Sunday, February 13, 2011

கடலூர் புனிதவளனார் பள்ளியில் மாணவன் மர்ம மரணம் - உண்மை அறியும் குழு அறிக்கை

கடலூர் புனித வளனார் பள்ளி
மாணவன் ஜாய்ஸ்
மர்ம மரணம்
உண்மை அறியும் குழு அறிக்கை

கடலூர்

08.02.2011

கடலூர் புனித வளனார் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவன் ஜாய்ஸ் ஆல்வின் போஸ் (13) சென்ற 31.01.2011 அன்று திடீர் மரணம் அடைந்ததையட்டி, கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவாகி விசாரணை நடைபெறுகிறது. இந்த மரணத்தில் பல மர்மங்கள் உள்ளதாக மாணவனின் பெற்றோரும், சில அரசியல் இயக்கங்களும் குற்றம்சாட்டுகின்ற நிலையில் இதுகுறித்த உண்மைகளை அறிந்து வெளியிட கீழ்கண்ட உண்மை அறியும் குழு உருவாக்கப்பட்டது.

1. பேராசிரியர் அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், சென்னை.

2. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.

3. இரா. முருகப்பன், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம், திண்டிவனம்.

4. ஆ. ஜெயராமன், மக்கள் கண்காணிப்பகம், கடலூர்.

5. சு. காளிதாஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி.

6. இரா. பாபு, இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம், கடலூர்.

இக்குழுவினர் நேற்று (பிப்ரவரி 8) சின்னமாரனோடை (விழுப்புரம் மாவட்டம்) கிராமத்தில் வசிக்கும், இறந்த மாணவனின் பெற்றோர்களான ஆரோக்கியதாஸ் -விண்ணரசிராணி மற்றும் உறவினர்கள், கடலூர் புனித வளனார் பள்ளி முதல்வர் அருட்தந்தை ஆக்னல், விடுதிப் பொறுப்பாளர் அருட்தந்தை மரிய அந்தோணி, கடலூர் அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் நா.ராமச்சந்திரன், பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர் ஆர்.சரவணன், புதுநகர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆரோக்கியராஜ் மற்றும் ஜாய்ஸ் உடன் விடுதியில் இருந்த 30&க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆகியோரைச் சந்தித்து விசாரித்தது. இவற்றின் அடிப்படையில் கீழ்கண்ட எமது பார்வைகள் முன்வைக்கப்படுகின்றன.

சம்பவம்:

சென்ற ஞாயிறு 30.01.2011 அன்று மாலை மாணவன் ஜாய்ஸ் உடல் நலமற்று இருப்பதாக, விடுதியில் இருந்து மாணவர் தலைவன் மைக்கேல் மூலம் பெற்றோருக்கு செல்பேசியில் தகவல் சொல்லப்பட்டுள்ளது. அடுத்த நாள் மதியம் மாணவனைப் பார்க்க பெற்றோர் விரைந்துள்ளனர். மாலை நான்கரை மணியளவில் அவர்கள் கடலூரை வந்தடைந்தபொழுது, மீண்டும் தொலைபேசியில் மாணவன் கவலைக்கிடமாக கண்ணன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளி நிர்வாகத்திடமிருந்து தகவல் வந்துள்ளது. அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்ததையடுத்து, மருத்துவமனையில் செயற்கை சுவாசம், குளுக்கோஸ் ஏற்றப்பட்ட நிலையில் மாணவன் ஜாய்ஸ் கிடந்துள்ளான். உடனடியாக அவனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கூறியதன் அடிப்படையில் அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளான். அரசு மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் ஏற்கனவே இறந்து போனதாக தெரிவித்து, சவக்கிடங்கிற்கு உடலை அனுப்பியுள்ளனர். பிரேதப் பரிசோதனையின்பின்பு உடல் மாணவனின் சொந்த கிராமத்திற்று கொண்டுசெல்லப்பட்டு, காவல் துணை கண்காணிப்பாளர் முருகேசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் ஆகியோர் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்தை நடத்தப்பட்டு ஜாய்சின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சுதந்திரமான விசாரணை நடப்பதற்கு ஏதுவாக பள்ளி முதல்வர் அருட்தந்தை ஆக்னல், விடுதிக் காப்பாளர் கிறிஸ்துதாஸ் உள்ளிட்ட 4 விடுதிக் காப்பாளர்கள் அனைவரும் பள்ளிப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் எனவும், மாணவன் மரணம் குறித்த விசாரணையில் பள்ளி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிப்பது எனவும், இழப்பீட்டுத் தொகையாக இறந்த மாணவன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் கொடுப்பது என்கிற கோரிக்கை கனிவுடன் பரிசீலிப்பது எனவும் அமைதிப் பேச்சுவார்த்தையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பெற்றோர்கள் தரப்பின் குற்றச்சாட்டுகள்:

