Sunday, October 12, 2025

கூட்ட நெரிசல் விபத்துகள் உயிரிழப்புகள், தடுப்பதற்கான கொள்கை உருவாக்கப்படவேண்டும்.

கூட்ட நெரிசல் விபத்துகள், உயிரிழப்புகள்.
தடுப்பதற்கான கொள்கை (Policy) உருவாக்கப்படவேண்டும்.
 

முருகப்பன் ராமசாமி

சுனாமியால்  2004 ஆம் ஆண்டு பெரும் பேரழிவு ஏற்பட்டது. உலகின் பல நாடுகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. உடமைகள் சேதமடைந்தன. சுற்றுச் சூழல் மற்றும் இயற்கையின் சுழற்சியிலும் பாதிப்புகள் உருவானது.

இந்தப் பெரும் பேரழிவிற்குப் பிறகுதான், 2005 ஆம் ஆண்டு நமது நாட்டில் பேரிடர் மேலாண்மைக் சட்டம் உருவானது. தமிழக அரசு 2023 ஆம் ஆண்டும் பேரிடர் மேலாண்மைக்கான கொள்கையை வெளியிட்டது.

இந்நிலையில் அண்மைக் காலமாக கூட்ட நெரிசல்களால் விபத்துகள் ஏற்படுவது, அதில் அதிகம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனைத் தடுக்க ஒரு கொள்கை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

இந்த கொள்கையானது ஏதேனும் ஒரு நிகழ்வில் கட்டுக்கடங்காத எண்ணிக்கையில் கூடும் மக்கள் கூட்டத்தில் எழும் விபத்துகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும். மேலும், கூடுகின்றவர்களின் பாதுகாப்பதற்கான செயல்முறைகளை கொண்டிருக்கும்.

          கூட்ட நெரிசல்களில் நிகழும் விபத்துகள்.

கூட்ட நெரிசலால் ஏற்படும் விபத்துகளும் மரணமும் அடிக்கடி நிகழ்கின்றன. இதுபோன்ற விபத்துகளில் உடனடி மரணங்கள் ஏற்படுவதுடன், மூச்சுத் திணறல், மயக்கம், சோர்வு, வலுவிழத்தல், உடல் காயங்கள், உடல் உறுப்பு இழப்பு மற்றும் சேதம், மன உளைச்சல், பதட்டம், மன நிலை சீர்குலைதல், அச்சம் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் உள்ளிட்டவைகள் நிகழ்கின்றன.

விபத்து நிகழ்ந்ததும் அதன் தன்மை, பாதிப்பு, மரணங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து உடனடியாகப் பெரும் அதிர்வை உண்டாக்கினாலும், அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தான் அடுத்தடுத்த நிகழ்வுகள் காட்டுகின்றது.

இதுபோன்ற கூட்டங்களை ஒழுங்குபடுத்தி விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் இல்லாமல் நடத்த, மேலாண்மைக் கொள்கை அவசியம் தேவை என்பதை கரூர் விபத்து உணர்த்துகின்றது. இதுபோன்ற கொள்கைகள்தான் பிற்காலங்களில் சட்டமாக உருவாகவும் அடிப்படையாக உள்ளன. 

கூட்ட_நெரிசல்_ஏற்படும்_இடங்கள்.

மதம், கோவில் சார்ந்த திருவிழாக்களிலும் அரசியல் கூட்டங்கள், பொது விழாக்கள், மரணம் மற்றும் நினைவுநாள், இசை மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் போன்றவைகள் மக்கள் அதிகம் கூடும் இடங்களாகவும், கூட்ட நெரிசல் ஏற்படும் நிகழ்வுகளாகவும் உள்ளன.

மேலும், கடைகள் திறப்பு விழாவில் பங்கேற்கும் நடிகர் நடிகைகளைக் காணவும், உணவு உடை உள்ளிட்டவைகளுக்கான விலை குறைப்பு அல்லது இலவச அறிவிப்புகளை நம்பியும் கூடுவது சமீப காலமாக அதிகரித்து வருகின்றது. மகிழ்ச்சியான தெருக் கொண்டாட்டம் (Happy Street) எனும் அரசு நிகழ்சிகளிலும் பெருங்கூட்டங்கள் கூடுகின்றது. இளையராசா, ரகுமான் போன்ற இசையமைப்பாளர்களின் நிகழ்ச்சிகள் எண்ணிலடங்கா கூட்டம் வருகின்றது. கூட்டத்தை கட்டுப்படுத்தப் முடியாமல் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதையும் கண்டுள்ளோம். இவைமட்டும் இல்லாமல், சமூக ஊடகங்களுங்களின் அழுத்தங்கள் காரணமாகவும் சில தனி நிகழ்ச்சிகளில் கூட்டங்கள் கூடுகின்றன.

 

விபத்துகளுக்கான_காரணங்கள்.

பாதுகாப்புக் குறைபாடுகள், அவசரமாக வெளியேற போதுமான வழிகள் இல்லாமல் இருப்பது, கூட்டங்களைக் கையாளுவதில் (crowd management) போதிய பயிற்சி இல்லாத பணியாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், திட்டமிடல் குறைபாடு போன்றவை விபத்துகளுக்கான காரணங்களாக உள்ளன.

ஆக, அரசு, நீதிமன்றம், காவல் துறை போன்றவைகள் என்னதான் கட்டுப்பாடுகள் விதித்தாலும், கூடுகின்ற மக்களுக்கு கூட்ட நெரிசல் ஆபத்து, மற்றும் பாதுகாப்பு குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதும் விபத்துகள் அதிகம் நடைபெற காரணமாக உள்ளது.

 மக்கள்_ஏன்_அதிக_அளவில்_கூடுகின்றார்கள்?

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்கள் ஏன் இப்படி திடீரென, கூட்டம் கூட்டமாக திரண்டு வருகின்றனர்? ஒரு சிறிய நிகழ்விற்கு கூட மக்கள் பெரும் திரளாக அதுவும் குழந்தைகள், முதியவர்கள் என அனைவரையும் கூட்டிக்கொண்டு வருவது ஏன்? இதற்கு பின்னால் என்னவெல்லாம் உளவியல் காரணங்கள் இருக்கின்றன? என மருத்துவர் சிவபாலன் கடந்த ஆண்டு எழுதியுள்ள ஒரு கட்டுரையில், ’’ஊரடங்கிற்கு பிறகான மனநிலை சமூக கூடலின் மீது மக்களுக்கு ஒர் ஆர்வத்தை உருவாக்கியிருக்கலாம். பொருளாதார வசதி என்பதையெல்லாம் மீறி அத்தனை நிகழ்வுகளுக்கும் செல்ல வேண்டும் என்ற முனைப்பு மக்களிடம் ஏற்பட்டிருக்கலாம் அதனால்தான் குழந்தைகளையும் கூட்டி செல்லுமளவிற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள். சமூக வலைதளங்களின் அங்கீகாரத்திற்கான ஏக்கம் பெரும்பாலான மக்களிடம் இருக்கிறது. இந்தச் சூழலில் ஒரு நிகழ்வு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்படும் போது, அந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்ற வெளிப்புற அழுத்தம் ஒன்று மக்களிடம் உருவாகிவிடுகிறது, கலந்து கொள்ள முடியாமல் போனால் எல்லோருக்கும் கிடைக்கும் அந்த அனுபவத்தை இழந்து விடுவோமோ என்ற பதட்டத்தின் விளைவாக கலந்துகொண்டே ஆக வேண்டும் என்ற முனைப்பு அவர்களுக்கு வந்துவிடுகிறது. இந்த தனித்து விடுவதின் மீதான அச்சம் (Fear of Missing Out) தான் மக்கள் சிறு நிகழ்வுகளுக்கு கூட பெருமளவில் கூடுவதற்கு முதன்மையான காரணம்’’ என்கிறார்.

 

மேலும் அவர், ’’அன்றாட வாழ்க்கையில், எப்போதும் வேலை சார்ந்தே சிந்திக்கக்கூடிய, செயல்படக்கூடிய நிலை உருவாகியிருக்கிறது. இதனால் ஏற்படும் மனவுளைச்சலில் இருந்து மீளும் தற்காலிக வழியாக இது போன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்கள். எந்திரத்தனமான வாழ்க்கையிலிருந்து ஒரு சிறிய இளைப்பாறுதலாக இப்படிப்பட்ட நிகழ்வுகளை மக்கள் பார்க்கிறார்கள் ஆனால் இப்படிப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்வதும் அதற்கான போக்குவரத்தும் அங்கு ஏற்படும் நெருக்கடிகளும் அவர்களின் மனவுளைச்சலை மேலும் மோசமாக்குகின்றன.

