Tuesday, May 25, 2010

மக்களால் மக்களுக்காக....

மக்களால் மக்களுக்காக...
மக்களைக் கொண்டு...
ஒரு தமிழ்ப் பள்ளிக்கூடம்...






Monday, May 24, 2010

மணிமேகலை



மணிமேகலை, வயது 17,
தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தபெண்
தனக்கு நேர்ந்த அவலம் குறித்து நம்மிடம் கூறியது.

நான் எனது தாயார் லட்சுமி மற்றும் அண்ணன் பார்த்தீபன் ஆகியோருடன் திண்டிவனம் ரோசனை உள்ள குட்டைக்கரையில் வாழ்ந்துவருகிறோம். எனது தந்தை உடல்நிலை சரியில்லாமல் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். நான் திண்டிவனம் எம்.டி.கிரேன் நடுநிலைப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை படித்துளேன். அதன்பிறகு படிக்க, எனது தந்தை இறந்துவிட்ட நிலையில், மேற்கொண்டு படிக்க வழியின்றி படிக்காமல் நின்றுவிட்டேன்.
எனது தாயார் திண்டிவனம் செஞ்சி ரோட்டில் உள்ள மீனாட்சி தியேட்டரில் கூட்டிப்பெருக்குகின்ற துப்புரவு பணி செய்துவந்தார். அதன் மூலமே நாங்கள் குடும்ப ஜீவனம் நடத்தி வந்தோம். எனது அண்ணன் பார்த்தீபன் ராமேஸ்வரத்தில் உள்ள எனது சித்தி வீட்டில் தங்கி, ராமேஸ்வரத்தில் கூலி வேலை செய்துவந்தார். எப்போதாவது ஒருமுறை இங்கு திண்டிவனம் வந்துசெல்வார்.
இந்நிலையில் தியேட்டரில் வேலை செய்துவந்த எனது தாயாருக்கு உதவியாக நானும் சில நேரங்களில் தியேட்டருக்குச் செல்வேன். இந்த துப்புரவுத் தொழிலில் இருந்து கிடைக்கும் குறைந்த வருமானத்தில் எல்லா சமையல் பொருட்களையும் வாங்கி எங்களால் மூன்று வேலையும் சமைக்க முடியாது. அதனால், தியேட்டர் அருகில் உள்ள சிறு இட்லி கடையில் அடிக்கடி சாப்பிடுவோம். அந்த இட்லி கடைக்கு ரோசனை முதலியார் தெருவைச் சேர்ந்த கதிர் என்பவரும் அடிக்கடி வருவார். என்னிடம் இந்தக் கதிர் அடிக்கடி பேச்சுகொடுத்தார். தொடர்ந்து தினமும் என்னை சந்திக்க இட்லி கடைக்கு வருவார். இருவரும் நட்பாகப் பழகினோம். இவையெல்லாம் கடந்த 2009-ஆம் ஆண்டு சூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடந்தது.
தொடர்ந்து அதே ஆண்டு செப்டம்பர் மாதம், மேற்படி கதிர் என்னிடம் ‘‘எனது அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை. எங்க வீட்டிற்கு வேலைக்கு வா’’ என்று என்னைக் கூப்பிட்டார். நான் எனது அம்மாவிடம் கேட்டுச் சொல்வதாக தெரிவித்தேன். பிறகு எனது அம்மாவிடம் சொன்னேன். எனது அம்மவும், தியேட்டரில் இந்தவேலை செய்வதைவிட வீட்டுவேலை நல்லது போய்வா என்றார். இதை நான் கதிரிடம் சொன்னேன். அவரும் அவர்கள் வீட்டில் பேசி என்னை அவரது வீட்டிற்கு வேலைக்குச் அழைத்துச் சென்றார்.