சென்ற 2010 சூன் மாதம் முதல் இப்பள்ளியில் படித்துவரும் மாணவன் ஜாய்சை விடுதிக் காப்பாளர் ஒருவர் தொடர்ந்து அடித்தும், பிறவகையில் துன்புறுத்தியும் வந்துள்ளார். ஜாய்சை பெற்றோர் சமாதானப்படுத்தி பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். ஒரு சந்தர்ப்பத்தில் அவன் காதுகளில் அடிபட்ட காயம் இருந்தது எனவும் பெற்றோர் குறிப்பிட்டனர். விடுதிக் கப்பாளர் கிறிஸ்துதாஸ் என்பவர் தொடர்ச்சியாக சாதிக் காழ்ப்புடன் ஜாய்சை தாக்கி வந்ததே மரணத்திற்கு காரணம், அடித்தனாலேயே அவன் இறந்துள்ளான் என உறுதியாக கூறுகின்றனர்.

பள்ளித் தரப்பின் வாதம்:

விடுதிக் காப்பாளரால் அடிபட்டதன் விளைவாகவே மரணம் சம்பவித்தது என்பது தவறு. ஜாய்சுக்கு அடிக்கடி உடல் நலமில்லாமல் இருந்து வந்துள்ளது. ஞாயிறு மாலை அவனுக்கு காய்ச்சல் இருந்ததைக் கண்டு, வீட்டுக்கு தகவல் சொன்னதோடு அரசு பொது மருத்துமனைக்கு அழைத்துச் சென்று காய்ச்சலுக்கு மாத்திரை வாங்கியும் கொடுத்தோம். விடுதி நோயாளிகளுக்கான அறையில் படுக்க வைக்கப்பட்டிருந்த ஜாய்சின் உடல்நிலை மோசமாக இருப்பதாக மாணவர்கள் சொன்னதை அறிந்து, அடுத்த நாள் மாலை கண்ணன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றோம். மாணவனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் சொன்னதின் பேரில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கிருந்த மருத்துவர்கள் மாணவன் இறந்துவிட்டதாக அறிவித்தனர். மாணவர்களை அடிக்கும் வழக்கம் எங்கள் பள்ளியில் கிடையாது. சம்பவத்திற்கு முந்தைய நாட்களில் ஒரு நாள் தவிற பிறநாட்களில் காப்பாளர் கிறிஸ்துதாஸ் விடுப்பில் இருந்துள்ளார்.

எமது பார்வைகள்:

1. நாங்கள், மாணவர்கள் மத்தியில் விசாரித்த வகையில் கடலூர் புனித வளனார் பள்ளி விடுதி மாணவர்களை காப்பாளர்கள் கடுமையாக அடிப்பதும், மைதானத்தில் சுற்றி ஓடவிடுவதும் போன்ற தண்டனைகளை அளிப்பது நடைபெற்று வந்துள்ளது. இதுதவிர மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்குவது என்பதை விடுதியின் பொறுப்புத் தந்தையும் செய்து வந்துள்ளார். தங்கள் மகன் இறந்த வருத்தத்தில் பெற்றோர்கள் இத்தகைய குற்றச்சாட்டை வைக்கின்றார்களோ என்கிற அய்யம் மாணவர்களிடம் பேசும்போது எங்களுக்கு நீங்கியது.



முதலில் தயங்கிய மாணவர்கள் பிறகு தொடர்ச்சியாக அங்கு கொடுக்கப்படும் தண்டனைகள் பற்றி எங்களிடம் குமுறினர். அதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் எல்லா மாணவர்களும் மூன்று விடுதிக் காப்பாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களே கடுமையாக தண்டனைகள் வழங்குவதாக குறிப்பிட்டனர். அவ்விடுதிக் காப்பாளர்ளின் பெயர்கள்: கிறிஸ்துதாஸ், மகிமை, என்.பீட்டர். இதில் கிறிஸ்துதாஸ் என்கிற காப்பாளர் மாணவன் ஜாய்சை குறிவைத்து தொடர்ந்து கடுமையாக அடித்து துன்புறுத்தி வந்ததை மாணவர்களின் கூற்றிலிருந்து அறிய முடிந்தது. குறிப்பாக கிறிஸ்துதாஸ் இறையூர் கிராமத்தைச் சேர்ந்த வன்னியர் கிறிஸ்துவர் என்பதும், ஜாய்ஸ் ஒரு தலித் கிறித்துவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இந்தப் பின்னணியிலேயே அவர் ஜாய்சை அடித்து வந்துள்ளார் என இக்குழு கருதுகிறது.



2. மாணவனுக்கு சிகிச்சை அளிப்பதில் பள்ளி நிர்வாகம் மிகவும் கவனக் குறைவுடன் நடந்துள்ளது. உடனடியாக பெற்றோர்களை அழைத்துவர எந்தவொரு ஏற்பாடும் செய்யாததோடு மருத்துமனையிலிருந்து திரும்பி வந்தபின்பு, அடுத்த நாள் மாலைவரை அந்த மாணவனின் உடல்நிலையை கவனிப்பதற்கு எந்தவொரு சிரத்தையையும் நிர்வாகம் எடுத்துக் கொள்ளவில்லை. அதன் விளைவாகவே மாணவன் ஜாய்சின் அகால மரணம்.



3. கிறித்துவ மாணவர்களுக்கான உள்விடுதியில் மொத்தம் சுமார் 391 பேர் உள்ளனர். இதில் சுமார் 240 பேர் தலித் மாணவர்களாகும். ஆனால், இங்கு நியமிக்கப்பட்டுள்ள 4 விடுதிக் காப்பாளர்களில் ஒருவர் கூட தலித் இல்லை. தலித் மாணவர்கள் அதிகம் பயிலக் கூடிய பள்ளியில் தற்போது ஒரு தலித் பாதிரியார் கூட நிர்வாகத்தில் இல்லை.



4. காவல் துணைக் கண்காணிப்பாளர் முன்னிலையில் நிறைவேற்றபட்ட ஒப்பந்த தீர்மானங்களை மறை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றுவதில் சிரத்தை காட்டவில்லை. 4 விடுதிக் காப்பாளர்கள் மட்டும் விடுப்பில் செல்ல பணிக்கப்பட்டுள்ளனர். ஒப்பந்தப்படி பள்ளி முதல்வர் பணி விடுப்பு செய்யப்படவில்லை. 10 லட்ச ரூபாய் இழப்பீடு அளிக்கின்ற கோரிக்கையை நிர்வாகம் தட்டிக்கழித்து வருகின்றது. இதுகுறித்து பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட மறைமாவட்ட உயர்பொறுப்பில் உள்ள பாதிரிமார்கள், ‘‘நல்லடக்கத்திற்கு நீங்கள் ஒத்துக் கொள்வதற்காகத்தான் நாங்கள் அப்படி சொன்னோம். இதை நிறைவேற்ற முடியாது’’ என கூறியதாக மாணவனின் பெற்றோர் குறிப்பிடுகின்றனர்.



5. 2010 சூலை 20-ல் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் வகுப்பறை வன்முறைக்கு எதிரான நெறிமுறைகளை வகுத்து அறிவித்துள்ளது. இதன்படி வகுப்பறை வன்முறை தடைசெய்யப்படுகிறது. தடையை மீறுவோருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும், ரூ.50,000/- அபராதமும் தனித்தனியாகவோ அல்லது சேர்த்தோ விதிக்கலாம். மறுமுறை செய்வோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைதண்டனை கொடுக்கலாம். கல்வி உரிமை சட்டத்தின்படி துறை ரீதியான நடவடிக்கையை ஆசிரியர்கள் மீது எடுக்கலாம். மேலும், இவ்வழிகாட்டு நெறிமுறைகளின்படி ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தை உரிமை பாதுகாப்புப் பிரிவு (சிலீவீறீபீ க்ஷீவீரீலீt சிமீறீறீ) ஒன்று உருவாக்கப்பட்டு, மாணவர்கள் தரப்பிலிருந்து ஏதேனும் புகார்கள் இருந்தால் தெரிவிப்பதற்கு வசதிகள் செய்யப்பட வேண்டும்.