மக்களின் வாழ்க்கை முறைகளில் சமீபத்தில் நடந்திருக்கும் இந்த மாற்றங்களின் விளைவாக ஏதேனும் சமூக கூடலின் மீது பெரும்பாலானவர்களுக்கு நாட்டம் வந்திருக்கிறது. அதனால் விளைவுகளை பற்றி சிந்திக்காமல் மக்கள் ஒரு சாகச மனநிலையில் இப்படிப்பட்ட நிகழ்வுகளில் பெருமளவு கலந்து கொள்கிறார்கள்” என்றும் கூறுகிறார்.

 

கூட்ட_நெரிசல்_மற்றும்_விபத்துகள்

பாதுகாப்பு_கொள்கை_2025_வரைவு

 

பொது நிகழ்ச்சிகள், அரசியல் கட்சிகளின் மாநாடு, கூட்டம், பேரணிகள், திருவிழா, இசை நிகழ்சிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்கின்ற கூட்டங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலால் ஏற்படும் விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுப்பது குறித்து கொள்கை.

 1. நோக்கம்

கூட்டநெரிசலால் ஏற்படும் உயிரிழப்புகள், பாதிப்பு, சொத்துகள் சேதம் போன்றவற்றை தடுப்பது, கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனைகள், வழிகாட்டுதல் உள்ளிட்டவைகள் கொண்ட நடைமுறை செயல்பாடுகளை வரையறுத்தல்.

 2. இடம்.

பள்ளி, கல்லூரி, திரையரங்கங்களில் அதன் பரப்பளவின் அடிப்படையில்தான் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை அனுமதிக்கப்படுகிறது. இதே போன்று, பொது நிகழ்சிகள் கூட்டங்கள் கூடும் இடங்களின் பரப்பளவிற்கு ஏற்ற எண்ணிக்கையில் மக்கள் கூடுவதற்கான திட்டமிடல் உருவாக்கப்படவேண்டும்.

 3. பொறுப்புகள்

நிகழ்ச்சி அல்லது கூட்ட ஏற்பாட்டாளர்கள் அல்லது அந்த நிகழ்வுக்கு பொறுப்பான அமைப்பு, கட்சி, நிர்வாகம் இந்த கொள்கையினை பின்பற்றி செயல்படுத்தவேண்டும்.

 

4. திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு

·   மேடை அமைத்து நடைபெறும் பொதுக்கூட்டம், மாநாடு போன்றவைகளுக்கு பொதுமக்கள் கூடும் இடங்கள், பொதுப் போக்குவரத்து உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலை அருகில் அருகில் நடைபெறுவதை தவிர்க்கவேண்டும். பொதுப்போக்குவரத்து பாதிக்காத வகையில் தனியிடம் ஒதுக்கப்படவேண்டும்.

·       வாகனங்களின் மூலம் பரப்புரைப் பயணம் எனில், மேடை இல்லாமல், ஊருக்குள் மக்கள் மக்கள் கூடும் இடங்களில் நடைபெறும் கூட்டங்கள் / பரைபுரை எனில், சரியான நேரம், இடத்திற்கு உரிய மக்கள் பங்கேற்பு உறுதி செய்துகொள்ளவேண்டும்.

·       உள்ளே, வெளியே செல்லும் பாதைகள், மக்கள் எண்ணிக்கைக்கு போதுமான வழிகள் அமைக்கப்படவேண்டும்.

·       அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை வசதிகள்.

·       காவல், தீயணைப்பு, சுகாதாரம் துறைகளுடனும், மாவட்ட மற்றும் உள்ளூர் அளவிலான அரசு நிர்வாகத்துடன் இணைந்து திட்டமிடல் ஒருங்கிணைப்பு.

·       முதலுதவி சிகிச்சைக்கான மருத்துவக் குழு.

 

5. ஆய்வு

·       ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு முன்பும் கட்டாயம் பாதுகாப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகளும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழுவினரும் இணைந்து ஆய்வு செய்ய வேண்டும்.