நான் கதிர் வீட்டிற்கு தினமும் காலையும் மாலையும் சென்று, வீட்டில் உள்ள வேலைகளை முடித்துவிட்டு எனது வீட்டிற்கு திரும்பிவிடுவேன். சில நாட்கள் கழித்து கதிர் என்னிடம் என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் அடிக்கடி கூறத்தொடங்கினார். நான், உங்கள் வீட்டில் என்னை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் வேண்டாம் என்றேன். அதற்கு அவர், வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும், உன்னை திருமணம் செய்துகொள்வேன். கைவிட மாட்டேன் என்று கூறினார். அதன்பிறகு தொடர்ந்து என்னை காதலுக்கு வற்புறுத்தினார். மீண்டும் மீண்டும் காதல், கல்யாணம் எனக்கூறி எனது மனதில் ஆசையை வளர்த்தார். ஒரு நாள் அவரது வீட்டிலேயே யாருமில்லாத நேரத்தில் என்னை வற்புறுத்தி, கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டார். அதன்பிறகு கதிரின் தாயாருக்கு உடல் நிலை சரியானதும் என்னை வேலையை விட்டு நிறுத்திவிட்டனர். இதெல்லாம் 3 மாதத்தில் நடந்தது.
இதேநேரத்தில் எனது தாயாருக்கும் உடல்நிலை சரியில்லாமல்போனது. அதனால் தியேட்டருக்கு வேலைக்குப் போவதை நிறுத்திவிட்டார். எனக்கும் வேலையில்லாமல், எனது தாயாரும் உடல் நிலை சரியில்லாமல், வேலையில்லாமல் வீட்டிலேயே இருந்தோம்.
எனது தாயாரின் தங்கையும், சித்தியுமான ராக்கி ராமேஸ்வரத்தில் உள்ளார். எனது அண்ணன் பார்த்தீபன், சித்தி வீட்டில் தங்கிக்கொண்டு அங்கு கூலி வேலை செய்தார். உடல்நிலை சரியில்லாத அம்மாவைப் பார்க்க இங்கு திண்டிவனம் வந்தார். இங்கு வேலையில்லாமல் கஷ்டப்பட்டுகொண்டிருந்த எங்களைப் பார்த்துவிட்டு ராமேஸ்வரம் போகலாம் என்று அழைத்தான். அங்கேயே அம்மாவிற்கு சிகிச்சையும் செய்துகொள்ளலாம் என்றான். அதனால் நானும், எனது அம்மாவும் எனது அண்ணன் உடன் ராமேஸ்வரத்திற்கு எனது சித்தி வீட்டிற்குச் சென்றோம். இது 2009 டிசம்பர் கடைசியில் நடந்தது. சனவரி மாதம் வந்த பொங்கலுக்கு நாங்கள் எனது சித்தி வீட்டில் ராமேஸ்வரத்தில் இருந்தோம்.

நான் ராமேஸ்வரத்தில் இருந்தபோதும், திண்டிவனத்திலிருந்து கதிர் எனது சித்தியின் செல்போன் மூலமாக என்னுடன் பேசுவான். தெரிந்தவர், சும்மா பேசுகின்றார் என்று என்று எனது சித்தியிடம் சொல்லிவிடுவேன். ராமேஸ்வரத்தில் எனக்கு மாதவிலக்கு வராமல் தள்ளிப்போனது. சந்தேகப்பட்ட நான், எனது வீட்டில் யாரிடமும் எதுவும் சொல்லாமல் தனியாக ராமேஸ்வரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு என்னைப் பரிசோதித்த மருத்துவர், நான் மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாக் கூறினார். மேலும் கர்ப்பம் வயிற்றில் முழுமையாக வளர்ந்துள்ளது என்றும், கூறியுள்ளார். செய்வதறியாமல் திகைத்து, யாரிடமும் எதுவும் சொல்லமுடியாமல் சில நாட்கள் தவித்துக்கிடந்தேன்.

