Monday, May 24, 2010

மணிமேகலை



மணிமேகலை, வயது 17,
தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தபெண்
தனக்கு நேர்ந்த அவலம் குறித்து நம்மிடம் கூறியது.

நான் எனது தாயார் லட்சுமி மற்றும் அண்ணன் பார்த்தீபன் ஆகியோருடன் திண்டிவனம் ரோசனை உள்ள குட்டைக்கரையில் வாழ்ந்துவருகிறோம். எனது தந்தை உடல்நிலை சரியில்லாமல் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். நான் திண்டிவனம் எம்.டி.கிரேன் நடுநிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை படித்துளேன். அதன்பிறகு படிக்க, எனது தந்தை இறந்துவிட்ட நிலையில், மேற்கொண்டு படிக்க வழியின்றி படிக்காமல் நின்றுவிட்டேன்.
எனது தாயார் திண்டிவனம் செஞ்சி ரோட்டில் உள்ள மீனாட்சி தியேட்டரில் கூட்டிப்பெருக்குகின்ற துப்புரவு பணி செய்துவந்தார். அதன் மூலமே நாங்கள் குடும்ப ஜீவனம் நடத்தி வந்தோம். எனது அண்ணன் பார்த்தீபன் ராமேஸ்வரத்தில் உள்ள எனது சித்தி வீட்டில் தங்கி, ராமேஸ்வரத்தில் கூலி வேலை செய்துவந்தார். எப்போதாவது ஒருமுறை இங்கு திண்டிவனம் வந்துசெல்வார்.
இந்நிலையில் தியேட்டரில் வேலை செய்துவந்த எனது தாயாருக்கு உதவியாக நானும் சில நேரங்களில் தியேட்டருக்குச் செல்வேன். இந்த துப்புரவுத் தொழிலில் இருந்து கிடைக்கும் குறைந்த வருமானத்தில் எல்லா சமையல் பொருட்களையும் வாங்கி எங்களால் மூன்று வேலையும் சமைக்க முடியாது. அதனால், தியேட்டர் அருகில் உள்ள சிறு இட்லி கடையில் அடிக்கடி சாப்பிடுவோம். அந்த இட்லி கடைக்கு ரோசனை முதலியார் தெருவைச் சேர்ந்த கதிர் என்பவரும் அடிக்கடி வருவார். என்னிடம் இந்தக் கதிர் அடிக்கடி பேச்சுகொடுத்தார். தொடர்ந்து தினமும் என்னை சந்திக்க இட்லி கடைக்கு வருவார். இருவரும் நட்பாகப் பழகினோம். இவையெல்லாம் கடந்த 2009-ஆம் ஆண்டு சூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடந்தது.
தொடர்ந்து அதே ஆண்டு செப்டம்பர் மாதம், மேற்படி கதிர் என்னிடம் ‘‘எனது அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை. எங்க வீட்டிற்கு வேலைக்கு வா’’ என்று என்னைக் கூப்பிட்டார். நான் எனது அம்மாவிடம் கேட்டுச் சொல்வதாக தெரிவித்தேன். பிறகு எனது அம்மாவிடம் சொன்னேன். எனது அம்மவும், தியேட்டரில் இந்தவேலை செய்வதைவிட வீட்டுவேலை நல்லது போய்வா என்றார். இதை நான் கதிரிடம் சொன்னேன். அவரும் அவர்கள் வீட்டில் பேசி என்னை அவரது வீட்டிற்கு வேலைக்குச் அழைத்துச் சென்றார்.