·       இடத்திற்கேற்ப பங்கேற்பாளர்களை மட்டும் எப்படி அனுமதிப்பது, கூடுதலாக வந்தால் அவர்களுக்கான மாற்று ஏற்பாடு என்ன என்பது குறித்து விரிவான திட்டமிடல் வேண்டும்.

 

6. தன்னார்வளர்கள் மற்றும் பணியாளர்களுக்குப் பயிற்சி

·       மக்கள் எண்ணிக்கைக்கேற்ப, குறைந்த பட்சம் 500 அல்லது 100 பேர் இருந்தாலும் கூட்டத்தினை ஒழுங்குபடுத்தும் மேலாண்மை பயிற்சி அவசியம்.

·       உள்ளே, வெளியே மற்றும் அவசர கால பாதைகள் குறித்த அறிவிப்புகள், அடையாளங்கள் வெளியிடப்படவேண்டும்.

·       அவசரக் கால வெளியேற்றம் குறித்து செயல்முறையினை செய்து பார்க்கலாம்.

·       நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு மற்றும் தகவல்தொடர்பு CCTV & நேரடி கண்காணிப்பு, முக்கிய இடங்களில் வீடியோ.

·       குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் பாதுகாப்பு குறித்த சிறப்புக் கண்னோட்டம்.

 மேலும் சில பரிந்துரைகள்.

·       கூட்டங்களில் குழந்தைகள், வயதானவர்கள், மூச்சுத் திணறல் போன்ற உடல் குறைபாடுகள் உள்ளவர்கள் போன்றவர்கள் கூட்டங்களில் பங்கேற்பதைத் தவிர்ப்பது.

·       பங்கேற்பாளர் அனைவருக்குமான காற்றோட்டமுள்ள இடம், தண்ணீர், கழிவறை, இருக்கை, நடந்து செல்ல, வாகனங்கள் செல்ல மற்றும் அவசர காலத்தில் வெளியேறும் வழிகள் குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், நிர்வாகிகள் முன்பே திட்டமிட வேண்டும்.

·       தீ, வெடிவிபத்து, வெள்ளம் போன்ற பேரிடர் ஆபத்துகளில் சிலநிமிடங்களில் வெளியேற்றப்படுவது போன்ற பயிற்சிகள் வேண்டும்.

·       பெரும் எண்ணிக்கையில் கூடும் கூட்டங்கள் முடிந்தபிறகு, அங்கு சிதறிக்கிடக்கும் காலியான தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள், உணவு பொட்டங்கள் உள்ளிட்ட குப்பைகளை அகற்றுவதை கண்டிருப்போம். ஆனால், விஜய் கூட்டும் கூட்டங்கள் முடிந்தபிறகு வெறும் செருப்புகள் மட்டுமே குவியல் குவியலாக கிடக்கின்றது. தண்ணீர் மற்றும் உணவுப் பொருள் குப்பைகள் காணப்படுவதில்லை.

·       கூட்டம் முடிந்தபிறகு அவ்விடத்தில் உள்ள குப்பை மற்றும் கழிவுகளை அகற்றுவது குறித்து முன்கூட்டியே திட்டமிடுதல்.

·       பொதுப்போக்குவரத்து மிகுந்த நெடுஞ்சாலைகள் அருகே கூட்டங்கள் / நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் பொதுப்போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனால், ஏற்படும் இழப்பு, பாதிப்புகள் எங்கும் யாருடைய கவனத்திற்கும் வருவதில்லை. எங்கும் பதிவு ஆவதில்லை.

 

2008 முதல் 2025 வரை

இந்தியாவில்  கூட்ட நெரிசல் விபத்துகளும் உயிரிழப்புகளும்

 

·       2025 செப்டம்பர் 27 – கரூரில் நடைபெற்ற, தமிழக வெற்றிக் கழக பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் 10, பெண்கள் 17 உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்துள்ளனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். த.வெ.க நடத்திய விக்கிரவாண்டி மாநாட்டில் 5 பேரும், மதுரை மாநாட்டில் 3 பேரும் இறந்துள்ளனர். இதற்கு முன்பு இக்கட்சி நடத்திய கூட்டங்களில் மதுரையில் 14, விழுப்புரத்தில் 42, திருச்சியில் 12, அரியலூரில் 6, திருவாரூரில் 17, நாகையில் 5, நாமக்கல்லில் 35 பேர் காயமடைந்துள்ளனர்.