இதற்கிடையில் எனது அம்மா, உடல் நிலை சரியில்லாதபோது, சீக்கிரம் சரியானால் தனுஷ்கோடி ரெட்டைதலை கோயிலுக்கு கிடா வெட்டுவதாக வேண்டியுள்ளார். அதிகம் செலவழிக்காமல் உடல்நிலை சரியானதும் வேண்டுதலை நிறைவேற்ற பணம் புரட்டியபோது ராமேஸ்வரத்தில் எனது அம்மாவிற்கு பணம் கிடைக்கவில்லை. அதனால் திண்டிவனத்தில் பணம் கேட்டார்கள். அவர்கள் தருவதாகவும், உடனடியாக வந்துவாங்கிக்கொள்ளும்படியும் சொல்லியுள்ளார்கள். அதனால அந்தப்பணத்தை வாங்குவதற்காக எனது அம்மா திண்டிவனம் கிளம்பினார்கள். கூடவே என்னையும் திண்டிவனம் அழைத்துவந்தார்கள்.
திண்டிவனம் வந்ததும், பணம் தருவதாகக் கூறியவர்கள் இப்போது இல்லை என்று கூறிவிட்டார்கள். காலையில் வந்ததும் பணம் தருவதாகக் கூறியவரை நேரில் பார்த்தார்கள். பணம் இல்லை என்றதும், ராமேஸ்வரம் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று எனது தாயார் அன்று மாலையே ராமேஸ்வரம் கிளம்பினார்கள். என்னையும் அழைத்தார்கள். நான், கதிரை சந்தித்து கல்யாணம் செய்துவிடவேண்டும் என முடிவெடுத்து, எனது அம்மாவுடன் ராமேஸ்வரம் போக மறுத்துவிட்டு, திண்டிவனத்தில் எனது பெரியம்மா வீட்டிலேயே தங்கினேன்.
எனது அம்மா, ராமேஸ்வரம் சென்ற மறுநாளே கதிரை சந்தித்து உடனடியாக திருமணம் செய்துகொள்ளும்படி பேசினேன். கதிர் பல்வேறு காரணங்களைச் சொல்லி என்னை சந்திப்பதைத் தவிர்த்தார். நானும் விடாமல் எப்படியாவது சந்தித்து பேசிவிடவேண்டும் என முடிவெடுத்து, தொடர்ந்து முயற்சி செய்தேன். என்னிடமிருந்து தப்பிக்க வழியில்லாமல் கதிர் என்னை சந்தித்தான். சந்தித்தபோது எனது கர்ப்பத்தை கலைப்பதற்கு மாத்திரைகளை வாங்கி வந்து என்னை விழுங்குமாறு கட்டாயப்படுத்தினான். நான் விழுங்க மறுத்தேன். ஆ ஆனால் எனது கையையும், காலையும் அழுத்திப்பிடித்து வாயில்போட்டு விழுங்கச் செய்தான். உடனடியாக நான் துப்பிவிட்டேன்.
கதிர் என்னை அடுத்தமுறை சந்தித்தபோது, முன்னாடி கொடுத்த மாத்திரையில் கரையவில்லையே எனக்கூறி கர்ப்பத்தை கலைக்க திண்டிவனம் செஞ்சி பஸ்ஸாண்டில் உள்ள ரஜினி டாக்டரிடம் அழைத்துச்சென்றான். பரிசோதித்த மருத்துவர் 6 மாதம் ஆகிவிட்டது இனி கலைக்க முடியாது என மறுத்துவிட்டார்.
அடுத்தமுறை நான் கதிரிடம் தனியாக பேசிக்கொண்டிருந்தபோது எனது பெரியம்மா ஒருவர் பார்த்துவிட்டு விசாரித்தார். அதன்பிறகு எனது உறவினர் அனைவருக்கும் எல்லாம் தெரிந்தது. அதன்பிறகு எனது உறவினர்கள் கதிரை எங்கள் இடத்திற்கு வரவழைத்தார்கள். விசாரித்தார்கள். சிறைபிடிக்கப்பட்ட கதிர், தனது பெற்றோரிடம் பேசி இரண்டொரு நாட்களில் திருமணம் செய்துகொள்வதாகக் எனது உறவினர்களிடம் கூறினான். நம்பிய உறவினர்கள் கதிரை விடுவித்தனர்.
பெற்றோரிடம் பார்த்துப் பேசிவிட்டு வருவதாகச் சொல்லிச் சென்ற கதிர் ஐந்து நாட்களாகியும் எந்தவொரு தகலும் இல்லை. சந்திக்க முயன்றாலும் முடியவில்லை. இந்நிலையில் யாரென்று தெரியாத பலர், எங்களிடம் வந்து சமாதானம் பேசினார்கள். பணம் வாங்கித் தருவதாகக் கூறினார்கள். மேலும், எங்களை மிரட்டவும் தொடங்கினர். அதன்பிறகுதான், எங்கள் ரோசனைப் பகுதியைச் சேர்ந்த சாரதியும், அவரது நண்பர்களும் என்னைப் பார்த்துப் பேசி எனக்கு ஆறுதல் சொன்னார்கள். ஆதரவும் அளித்தார்கள்.
ராமேஸ்வரத்திலிருந்த எனது அம்மா வந்ததும் 10-03-10 அன்று இரவு 11.15 மணியளவில், ரோசனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தோம். ரசீது தந்தார்கள். மறுநாள் 11.03.10 காலை காவல் நிலையம் வரச்சொன்னார்கள். சென்றோம். விசாரித்து, அன்று மாலை வழக்குப்போட்டு, எப்.ஐ.ஆர் காப்பி கொடுத்தார்கள்.