நான் கதிர் வீட்டிற்கு தினமும் காலையும் மாலையும் சென்று, வீட்டில் உள்ள வேலைகளை முடித்துவிட்டு எனது வீட்டிற்கு திரும்பிவிடுவேன். சில நாட்கள் கழித்து கதிர் என்னிடம் என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் அடிக்கடி கூறத்தொடங்கினார். நான், உங்கள் வீட்டில் என்னை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் வேண்டாம் என்றேன். அதற்கு அவர், வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும், உன்னை திருமணம் செய்துகொள்வேன். கைவிட மாட்டேன் என்று கூறினார். அதன்பிறகு தொடர்ந்து என்னை காதலுக்கு வற்புறுத்தினார். மீண்டும் மீண்டும் காதல், கல்யாணம் எனக்கூறி எனது மனதில் ஆசையை வளர்த்தார். ஒரு நாள் அவரது வீட்டிலேயே யாருமில்லாத நேரத்தில் என்னை வற்புறுத்தி, கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டார். அதன்பிறகு கதிரின் தாயாருக்கு உடல் நிலை சரியானதும் என்னை வேலையை விட்டு நிறுத்திவிட்டனர். இதெல்லாம் 3 மாதத்தில் நடந்தது.
இதேநேரத்தில் எனது தாயாருக்கும் உடல்நிலை சரியில்லாமல்போனது. அதனால் தியேட்டருக்கு வேலைக்குப் போவதை நிறுத்திவிட்டார். எனக்கும் வேலையில்லாமல், எனது தாயாரும் உடல் நிலை சரியில்லாமல், வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்தோம்.
எனது தாயாரின் தங்கையும், சித்தியுமான ராக்கி ராமேஸ்வரத்தில் உள்ளார். எனது அண்ணன் பார்த்தீபன், சித்தி வீட்டில் தங்கிக்கொண்டு அங்கு கூலி வேலை செய்தார். உடல்நிலை சரியில்லாத அம்மாவைப் பார்க்க இங்கு திண்டிவனம் வந்தார். இங்கு வேலையில்லாமல் கஷ்டப்பட்டுகொண்டிருந்த எங்களைப் பார்த்துவிட்டு ராமேஸ்வரம் போகலாம் என்று அழைத்தான். அங்கேயே அம்மாவிற்கு சிகிச்சையும் செய்துகொள்ளலாம் என்றான். அதனால் நானும், எனது அம்மாவும் எனது அண்ணன் உடன் ராமேஸ்வரத்திற்கு எனது சித்தி வீட்டிற்குச் சென்றோம். இது 2009 டிசம்பர் கடைசியில் நடந்தது. சனவரி மாதம் வந்த பொங்கலுக்கு நாங்கள் எனது சித்தி வீட்டில் ராமேஸ்வரத்தில் இருந்தோம்.

நான் ராமேஸ்வரத்தில் இருந்தபோதும், திண்டிவனத்திலிருந்து கதிர் எனது சித்தியின் செல்போன் மூலமாக என்னுடன் பேசுவான். தெரிந்தவர், சும்மா பேசுகின்றார் என்று என்று எனது சித்தியிடம் சொல்லிவிடுவேன். ராமேஸ்வரத்தில் எனக்கு மாதவிலக்கு வராமல் தள்ளிப்போனது. சந்தேகப்பட்ட நான், எனது வீட்டில் யாரிடமும் எதுவும் சொல்லாமல் தனியாக ராமேஸ்வரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு என்னைப் பரிசோதித்த மருத்துவர், நான் மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாக் கூறினார். மேலும் கர்ப்பம் வயிற்றில் முழுமையாக வளர்ந்துள்ளது என்றும், கூறியுள்ளார். செய்வதறியாமல் திகைத்து, யாரிடமும் எதுவும் சொல்லமுடியாமல் சில நாட்கள் தவித்துக்கிடந்தேன்.