·       மே 3, 2025 – கோவா, ஷிர்காவ், கோவில் திருவிழாவின்போது நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். சுமார் 100 பேர் காயமடைந்தனர்.

·       பிப்ரவரி 15, 2025, புது டெல்லி ரயில் நிலையம். கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு. கும்பமேளா செல்ல ஒரே நேரத்தில் திரண்ட பயணிகள் கூட்டம்.

·       ஜன.29, 2025: உத்தரப் பிரதேசம், மகா கும்பமேளா, திரிவேணி சங்கமம் பகுதியில் புனித நீராடுவதற்காக லட்சக்கணக்கானோர் கூடிய கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர், 60 பேர் காயமடைந்தனர்.

·       ஜன.8, 2025: ஆந்திரா, திருப்பதி கோவில், வைகுண்ட தரிசன டிக்கெட்கள் வாங்கும்போது கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் மரணம். பலர் காயம்.

·       டிச.4, 2024: தெலுங்கானா, ஹைதராபாத், சந்தியா திரையரங்கம், புஷ்பா-2 திரையிடலுக்கு வந்த நடிகர் அல்லு அர்ஜுனைப் பார்ப்பதற்காக கூடிய கூட்ட நெரிசலில் 35 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது மகன் காயமடைந்தார்.

·       2024 அக்டோபர் 6, சென்னை மெரினா கடற்கரை. விமானப் படை சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

·       ஜூலை 2, 2024: உத்தரப் பிரதேசம், ஹத்ராஸில் பாபா சாமியார் நடத்திய பிரார்த்தனைக் கூட்ட நெரிசலால் குழந்தைகள் உட்பட 121 பேர் உயிரிழந்தனர்.

·       மார்ச் 31, 2023: இந்தூர், ராமநவமி கோவில் திருவிழா, கிணற்றுக் கூரை இடிந்து விழுந்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.

·       ஜன.1, 2022: ஜம்மு காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்னோ தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

·       செப்.29, 2017: மும்பையின் மேற்கு ரயில்வே பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 23 பேர் உயிரிழந்தனர். 36 பேர் காயமடைந்தனர்.

·       ஜூலை 14, 2015: ஆந்திரா, ராஜமுந்திரி, கோதாவரி நதிக்கரையில் புனித நீராட்ட நெரிசலில் 27 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.

·       அக்.3, 2014: பிஹாரின் பாட்னா. தசரா கொண்டாட்டம் கூட்ட நெரிசலில் 32 பேர் உயிரிழந்தனர். 26 பேர் காயமடைந்தனர்.

·       அக்.13, 2013: மத்தியப்பிரதேசம், டாடியா மாவட்ட ரத்தன்கர் கோயில் நவராத்திரி திருவிழா கூட்ட நெரிசலில் 115 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

·       நவ.19, 2012: பீகார், பாட்னா, கங்கை நதிக்கரை சாத் பூஜை கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

·       நவ.8, 2011: ஹரித்வாரில் கங்கை நதிக்கரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 20 பேர் உயிரிழந்தனர்.

·       ஜன.14, 2011: கேரளா, இடுக்கி மாவட்டம், புல்மேடு பகுதியில் சபரிமலைக்குச் சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது சொகுசு கார் ஒன்று மோதியதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 104 பக்தர்கள் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர்.

·       மார்ச் 4, 2010: உத்தரப் பிரதேசம், பிரதாப்கர் மாவட்டம், கிருபாலு மகாராஜ் ராமர் ஜானகி கோயிலில் இலவச உணவு மற்றும் உடை வழங்கும் விழாவில் உண்டான கூட்ட நெரிசலால் 63 பேர் மரணம்.

·       செப்.30, 2008: ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர், சாமுண்டா தேவி கோயிலில் வெடிகுண்டு வதந்தியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 250 பேர் மரணம்.

·       ஆக.3, 2008: இமாச்சலப் பிரதேசம், பிலாஸ்பூர் மாவட்டம், நைனா தேவி கோயிலில் பாறை சரிந்ததாக பரவிய வதந்தியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 162 பேர் உயிரிழந்தனர், 47 பேர் காயமடைந்தனர்.

-----------------------