Friday, May 21, 2010

எழுத்தாளர் தினம்... புத்தகத் தினம்...

எழுத்தாளர் தினம்... புத்தகத் தினம்...!

யுனெஸ்கோ என்ற உலக கல்வி நிறுவன அமைப்பு மக்களிடையே புத்தகங்கள் படிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்கவும், அதற்காக அதிக புத்தகங்களை வெளியிடவும் முடிவு செய்தது. அதன் அடிப்படையில் தொடர்ந்து, உலகம் முழுவதும் 1995 முதல் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக அனுசரிக்கப்படுகிறது.

ஐரோப்பாவில் வாழ்ந்த இலக்கியவாதியான வில்லியம் ஷேக்ஸ்பியர், உலக மக்கள் வியக்கும் ரசிக்கும் உலகின் தலைசிறந்த சோக காவியம் லியா அரசன், காதல் காவியம் ரோமியோ ஜீலியட்’ ஜுலீயஸ் சீசர், ஒத்தெல்லோ போன்றவையும் மச்சடோ அபட் நத்திங் என்ற நகைச்சுவை நாடகங்களையும் எழுதியவர். இவர் பிறந்ததும், உலகை விட்டு மறைந்ததும் ஏப்ரல் 23ல் தான்.

1923ல் ஸ்பெயின் நாட்டில் ஏப்ரல் 23-ம் நாள் இறந்த பிகுல்டி செர்வென்டிஸின் நினைவாகவும் புத்திகதினம் கொண்டாடுவதாக சொல்லப்படுகிறது. முதல் புத்தகம் குகையும் எலும்புகளும்! இன்றைய நவீன அறிவியல் யுகத்தில், வலைத்தளமும், தொலைபேசி, கைப்பேசிகளும், மின் அஞ்சலும் முக்கியமாக தொலைகாட்சியும், மக்களின் புத்தகம் படிக்கும் பழக்கத்தைப் குறைத்து விட்டன. ஆனால் புத்தகம்தான் நிரந்தரமாய் நிலைத்து நிற்கும் பொருள்.

வலைத்தளத்தில் என்னதான் படித்தாலும், புத்தகம் படிக்கும் சுவையும், இன்பமும், இரசனையும் நிச்சயமாக வலைத்தளத்தில் கிடைக்காது. புத்தகம் என்பது ஒருவரின் சொத்து. எழுத்துக்களின் முதல் பதிவு, குகைச் சுவர்களிலும், இஷாங்கோ எலும்புகளிலும் சுமார் 37,000 ஆண்டுகட்கு முன் நிகழ்ந்தன.பின்னர் களிமண் பலகைகளிலும், பாப்பிரஸ் மரப்பட்டைகளிலும் எழுதப்பட்டன. அவையனைத்துமே புத்தகங்கள்தான்!.

எழுத்தாளர் தினம்... புத்தக தினம்..!
காதலர்கள் தமக்குத் தரும் ரோஜாப்பூக்களுக்குப் பதிலாக பெண்கள் அவர்களுக்கு புத்தகம் பரிசாகத் தந்தனராம். 1616ம் ஆண்டில், ஏப்ரல் 23 உலக இலக்கிய தினமாக்க் கருதப்பட்டு, ஒவ்வொரு புத்தகம் விற்கும் போதும் அதனுடன் ரோஜா பூ காட்டலோனியாவில் அன்பளிப்பாக தரப்பட்டதாம். 1616ம் ஆண்டு ஏப்ரல் 23ல் உலக எழுத்தாளர்களான செர்வெண்டிஸ், இன்னா, ஷேக்ஸ்யியர் போன்றோர் இறந்தனர். ஏப்ரல் 23ல்- மாரிஸ், ஹால்டோர் லேக்ஸனஸ், விளாதிமிர் நோபோகோவ்,ஜோசப் பிலா மற்றும் மானுவல் மெஜியா போன்ற எழுத்தாளர்கள் பிறந்தனர்.

புத்தக தினத்தில் அனுவரும் புத்தகம் வாங்க வேண்டும் என உறுதி மொழி எடுக்கவேண்டும். “மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகச்சிறந்தது புத்தகமே” என இருபதாம் நூற்றாண்டின் சிறந்த விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறினார்..

