குழந்தை விகிதம் : உருவாகும் ஆபத்துக்கள்


2011-ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 26 மாநிலங்களில் 352-க்கும் குறைவாக உள்ளது. இதில் தமிழ்நாடும் ஒன்றாகும். இந்தியாவில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 914  ஆகவும். தமிழகத்தில் இந்த பாலின விகிதம் 946 ஆகவும் உள்ளது. அதிலும் குறிப்பாக கடலூர், அரியலுர் மாவட்டங்களில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையானது 900-த்திற்கும் குறைவாகவே உள்ளது.
2001 முதல் 2011 வரையிலான பத்து ஆண்டுகால இடைவெளியில் அகில இந்திய அளவில் 31,33,281 பெண் குழந்தைகளையும்; தமிழக அளவில் 19,848 பெண் குழந்தைகளையும் காணவில்லையென இப்புள்ளி விபரம் தெரிவிக்கிறது. தமிழகத்தில் 16 மாவட்டங்களில் 952 - க்கும் குறைவாகவே பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். இதன் மூலம் தமிழக அரசு கருவுறுவதற்கு முன்பு மற்றும் பிறக்கும் குழந்தைகளின் குறைபாடுகளைக் கண்டறிய உதவும் மருத்துவ தொழில் நுட்பம் (பாலினத்தை தெரிவு செய்வதை தடுத்தல்) சட்டம் – 2002-ஐ நடைமுறைப்படுத்தத் தவறியது தெளிவாகத் தெரிகிறது.
இவ்வாறாக பாலினத் தெரிவின் அடிப்படையிலான பெண் கருக்கொலையின் மூலமாக பெண் குழந்தைகளின் பிறப்புரிமையையும் வாழ்வுரிமையையும் பறித்திடும் இழிநிலையை வன்மையாக எதிர்ப்பதும் முற்றிலும் தடுப்பதும் சமுதாயத்தின் முன் தற்போதுள்ள அவசிய அவசர தேவையாகும் மேலும் இது மனித குலத்தின் மீது அக்கறையுள்ள ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும்.
செயற்கை முறையில் கருத்தரிக்க உதவும் நடைமுறைகளில் ஒன்றான கருமுட்டையை பெண்களின் கருப்பையில் செலுத்துவதற்கு முன்னர் அந்தக் கருமுட்டையை மரபணு சோதனைக்கு உள்ளாக்குவதன் மூலம் ஆண் குழந்தையை தேர்வு செய்ய முடியும். இது போன்ற மையங்கள் தமிழ்நாட்டில் காளான்கள் போல் வளர்ந்து வருகின்றன. இத்தகைய மையங்கள் கண்காணிப்படவில்லை என்றால் பிறக்கும் பெண் குழந்தைகளின்  விகிதம்  மேலும் குறையும்.
கருவுறுவதற்கு முன்பாக மற்றும் பிறக்கபோகும் குழந்தைகளின் குறைபாடுகளைக் கண்டறிய உதவும் மருத்துவ தொழில்நுட்பம் (பாலினத்தை தெரிவு செய்வதை தடுத்தல்) சட்டம் தமிழ் நாட்டில் அமல் படுத்தப்படுவதன் நிலை.
தமிழ்நாட்டில் 2011 மார்ச் மாதம் வரையிலான தகவலின்படி 560 ஸ்கேன் மையங்கள் அரசு மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகிறது. 8 மரபணு சோதனை ஆராய்ச்சிக் கூடங்கள், 3943 அல்ட்ரா சவுண்ட் மருத்துவமனைகள், 38 செயற்கைக் கருத்தரிப்பு மையங்கள், 11 ஆம்னியோசென்டிசிஸ் மையங்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் சுகாதாரத் துறையால் மொத்தமாக 4560 மையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த சட்டத்தை அமலாக்கும் உரிய அதிகாரிக்கு (கிகி) சிவில் நீதிமன்ற அதிகாரங்கள் இருந்தும் அவர்கள் அவற்றைப் பயன்படுத்துவதில்லை. பதிவு செய்யப்பட்ட மையங்கள், மரபணு மருத்துவமனைகள், மரபணு ஆலோசனை மையங்கள் மற்றும் மரபணு ஆராய்ச்சிக் கூடங்கள் ஆகியவைகள் எந்தப் பிரிவின் கீழும் வகைப்படுத்தப்படவில்லை. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மையங்கள், தனியார் மருத்துவமனைகள், செயற்கைக் கருதரிப்பு மையங்கள் போன்றவை முறையாகக் கண்காணிக்கப்படுவதில்லை மற்றும் ஆய்வு செய்யப்படுவதில்லை.
2010-ல் இந்தப் பிரசாரம் சார்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி பெறப்பட்ட தகவலின்படி 17 மாவட்டங்களில் 1487 மையங்கள்தான் மாநிலத்தின் உரிய அதிகாரியிடம் மாத அறிக்கைகளை அளித்துள்ளன. 60 நாட்களுக்கு ஒரு முறை மாவட்ட அளவிலான அதிகாரிகள். ஆலோசனைக்குழு கூட்டங்கள் கண்டிப்பாக நடத்த வேண்டும். 2009 லிருந்து 2010 வரை 10 மாவட்டங்கள் தவிர வேறு எந்த மாவட்டங்களிலும் ஒரு கூட்டம் கூட நடத்தப்படவில்லை. ஆலோசனைக்குழு கூட்டங்களில் மருத்துவர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் முக்கிய சமூக சேவகர்கள் பங்குபெற வேண்டும். ஆனால் நடைமுறையில் மருத்துவர்கள் மற்றும் அமலாக்க அதிகாரியான மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆலோசனைக் குழு கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. மாறாக இணை இயக்குநர், மருத்துவ மற்றும் ஊரக சுகாதாரத் துறை அலுவலர்கள்தான் கூட்டங்களை நடத்துகிறார்கள்.
சில மாவட்டங்களில் மையங்கள் பதிவு செய்யப்படாமல் இருப்பது, படிவங்கள் பராமரிக்கப்படாமல் இருப்பது, கருவின் பாலினத்தை சைகை மொழியில் தெரிவிப்பது, அறிக்கைகள் அளிக்காமல் கருவினத்தை தேர்வு செய்யும் கருவிகள். கருத்தரிப்பிற்கான மாத்திரைகள் விற்கப்படுவது ஆவணங்கள் பராமரிக்கபடாமல் இருப்பது போன்ற மீறல்களை செயல்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர.  ஆனால் இதுவரை உரிய மாவட்ட அமலாக்க அதிகாரியால் சட்டப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடலூர் மாவட்டத்தின் தற்போதைய நிலை:
தற்பொழுது கடலூ மாவட்டத்தில் 126 பதிவு செய்யப்பட்ட ஸ்கேன் மையங்கள் உள்ளது.
50 சதவிகிதத்திற்கும் மேலான மையங்கள் மாத அறிக்கையினை அமலாக்க அதிகாரிக்க கடந்த ஆண்டின் 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டில் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான ஆலோசனை கூட்டம் இரண்டு முறைதான் நடைபெற்றுள்ளது. 60 நாட்களுக்கு ஒரு முறை ஆலோசனை கூட்டங்கள் நடைபெறவேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் 2001 ஆம் ஆண்டின் புள்ளி விவரப்படி பிறக்கும் பெண் குழந்தைகளின் பாலின விகிதம் 10. ஆரம்ப சுகாதார நிலையங்களில்  900&க்கும் குறைவாக உள்ளது. 2010 ஆம் ஆண்டின் புள்ளிவிபரப்படி 33 ஆரம்பசுகாதார நிலையங்களில் 900&க்கும் குறைவாக பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் உள்ளது.
இந்நிகழ்வில் முதல் நாள் கடலூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மற்றும் ஆலோசனைக்குழு தலைவர் திருமிகு ஆ.மனோகரன், கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் திருமிகு புவனேஸ்வரி அவர்கள், கடலூர் மாவட்ட தமிழக நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் திருமிகு நிஜாமுதீன் அவர்கள், அனைத்திந்திய ஜனநாயக சங்க மாநில செயலாளர் திருமிகு வாலென்டினா அவர்கள் மற்றும் கடலூர் மாவட்டத்திலுள்ள பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், பெண்கள் செயல்பாட்டாளர்கள், மக்கள் இயக்கத்தினர்  பங்கேற்றனர்.
கலந்துடையாடலின் இரண்டாம் நாளன்று கடலூர், பண்ருட்டி, நெய்வேலி ஆகிய நகரங்களில் உள்ள ஸ்கேன் மையங்களை நான்கு குழுக்களாக சென்று சட்டத்தின் அமலாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
18.08.2012 அன்று பயிற்சிக்கு வந்திருந்த மொத்த பங்கேற்பாளர்களையும் 4 குழுவாகப் பிரித்து கடலூர் நகருக்கு 2 குழுவும், நெய்வேலி நகருக்கு 1 குழுவும், பண்ருட்டிக்கு 1 குழுவும் சென்றது. இக்குழு அப்பகுதிகளில் உள்ள ஸ்கேன் மையங்கள் சட்டத்திற்கு உட்பட்டு முறையான பதிவு, ஆய்வகங்கள், முழு தகுதியுடைய செவியிலியர்கள், மருத்துவர்கள் உள்ளனரா என்பதை ஆய்வு செய்யவும், அம்மையங்களில் சட்டத்திற்கு புறம்பாக கருக்கலைப்பு நிகழ்கின்றதா என்பதை கண்காணிக்கவும் சென்றனர்.