இதற்கிடையில் எனது அம்மா, உடல் நிலை சரியில்லாதபோது, சீக்கிரம் சரியானால் தனுஷ்கோடி ரெட்டைதலை கோயிலுக்கு கிடா வெட்டுவதாக வேண்டியுள்ளார். அதிகம் செலவழிக்காமல் உடல்நிலை சரியானதும் வேண்டுதலை நிறைவேற்ற பணம் புரட்டியபோது ராமேஸ்வரத்தில் எனது அம்மாவிற்கு பணம் கிடைக்கவில்லை. அதனால் திண்டிவனத்தில் பணம் கேட்டார்கள். அவர்கள் தருவதாகவும், உடனடியாக வந்துவாங்கிக்கொள்ளும்படியும் சொல்லியுள்ளார்கள். அதனால அந்தப்பணத்தை வாங்குவதற்காக எனது அம்மா திண்டிவனம் கிளம்பினார்கள். கூடவே என்னையும் திண்டிவனம் அழைத்துவந்தார்கள்.
திண்டிவனம் வந்ததும், பணம் தருவதாகக் கூறியவர்கள் இப்போது இல்லை என்று கூறிவிட்டார்கள். காலையில் வந்ததும் பணம் தருவதாகக் கூறியவரை நேரில் பார்த்தார்கள். பணம் இல்லை என்றதும், ராமேஸ்வரம் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று எனது தாயார் அன்று மாலையே ராமேஸ்வரம் கிளம்பினார்கள். என்னையும் அழைத்தார்கள். நான், கதிரை சந்தித்து கல்யாணம் செய்துவிடவேண்டும் என முடிவெடுத்து, எனது அம்மாவுடன் ராமேஸ்வரம் போக மறுத்துவிட்டு, திண்டிவனத்தில் எனது பெரியம்மா வீட்டிலேயே தங்கினேன்.
எனது அம்மா, ராமேஸ்வரம் சென்ற மறுநாளே கதிரை சந்தித்து உடனடியாக திருமணம் செய்துகொள்ளும்படி பேசினேன். கதிர் பல்வேறு காரணங்களைச் சொல்லி என்னை சந்திப்பதைத் தவிர்த்தார். நானும் விடாமல் எப்படியாவது சந்தித்து பேசிவிடவேண்டும் என முடிவெடுத்து, தொடர்ந்து முயற்சி செய்தேன். என்னிடமிருந்து தப்பிக்க வழியில்லாமல் கதிர் என்னை சந்தித்தான். சந்தித்தபோது எனது கர்ப்பத்தை கலைப்பதற்கு மாத்திரைகளை வாங்கி வந்து என்னை விழுங்குமாறு கட்டாயப்படுத்தினான். நான் விழுங்க மறுத்தேன். ஆ ஆனால் எனது கையையும், காலையும் அழுத்திப்பிடித்து வாயில்போட்டு விழுங்கச் செய்தான். உடனடியாக நான் துப்பிவிட்டேன்.
கதிர் என்னை அடுத்தமுறை சந்தித்தபோது, முன்னாடி கொடுத்த மாத்திரையில் கரையவில்லையே எனக்கூறி கர்ப்பத்தை கலைக்க திண்டிவனம் செஞ்சி பஸ்ஸாண்டில் உள்ள ரஜினி டாக்டரிடம் அழைத்துச்சென்றான். பரிசோதித்த மருத்துவர் 6 மாதம் ஆகிவிட்டது இனி கலைக்க முடியாது என மறுத்துவிட்டார்.
அடுத்தமுறை நான் கதிரிடம் தனியாக பேசிக்கொண்டிருந்தபோது எனது பெரியம்மா ஒருவர் பார்த்துவிட்டு விசாரித்தார். அதன்பிறகு எனது உறவினர் அனைவருக்கும் எல்லாம் தெரிந்தது. அதன்பிறகு எனது உறவினர்கள் கதிரை எங்கள் இடத்திற்கு வரவழைத்தார்கள். விசாரித்தார்கள். சிறைபிடிக்கப்பட்ட கதிர், தனது பெற்றோரிடம் பேசி இரண்டொரு நாட்களில் திருமணம் செய்துகொள்வதாகக் எனது உறவினர்களிடம் கூறினான். நம்பிய உறவினர்கள் கதிரை விடுவித்தனர்.
பெற்றோரிடம் பார்த்துப் பேசிவிட்டு வருவதாகச் சொல்லிச் சென்ற கதிர் ஐந்து நாட்களாகியும் எந்தவொரு தகலும் இல்லை. சந்திக்க முயன்றாலும் முடியவில்லை. இந்நிலையில் யாரென்று தெரியாத பலர், எங்களிடம் வந்து சமாதானம் பேசினார்கள். பணம் வாங்கித் தருவதாகக் கூறினார்கள். மேலும், எங்களை மிரட்டவும் தொடங்கினர். அதன்பிறகுதான், எங்கள் ரோசனைப் பகுதியைச் சேர்ந்த சாரதியும், அவரது நண்பர்களும் என்னைப் பார்த்துப் பேசி எனக்கு ஆறுதல் சொன்னார்கள். ஆதரவும் அளித்தார்கள்.
ராமேஸ்வரத்திலிருந்த எனது அம்மா வந்ததும் 10-03-10 அன்று இரவு 11.15 மணியளவில், ரோசனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ரசீது தந்தார்கள். மறுநாள் 11.03.10 காலை காவல் நிலையம் வரச்சொன்னார்கள். சென்றோம். விசாரித்து, அன்று மாலை வழக்குப்போட்டு, எப்.ஐ.ஆர் காப்பி கொடுத்தார்கள்.

No comments: