Tuesday, July 17, 2007

“ஈழப் போர்ச் சூழல் ஜாதியை மறைத்திருக்கிறது; அழித்துவிடவில்லை’’ - ஈழக் கலைஞர் சி.ஜெய்சங்கர்

சந்திப்பு : இரா.முருகப்பன்.

சி.ஜெய்சங்கர்:மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் நாடகம் மற்றும் அரங்கத் துறையில், முதுநிலை விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். ''மூன்றாவது கண்'' என்கிற உள்ளூர் அறிவுச் செயற்பாட்டுக் குழுவினை வழிநடத்தி வருகிறார். 'மூன்றாவது கண்' என தமிழிலும்,'தேர்ட் ஐ' என ஆங்கிலத்திலும் இதழ்களை நடத்துகிறார். தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி வருகிறார். இவருடைய துணைவியார் வாசுகி ஓவியராக இருப்பதுடன், பெண்ணிலைவாதச் செயற்பாட்டாளராகவும் இயங்கி வருகிறார்.

1965 டிசம்பரில் யாழ்பாணம் கோண்டாவில் என்கிற கிராமத்தில், அரசு ஆயுர்வேத மருத்துவரான சிவஞானம்&யோகேஸ்வரி தம்பதியருக்கு ஜெய்சங்கர் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர். இதில் இருவர் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். தொடக்கக் கல்வியை கிராம பாடசாலையிலும், உயர்கல்வியை யாழ் கல்லூரியிலும் முடித்தார்.

குழந்தை மா.சண்முகலிங்கம் அவர்களை தனது முதன்மைக் ஆசானாக கருதும் இவர், யாழ்பாணத்தில் இருக்கும்போது, நிலாந்தன், செல்வி, சிவரமணி, வைதேகி, மனோகரன், வாசுகி, அருந்ததி, அகிலன், சத்யன், வில்வரத்தினம், கருணாகரன், ராமேஸ்வரன், கோபிதாஸ், கண்ணதாசன் ஆகியோருடன் இணைந்து குழுவாக நாடகம் மற்றும் கலை இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் ‘தலித் முரசுக்கு’ அளித்த சிறப்பு பேட்டி.

ஈழம் வடக்கு, கிழக்கு என இரு பிரதேசங்களாக உள்ளன. வடகில் யாழ்பாணமும், கிழக்கில் மட்டக்களப்பும் மிக முக்கியமான பகுதிகள். இவை இப்போது எப்படி இருக்கிறது?


உலகில் எல்லா நாடுகளிலும் காணப்படுவது போன்றே இலங்கையில் வாழ்கின்ற சிங்களர், தமிழர் இடையேயும் பிரதேச ரீதியான வேறுபாடுகளும், ஒருமைப்பாடுகளும் காணப்படுகின்றன. இலங்கையில் உள்ள வடக்கு, கிழக்கு தமிழ்ப்பிரதேசங்களுக்கு இடையேயும் ஒத்துபோகக் கூடியதும்; வித்தியாசப்படுவதுமான பண்பாட்டு அம்சங்கள் நிலவுகின்றன. இரண்டுக்குமிடையே மொழிரீதியான ஒரு பொதுத்தன்மை காணப்படுகின்ற அதே நேரம், பிராந்திய மொழிவழக்கில் வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன. கிழக்கில் உள்ள மட்டகளப்பில் படுவான்கரை, எடுவான்கரை என்கிற இரு பகுதிகளுக்கும் இடையே வித்தியாசங்கள் காணமுடியும். அதே போல் யாழ்பாணத்தில் உள்ள வலிகாமம், தீவகம், வடமராட்சி, தென்மராட்சி பகுதிகளுக்குள்ளும் பண்பாட்டு வித்தியாசங்களை காணமுடியும். வடக்கு, கிழக்கின் பொதுத்தன்மை என்பது வித்தியாசங்களுடன் கூடியது. முக்கியமான அடிப்படையான வித்தியாசமாக இருப்பது சமூகப், பொருளாதார நிலைமைகள்தான்.

ஈழம் பற்றி சிந்திக்கும்போது, கிழக்குப் பகுதியில் குறிப்பாக மட்டகளப்பிலுள்ள படுவான்கரை என்பது முக்கியமான, பாரம்பரியமான, சமூக பண்பாட்டு மையமாக விளங்கி வருகிறது. ஆனால் கெடுவாய்ப்பாக இந்த படுவான்கரை இன்று மக்கள் புலம் பெயர்ந்த பிரதேசமாக இருந்து வருகிறது. அங்கிருந்த மக்கள் இடம்பெயர்ந்து எழுவான்கரை என்ற இடத்தில் புலம்பெயர்வு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். படுவான்கரை ஏன் முக்கியத்துவம் பெறுகிறது என்று சொன்னால் பாரம்பரியமான உள்ளூர் அறிவுத்திறன் களஞ்சியமாக இருந்துகொண்டிருக்கிறது. நாங்கள் பலமான சமூகமாக வாழ்வதற்கான ஆதாரங்கள் பல அங்கே காணப்படுகின்றன. இன்றைய யுத்தமும், அதனால் அந்தப் பகுதியில் ஏற்பட்டிருக்கின்ற இடம்பெயர்வும், குறிப்பாக தமிழ்மக்களுக்கு பெரும் பாதிப்பாக இருக்கின்றது. இந்த இடப்பெயர்வு அந்த மக்களை பாரம்பரிய அறிவுசார் முறையிலிருந்து அன்னியப் படுத்தியிருக்கிறது; அப்புறப்படுத்தியிருக்கிறது. உள்ளூர் அறிவுத்திறனை கொண்ட ஒரு சமூக பொருளாதார கட்டமைப்பு நோக்கில் பார்க்கும்போது, இதை ஒரு மிக மோசமான இழப்பாக பார்க்கிறோம்.

அரசியல் மொழியில் சொன்னால் வடதமிழீழம், தென் தமிழீழம் என்பது, சமூக- பண்பாட்டு-பொருளாதார ரீதியாக பொதுத்தன்மைகளும் வித்தியாசங்களும் கொண்டவை. அதே நேரம், எல்லா சமூகங்களுக்கும் உள்ளது போல் அந்தப் பிராந்தியங்களில், பிராந்தியங்களுக்கிடையில் காணப்படுகின்ற ஆதிக்க நிலைமையை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது அவசியத் தேவையாக இருக்கிறது.

ஈழத்தில் முகாம்களிலும், வெளிநாடுகளில் அகதிகளாகவும் உள்ள தமிழர்களின் பிரச்சினைகளை எப்படி பார்க்கிறீர்கள்?


தொடர்ச்சியான போரும், இடப்பெயர்வும் எம்மக்களின் வாழ்விடங்களை, வாழ்வாதரங்களை எல்லாம் தொலைத்துவிட்டு ஒரு அன்னியப்படுத்தப்பட்ட நிலையில் தங்கி வாழ்கின்ற சூழலை ஏற்படுத்தியிருக்கின்றது. இது எங்களை மிக ஆபத்தான ஒரு சமூக, பொருளாதார நிலைக்கு இட்டுச்செல்கிறது. மேலும், தாராளமயம் மிகத்தீவிரமாக நடைமுறைபடுத்தப்படுவதற்கு, உள்ளூர் முரண்பாடும், அதன் காரணமாக எழுந்த போரும் பயன்படுத்தப்படுகிறது என்றுதான் சொல்லவேண்டும். மேலும் இந்த இடப்பெயர்வு என்பது, உற்பத்தி சக்தியாக இருந்த எங்களை தங்கிவாழும் ஒரு சமூகமாக மாற்றி, குறைந்த ஊதியத் தொழிலாளர்களாக மாற்றும் நிலைமைளையும், வெறும் நுகர்வு சக்திகளாக வாழுகின்ற நிலைகளையுமே ஏற்படுத்தியிருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.

இன்றைய நிலையில் பெண்கள் எத்தைகய பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்?

வரலாற்றுக்காலம் முழுக்க, உலகில் போரின் முதல் பலி உண்மை என்று சொல்வார்கள். அதற்கு சமமாக நாங்கள் சொல்ல வேண்டியது. போரில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் மிக்க உக்கிரமமாக பாதிக்கப்படுவர்கள் பெண்கள்தான். குடும்பச்சுமையைத் தாங்கி வீட்டிற்குள் குடும்பத்தை நடத்திக்கொண்டிருந்த பெண்கள், யுத்தம் காரணமாக இடப்பெயர்வு நிகழும் நிலையில், அவர்கள் அம்பலத்தில் வெட்டவெளியில் குடும்பத்தை நடத்த வேண்டிய சூழலுக்குள் தள்ளப்படுகின்றனர். இது ஒன்றே, இந்தப் போரில் பெண்கள் நிலையை புரிந்துகொள்ள பொருத்தமாக இருக்கும். அம்பலத்தில் குடும்பத்தை நடதுதுவது என்பது பெண்களுக்கு எத்தைகயதொரு மோசமான சூழல் என்பது சிந்திக்க தெரிந்த எவருக்கும் விளங்கும். போர் நடைபெறும்போது பெண்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்படுவது ஒரு வெளிப்படையான உரையாடலுக்குரியதாகவும், எதிர்ப்புக்குரியதாகவும் இருப்பது என்பதை காணமுடிகிறது. இதுமட்டுமில்லாமல் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயமும் உள்ளது.

போர்சார்ந்த நடவடிக்கையால் பெண்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுவது முக்கியத்துவம் பெறுகின்ற அதே நேரம், சமூகத்தில் பெண்கள் அவர்கள் வாழ்கிற குடும்பத்துள் வன்முறைக்கு உட்படுத்தப்படுவது என்கிற விஷயம் பேசாப்பொருளாக அல்லது மறந்து போகிற விடயமாக ஆகியிருப்பது என்பது கவனத்தில் கொள்ளவேண்டும், அது குறித்து ஒரு உரையாடல் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதும் மிகவும் அவசியமாகும். இது பற்றிய சிந்தனைகளில் அடிப்படை மாற்றம் தேவை என்பது மிக முக்கியமாகும்.

ஒரு சமூக விடுதலை என்பது அனைத்துவகையான ஒடுக்குமுறைகளையும், வன்முறைகளையும் ஒன்றோடொன்று தொடர்புபடுத்தி எதிர்கொள்ள வேண்டிய செயற்பாடாகவே பார்க்கவேண்டும். ஒவ்வொன்றாக தனிதனியாக அல்லது ஒன்று முந்தியது, மற்றது பிந்தியது என்று பார்ப்பதென்பது பொருந்தாது. ஏனெனில்,இத்தகைய நிலைகள் என்பது சமூகத்தில் ஒன்றுடன் ஒன்று இணைந்ததாகவும், சிக்கல்கள் நிறைந்ததாகவும் காணப்படுகின்ற சூழலில்,சமூகங்களால் புறத்திருந்தும், அகத்திருந்தும் நிகழ்த்தபடுகின்ற வன்முறைகள் பற்றி ஒரே நேரத்தில், ஒரே தளத்தில் நாங்கள் எதிர்கொள்ளவேண்டியது என்பதுதான் யதார்த்தமானதும், இயல்பானதும், பொருத்தமானதும் என்பதை நாங்கள் சிந்தித்து செயல்படவேண்டியுள்ளது.

இந்த வகையில் ஈழத்தில் பெண்கள் அமைப்புகள் போரினால் ஏற்படும் வன்முறைகளை எதிர்கொன்டும்; குடும்ப சமூக வன்முறைகளை எதிர்கொண்டும்; சமூகத்தின் உள்ளிருந்தும், வெளியிருந்தும் தடைகளையும் சவால்களையும் கடந்து செயற்பட்டு வருவது சாதகமானதொரு நிலைமையாகும்.

சிறுவர்கள் அங்கு இயல்பாக இருக்க முடிகிறதா? அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது?


போரின் எதிர்காலத்தை முன்னெடுப்பவர்களாக இந்த சிறுவர்களே எல்லோராலும் முன்னிறுத்தப்படுகிறார்கள். இதன் காரணமாக, ஆக்கப்பூர்வமான சக்திக்காக உள்வாங்கப்பட வேண்டிய சிறுவர்கள், போரின் அழிப்பு செயல்பாட்டு சக்தியாக உள்வாங்கப்பட்டு முன்வைக்கப்படுவதென்பதுதான் யதார்த்தமாக இருக்கிறது. வளர்ச்சி இல்லை என்பதற்கும் மேலாக அழிவு நடந்து கொண்டிருக்கின்றது என்பதை காண நேரிடுகிறது. இதனால் சிறுவர்களது, இளைஞர்களது உழைப்புச் சக்திகள் வீணடிக்கப்படுகிறது. இது இரட்டிப்பு பாதகமான நிலையாக காணப்படுகின்றது. சிறுவர்கள் காண்கின்ற இயல்பு வாழ்க்கை வன்முறை சார்ந்ததாக உள்ளது. எனவே அவர்களின் எதிர்கால வாழ்க்கை என்பதும் வன்முறை சார்ந்ததாகவே இருக்கும் என்பதற்கான சாத்தியப்பாடுகள்தான் காண்ப்படுகின்றன. இது மிகவும் ஆபத்தான நிலை.

ஏவுகனைத் தாக்குதல்கள், ராணுவ சுற்றிவளைப்புகள் என்ற சூழலில் வாழ்கிற சிறுவர்களுக்கு தங்களை ஒரு போராளிகளாக நினைத்துக்கொள்வதைத் தவிர வேறு எந்தத் தெரிவும் அவர்களுக்கு இல்லை என்பதை நாங்கள் மறுக்கமுடியாது. மேலும் இப்போதுள்ள சூழலில் நிலைமை என்னவெனில் வெறுங்கையுடன் சாதாரணமாக அவலமாகச் சாவதா அல்லது போராளியாக போரிட்டுச் சாவதா என்கிற இருவகையான சூழலுக்குள் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சிறுவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இது ஒருபக்கம் என்றால்,தென்னிலங்கையின் அரசியல் நிறுவனங்கள், அதிகார மையங்கள் மத்தியில், சுற்றுலா மையங்களில் நடைபெறும் சிறுவர்களது பாலியல் தொழில் என்பது இணையதளங்களில் பிரசித்தமாயிருக்கின்ற நிலையில் அதிக கவனத்தில் கொள்ளப்படாமல் உள்ளது.

சிறுவர்கள் வடகிழக்கா அல்லது தெற்கா என்பது முக்கியமில்லை. இவர்களை வைத்து அரசியல் நடத்துகிறார்கள் என்பதுதான் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். சிறுவர்கள் படையில் சேர்வதை தவிர்த்தல் என்பதில் நாங்கள் உண்மையில் அக்கறை உடையவர்களாக இருக்கிறோமா என்பதற்கு முதல் நிபந்தனையாக எந்தவித நிபந்தனையும் இன்றி யுத்தத்தை நிறுத்தவேண்டும். இதுதான் அடிப்படையான விடயம். அதைச் செய்வதற்கு நாம் எவருமே தயாரில்லாமல், பாதகமான நிலைமைகள் எல்லாவற்றையும் ஒவ்வொருவரும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் விடயத்தில் நாம் கவனமாய் இருக்கவேண்டும்.

போர்சூழல் காரணமாக ஈழத்தில் சாதிகள் ஒழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் உண்மை இருக்கிறதா?