கடலூர்  - குழு 1
·         கடலூர் நகரத்திலுள்ள 10 ஸ்கேன் மையங்களை உள்ளடக்கிய மருத்துவமனைகளை ஆய்வு செய்வது எனத்திட்டமிட்டு சென்றுள்ளனர். 7 மையங்களை மட்டுமே பார்வையிட முடிந்துள்ளது. 3 மையங்களில் கருகலைப்பு செய்யப்படுவதை கண்டறிந்துள்ளனர்.
·         குறிப்பாக அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ள கண்ணன் மருத்துவமனையில் வரவேற்பரையில் ஏற்கனவே 2 பெண் குழந்தை இருக்கு. இப்ப 3 மாசம் ஆவுது. பாத்துட்டு பொண்ணா இருந்தா கலைக்கணும்என்று பாவையும், சாந்தியும் விசாரித்துள்ளனர். அதற்கு ‘4-ஆம் நெம்பர் ரூமிற்கு போங்க, கவிதா மேடம்னு இருப்பாங்க. சொல்லுங்க செய்வாங்கஎன்று வரவேற்பரையில் கூறியுள்ளனர்.
·         வள்ளிவிலாஸ் மருத்துவமனையில் 2009-ஆம் ஆண்டு 36 பேருக்கும், 2010-ஆம் ஆண்டில் 36 பேருக்கும், 2011-ஆம் ஆண்டு 40 பேருக்கும் சட்டத்திற்கு உட்பட்டு கருகலைப்பு செய்துள்ளதாகக் கூறி, அதற்கான பதிவேடு, விண்ணப்பங்களை காட்டியுள்ளனர். ஆனால் அவைகளில் சிகிச்சைக்காக வந்தவர்களின் கையெழுத்தக்கள் இல்லை.
·         முக்கியமான ஒன்று. இதுபோன்று ஆய்விற்கு வருகின்றார்கள்  என அனைத்து மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையங்களுக்கும் செல்பேசியில் ளுஆளு சென்றுள்ளது. மேற்கண்ட கண்ணன் மருத்துவ மனையில் வெளியில் இருந்த நோயாளிகளிடமும், பார்வையாளர்களிடமும்
·         அரசாங்கத்தில் இருந்து வருகிறார்கள். யாரும், யாரிடமும் எதுவும் சொல்லி விடாதீர்கள்’’ என்று கூறியுள்ளார். எதைச் சொல்லக்கூடாது எனச் சொன்னார்கள் என்பது அவர்களுக்குத்தான் தெரியும்.
·         மேலும், முதல் நாள் இந்தப் பயிற்சியினைத் தொடங்கி வைத்த அரசு சுகாதார மருத்துவத் துறை இணை இயக்குநர், இக்குழுவினர் ஆய்விற்காக செல்லும்போது மேற்கண்ட கண்ணன் மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்துள்ளார். இவர்களைப் பார்த்ததும் ஒன்றும் சொல்லமுடியாமல் விறுவிறுவென வேகமாக வெளியேறியுள்ளார்.


கடலூர் குழு - 2
·         7 மருத்துவமனைகளைப் பார்வையிட திட்டமிட்டு 5&தான் பார்த்துள்ளார்கள். இரண்டிலும் மருத்துவர்கள் இல்லையென செவிலியிர்கள் திருப்பி அனுப்பியுள்ளார்கள். 2 அல்லது 3 மையங்களில் கருகலைப்பு நடப்பதாக கண்டறிந்துள்ளனர். ஆனால் வெளிப்படையாக யாரும் எதுவும் பேசவில்லை. இரண்டு மருத்துவமனைகளில் வெளியிலிருந்த நோயாளிகள், கலைக்கனும்னா நெய்வேலி மகாலட்சுமி போங்க என்று கூறியுள்ளார்கள்.
பண்ருட்டி
·         9 பேர் கொண்ட குழுவினர் 7 மையங்களைப் பார்வையிடக் கிளம்பினர். ஆனால் 4 மையங்களை மட்டுமே பார்வையிட்டுள்ளனர். பார்வையிட்ட அனைத்து இடங்களிலும் இவர்களின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்துள்ளனர். அன்னை ஸ்கேன் மையத்தில் ‘‘திருமணத்திற்கு முன்பே நிறையபே கர்ப்பமாகி வருகின்றார்கள். குடும்பத்துடன் வந்து கெஞ்சுகின்றார்கள். வேறு வழியில்லாமல் செய்கின்றோம்’’ என்று சொல்லியுள்ளனர்.