நாகரிக வரலாறு..!
உலகின் வரலாறு சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. உயிரினம் 350 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானது. மனித இனத்தின் சரித்திரம் மற்றும் பரிணாமத்தின் வயது 50,00,000 ஆண்டுகள். நாம் பல நிலைகளைக் கடந்துதான இன்று ‘வெள்ளையும் சள்ளையுமான’ நாகரிக மனிதர்களாய் பரிணமித்துள்ளோம். ஆதி மனிதன் காடுகளிலும் மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்திருக்கிறான். சக்கரம் சுழலத் துவங்கிய பின்தான், மனித தொழில்நுட்பத்தின் பரிணாமத்தின் முதல் அத்தியாயம் துவங்கியது.!. ஆனால் அதற்கு முன்பே, மனிதன் தன் கருத்துக்களை, எண்ணங்களைப் பதிவு செய்யத் துவங்கி விட்டான். எத்தனை ஆண்டுகளுக்கு முன் இருக்கலாம் என எண்ணுகிறீர்கள்? சுமார் 35,000 ஆண்டுகளுக்கு முன்பு!

முதல் பதிவு!

ஆதி மனிதன் குகைகளில் எழுதத்துவங்கு முன்பே, எலும்புகளில் எழுதி விட்டான். ஆம் பபூன் குரங்கின் கை எலும்பில், குறியீடாக மாதத்தின் நாட்களை பெண்கள் குறித்து வைத்துள்ளனர். “லெபோம்பா” என்ற இடத்தில் கிடைத்ததால், அதன் பெயர் “லெபோம்பா” எலும்பு. அதன் வயது 37;000 வருடங்கள் ஆகும். பெண் தன் மாதவிடாய் தின குறிப்பேடாக பயன்படுத்தியதுதான் “லெபோம்பா எலும்பு”. இதில் 29 பட்டைகள் உள்ளன. “இஷாங்கோ” என்ற இடத்தில் கிடைத்த எலும்பின் பெயா “இஷாங்கோ எலும்பு” இதன் வயது 20,000 முதல் 25,000 ஆண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 3 வரிசையில் எண்கள் பற்றி “டாலி” மார்க் செய்துள்ளனர் அக்கால மனிதர்கள்.!. இதில் 6 மாத சந்திர காலண்டர் பொறிக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் காய்கறி விற்கும் பெண்கள் நம் வீட்டு சுவரில் கரிக்கோடு போடும் விஷயங்கள் மண்டைக்குள் ஓடுகின்றதா?

பயம் வந்தது..!

எலும்பில் எழுதிய மனிதன், மலையின் குகைகளில் எழுதினான். பிறகு பாப்பிரஸ் மரப்பட்டைகள், ஆடு மற்றும் கன்றுக்குட்டியின் தோல்கள், மரப்பட்டைகள், களிமண், மண் ஓடுகள் மற்றும் பேப்பர்கள் என, எழுத்தின் பதிவு கொஞ்சம் கொஞ்சமாக பரிணாமம் பெற்று இன்று மின்னஞ்சலில் வலைத்தளத்தில் இ-எழுத்தாக மாறியுள்ளது. இதன் மூலம் எழுத்துக்கள் பதித்த புத்தகம் காணாமல் போய் விடுமோ என்ற அச்சம் பிறந்துள்ளது.

காலப்பதிவுகள் மனித பரிணாமத்தில்!
கி.மு 1,00,000 - 40,000: பேச்சு பிறந்தது.

கி.மு 30,000 - குகை ஓவியம்,கிறுக்கல்கள்: ஐரோப்பாவில்

கி.மு 20,000 - 6,500: விலங்குகளின் எலும்பில் எழுத்து பிரான்சில்

கி.மு 5,500 - 4,500: எழுத்துப் பதிவின் துவக்கம்:ஆப்பரிக்கா

கி.மு 3,500 - 3,000: சுமேரியா படப் பதிவுகள்

கி.மு 3,000 - 2,800: எகிப்தின் களிமண் பதிவுகள்

கி.மு 2,500 - உலகின் கிழக்கு நோக்கி கியூனிபாம் பரவுதல்

கி.மு 2500 - சிந்து சம வெளி நாகரிகம், எழுத்து, படப்பதிவுகள்

கி.மு 2100 - களிமண் எழுத்துக்கள்,எலும்பு எழுத்துக்கள் கண்டுபிடிப்பு

கி.மு 1500 - சீனர்கள் குறியீட்டு எழுத்துப்பதிவு

கி.மு 1400 - உகாரிட் பதிவுகள்

கி.மு 1100- 900: நவனீ எழுத்துக்கள்

கி.மு 800 - கிரேக்க நவீன எழுத்துக்கள்

நூலக பிறப்பு!

கி.மு 247ல் எகிப்தின் அலெக்சாண்டரியாவில், உலகின் மிகப் பெரிய நூலகம் இருந்தது. சுமார் 7,00,000க்கும் மேற்பட்ட ஆட்டுத்தோல் புத்தகங்கள் இருந்தன. இங்கு 5,000 மாணவர்கள் படித்தனர், நாம் பயன்படுத்தும் காகிதத்ததை சீனர்கள் கண்டுபிடித்தாலும் புத்தகப் புரட்சியை செய்தவர்கள் அரேபியர்கள்தான். இஸ்ஸாமியர்களிடமிருந்தோ பேப்பர் புத்தக பரிமாணம் துவங்கியது. 8ம் நூற்றாண்டில், மொராக்கோவில் 100 புத்தக கடைகள் இருந்தனவாம். இந்தியாவில் கி.பி. 2ம் நூற்றாண்டில் ஆந்திராவில் நாகார்ஜீன அரசன் உருவாக்கிய நூலகம் நாகார்ஜீன வித்தியா பீடம். இதில் பல விலங்குகளின் வடிவில் 5 மாடிகளும், 1500 அறைகளும், ஏராளமான புத்தகங்களும் இருந்தன. நாளந்தா பல்கலைக்கழகத்தில், 7ம் நூற்றாண்டில் 68,700 பனை ஓலை நூல்களும், 36,058 பாப்பிரஸ் சுருள் புத்தகங்களும் இருந்தன.

கருத்துக்களின் விதை நூலகம்!

தமிழ்நாட்டு நூலக வரலாற்றின் பிதாமகன் ராமாமிர்தம் ரங்கநாதன். இவர்தான் சென்னை மாநிலத்தின் நூலகத் தந்தை என்று அழைக்கப்பட்டவர், 1928 ஜனவரியில் சென்னை நூலக சங்கம் ரங்கநாதனால் உருவாக்கப்பட்டது. 1931ல் அக்டோபர் - 21ம் நாள் புதன் கிழமை மாலை 5 மணிக்கு மன்னார்குடிக்கு அருகில் உள்ள மேல வாசலில் நடமாடும் நூலக வண்டிப்பயணம் தொடங்கப்பட்டது. அங்கு 72 கிராமங்களில், 275 பயணங்கள் இந்த வண்டி மூலம் நடத்தப்பட்டது. இதில் 3782 புத்தங்கள்; 20,000 தடவைகளுக்கு மேல் மக்களுக்குப் கொடுக்கப்பட்டு, திரும்பப் பெறப்பட்டன!. ஆனால் இன்று அரசுப் பள்ளிகளில் கூட நூலகம் இல்லாத நிலைமை! மனித நாகரிக வளர்ச்சியின் பதிவு நூலகமே!

மனிதன் வரலாற்றுக்குரியவன். நேற்று, இன்று, நாளை என்ற மூன்றும் இவனுக்குரியவை. சமூகத்தில் நிலவும் கருத்தாக்கங்கள், நம்பிக்கைகள், சந்தேகங்கள்,சவால்கள், மதிப்பீடுகள், நுணுக்கமான கருத்துக்கள் அனைத்தும் கல்விப் பொருளாக புத்தங்களாக மாற வேண்டும். அத்தகைய உள்ளடக்கம் கொண்ட கல்விதான் மக்களை விடுதலை செய்யும.

“மனிதனின் இருப்பு மௌனத்தால் கட்டப்படவில்லை. அவன் வார்த்தைகளால்செயல்களால் எதிர்வினை தூண்டும் ஆழமான நடவடிக்கைகளால்

கட்டமைக்கப்படுகின்றன.” பாவ்லோ பிரையர்.

இதனை செய்வது புத்தங்களே..! அனைவரும் மூளையை உரசிப் பார்க்கும் புத்தகங்களை வாங்குங்கள்..! குழந்தைகள், நண்பர்கள், நெருங்கியவர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் புத்தகங்கள் பரிசளியுங்கள்..! புத்தகம்தான் சமூக மாற்றத்திற்கான திறவுகோல்.;

-மோகன்காந்தி
mohanatnsf@gmail.com

நன்றி : கீற்று.காம்