இது தவிர 2000-ம் ஆண்டு ‘‘இளைஞர் நீதிச் சட்டம் 2006’’  திருத்தப்பட்டது. இச்சட்டத்தின்படி வகுப்பறை வன்முறையை மேற்கொள்வோர் மீது சட்டரீதியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க வழிசெய்யப்பட்டுள்ளது.

எமது பரிந்துரைகள்:

1. கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை (கா.நி.கு. எண் 63/11 நாள்: 01.02.2011 பிரிவு 174 சி.ஆர்.பி.சி விரைவாக விசாரித்து மாணவனின் மரணம் குறித்து துப்புதுலக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.



2. மாணவர்களை அடித்துத் தண்டிக்கும் வழக்கம் விடுதியில் இருந்து வந்துள்ளது. கல்வி உரிமைச் சட்டம் மற்றும் வகுப்பறை வன்முறை தடுப்பு விதிகள், 2010-ல் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள், இளைஞர் நீதிச் சட்டம் 2006 ஆகியவற்றின்படி இது ஒரு கடுமையான குற்றமாகும். 2000&ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் பள்ளிகளில் நிலவும் வகுப்பறை வன்முறையை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இக்குற்றங்களின் கீழ் இப்பள்ளியின் முதல்வர், விடுதிப்பொறுப்பாளர், காப்பாளர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். மாணவர்களை தொடர்ந்து அடித்து வந்த விடுதிக்காப்பாளர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.



3. அமைதி ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி இறந்த மாணவன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும்.



4. வகுப்பறை வன்முறை தடுப்பு விதிகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய ஆசிரியர், பெற்றோர், மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்று மாவட்ட அளவில் அமைக்கப்பட வேண்டும். மேலும், கடலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் வகுப்பறை வன்முறை தடுப்பு விதிகள் முறையாக நிறைவேற்றப்படுகின்றதா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு உள்ளதை முதன்மை கல்வி அலுவலருக்கு இக்குழு சுட்டிக்காட்டுகின்றது.



5. சுமார் 400 மாணவர்கள் இருக்கக் கூடிய ஒரு விடுதியில் மாணவர்கள் தங்குமிடம் போதுமானதாக இருத்தல் அவசியம். மேலும், 400 மாணவர்களை பாதுகாக்க 4 காப்பாளர்கள் போதாது. தவிரவும் விடுதி பொறுப்புத் தந்தையும், காப்பாளர்களும் மாணவர்களை கண்காணிக்கப்படவேண்டிய குற்றவாளியாக கருதாமல், பாதுகாத்து வளர்த்தெடுக்கப்படவேண்டிய மனநிலை உடையவர்களாக இருத்தல் அவசியம். இதுதொடர்பான பயிற்சிகள் அவர்களுக்கு தரப்படவேண்டும். மேலும், குறைந்தபட்சம் 2 மருத்துவர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டு ஞாயிற்றுக் கிழமை உள்பட விடுமுறை நாட்களில் கூட விடுதிக்கு வந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.





6. தலித் மாணவர்கள் அதிக அளவில் இருக்கக் கூடிய விடுதியில் பொறுப்புத் தந்தையும், பெரும்பான்மையான விடுதிக் காப்பாளர்களும் தலித்துகளாக இருக்க வேண்டும். பள்ளி நிர்வாகத்திலும் போதிய அளவில் தலித் பாதிரியார்களும், ஆசிரியர்களும் நியமிக்கப்பட வேண்டும். பாரம்பரியம்மிக்க புனித வளனார் பள்ளியின் நற்பெயரை தக்க வைக்க இந்த நடவடிக்கைகளை மறை மாவட்டம் மேற்கொள்ள வேண்டும்.



7. கடலூர்&புதுச்சேரி மறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக தலித் கிறித்துவர்கள் மீதான வன்முறைகள் பல்வேறு வடிவங்களில் செயல்படுவதை மறைமாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். சாதி வெறியுடன் செயல்படக்கூடிய மறைப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, போதிய அளவு தலித் கிறித்துவர்கள் பல்வேறு மட்டங்களிலும் மறை மாவட்டப் பணிகளில் நியமிக்கப்படுவதன் மூலம் இதுபோன்ற பிரச்சனைகள் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்பதையும் மறை மாவட்டத் தலைமைக்கு இக்குழு சுட்டிக்காட்டுகின்றது.





----------------------------------------------------------------------------------------------------------------------------------

தொடர்புக்கு: 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை- 600 20.

செல்: 9444120582.