·         மேலும் இரு மையங்களில் ஆணா, பெண்ணா என்று ஸ்கேன் செய்து சொல்கிறார்கள்.
·         முத்து ஸ்கேன் மையத்திற்கு உதவியாளர்கள் யாருமில்லாமல் சோதனை செய்வதற்கும், கரு கலைப்பதற்கும் இளம்பெண்கள் தனியாகவே வந்துசெல்கின்றனர். இங்கிருந்த மருத்துவர் சங்கர் என்பவர் ‘‘நெய்வேலி மகாலட்சுமிய உங்களால எதுவும் செய்யமுடியல, மத்த இடத்துல எல்லாம் போய் என்ன செய்யப்போறீங்க’’ என்று கூறியுள்ளார்.
·         பண்ருட்டியில் உள்ள அனைத்து மருந்துக் கடைகளிலும் மெஸ்டோபிளாஸ்டோ என்கிற கருகலைப்பு மாத்திரை மிகச்சர்வசாதாரணமாக கிடைக்கின்றது. ஆய்வுக்காக சென்ற 39 பணம் கொடுத்ததும் எந்தக் கேள்வியும் இல்லாமல் ஒரு  வேலைக்கு ஒன்று என இரண்டு மாத்திரைகளைக் கொடுத்துள்ளனர். மருத்துவர்களின் பரிந்துரை, சான்று ஆகியவைகளின் பேரில் மட்டுமே வழங்கவேண்டிய இம்மாத்திரை வெளிப்படையாக விற்கின்றனர்.
நெய்வேலி
·         நெய்வேலியில் உள்ள ராமச்சந்திரன் என்கிற மருத்துவரால் நடத்தப்படுகின்ற மகாலட்சுமி என்கிற மருத்துவமனையில் கடலூர், விழுப்புரம், திருவண்னாமலை, வேலூர், சென்னை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இருந்து கருகலைப்பு மற்றும் குழந்தை ஆணா பெண்ணா எனப்பார்ப்பதற்காக வந்து குவிகின்றனர். சிறிய அளவிலான இந்த தனியார் மருத்துவமனையில் மாவட்ட அரசு தலைமை மருத்துமனையில் இருப்பதைவிட அதிகக் கூட்டம் இருப்பதை எப்போதும் பார்க்கலாமாம்.
·         என்ன நடக்கின்றது என்பதை முழுமையாகத் தெரிந்து கொள்ள ஜெயலலிதா என்கிற பெண்ணை 7 மாத கர்ப்பிணியாக நடிக்கச் செய்து விசாரித்துள்ளனர். வரவேற்பரையில் டோக்கன் போடச்சொல்லியுள்ளனர். அதே பெயரிலேயே டோக்கன் போட்டுள்ளனர். ‘‘ஏற்கனவே 2 பெண் குழந்தை இருக்கு. இதுவும் பொண்ணா இருந்தா கலைக்கனும். இப்ப 7 மாசம் ஆயிடுச்சி கலைக்க முடியுமா?’’ எனக்கேட்டுள்ளனர். ‘‘அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனையில்ல. ஸ்கேன் பாத்துட்டு டாக்டர் சொல்வாரு. அதே மாதிரி செஞ்சிடுவோம். ஒரு பிரச்சனையும் வராது.  1000 ரூபாய் பணம் கட்டி டோக்கன் போடுங்க. ஸ்கேன் செஞ்சி பாத்துட்டு ஒரு மாசத்துக்கு 500 ரூபாய்னு கணக்குபண்ணி, கூட மருந்து செலவு எல்லாம் சேத்து கடைசியா கட்டிக்கலாம்’’ என்று சொல்லியுள்ளனர். இப்போது பணம் இல்லை. பணம் எடுத்துக்கொண்டு பிறகு வருவதாக கூறிவிட்டு வந்துள்ளனர்.

1 comment:

Mohamed Kasim said...

அருமையான பதிவு. இன்று நாட்டில் உருவாகியுள்ள பாலியல் பிரச்சினைகளுக்கு பெண்களின் எண்ணிக்கைத் தட்டுப் பாடும் ஒரு காரணமே! இனி வரும் காலங்களில் இக்கொடுமைகள் பயங்கரமாக அதிகரிக்க உள்ளன. தாங்கள் கூறியுள்ளபடி இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்பது உறுதி. என்ன செய்யலாம் ? உங்கள் திட்டங்களை அறிய ஆவல்.
உங்கள் தகவல்களை எனது http://quranmalar.blogspot.in இல் பயன்படுத்த நினைக்கிறேன். மறுப்பு இருந்தால் தெரிவிக்கவும்