போர்ச்சூழல் காரணமாக சாதிய வன்கொடுமைகள் குறைந்திருக்கிறது என்றுவேண்டுமானால் கூறலாம். ஆனால் ஜாதி ஒழிந்துவிட்டதாகச் சொல்லமுடியாது. மறைந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். உதாரணமாகக் கூறினால். ராணுவம் குண்டு வீசப்போகிறதென்றால் மக்கள் முதலில் போய் தஞ்சமடையும் இடம் அருகிலிருக்கின்ற கோயில்தான். உயிர்பிழைக்க ஒடி கோயிலில் தஞ்சம் புகும்போது கூட சாதிப்படி நிலை வெளிபடும். ஓடி தஞ்சமடையும் போது பார்ப்பனர்கள் கோயிலின் கர்ப்பகிரகத்திலும், ஊரில் முற்பட்ட முன்னேறிய சாதியினர் அதற்கடுத்த பிரகாரத்திலும் இருப்பார்கள். கோயிலின் வெளியே உள்ள மரத்தடி, சகடைகள் நிறுத்துகின்ற கொட்டகைகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் தஞ்சமடைவார்கள்.

இன்னொன்றையும் சொல்கிறேன். கூத்து குறித்து ஒரு அண்ணாவியிடம் பேசிக் கொண்டிருந்தேன். பறையறிவிப்போன் குறித்து அந்த பேச்சு நீண்டது. அரசருடைய செய்திகளையும்,உத்திரவுகளையும் நாட்டு மக்களுக்கு அறிவிக்கின்ற பணியை செய்கின்றவன் பறையறிவிப்போன். அரசன் வரவை அறிவிக்கும் கௌரவமான கட்டியகாரன் போல அரச செய்தியைச் சொல்லும் பறை அறைவோனும் கௌரமாகவே பணியாற்றுவது யதார்த்தமாக இருக்கும் என்றேன். அதற்கு அந்த அண்ணாவி, பறை அறைவோனை பாரம்பரியக் கூத்தில் உள்ளது போல் குடிகாரனாக, முடவனாக, அறிவில்லாதவனாக, கூடாத வார்த்தைகள் பேசி வருபவனாக அல்லாமல் கௌரவமான பாத்திரமாகக் கொண்டு வருவது பிரச்சினயில்லை. அது நல்லதுதான். ஆனால் அரசர் பிரதானிகளுடன் பறையறைவோன் கொலுவில் வர முடியாது. அதை ஏற்கமாட்டார்கள் என்றார். இப்படி ஒரு புதிய கருத்து எனக்கு அப்போதுதான் புரிந்தது. உரையாடல் களம் இருப்பதால்தான் இப்படி புதிது புதிதாய் புரியவும், உணரவும் முடிகிறது. பிறகு பேசினோம். கட்டாயம் நாம் அடுத்ததொரு கூத்தில் மன்னன் கொலு வரவில் பறையறிவிக்கும் பறையனை கட்டாயம் இடம் பெறச் செய்யும் வகையில் புதிய கூத்து எழுதப்பட வேண்டும். எனது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் இதுவரையில் அத்தகையதான கூத்துப் பற்றிக் கேள்விப்படவில்லை.

விடுதலைப் போராட்டத்தில் கலைவடிவங்களின் பங்கு எந்த அளவில் உள்ளது?


எங்களின் விடுதலைப் போராட்டத்தில் கலை வடிவங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. எல்லா கலைகளும் ஆக்கப்பூர்வமாக பயன்படுதப்படுகின்றது. குறிப்பாக விடுதலை இயக்கம் சார்ந்த கலைப்படைப்புகள் ஒரு வகையாகவும், விடுதலை இயக்கம் சாராத சமூக, மக்கள் சார்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்ற கலைஞர்களது ஆக்கங்கள், படைப்புகள் ஒரு வகையாகவும் என இரு தளங்களில் நாங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றோம். இதில் விடுதலை இயக்கங்களின் கலை படைப்புகள் அரசியல் பிரச்சார நோக்கில் பயன்படுத்தப்படுகிறது. இது இன்று மேலோங்கியுள்ளது.

கலைகளில் எவை பேசப்பட்டுள்ளன. எவை பேசப்படவில்லை என்பது பற்றி ஒரு மதிப்பீடு செய்கின்றபோது, எங்களுடைய அரசியல் சூழ்நிலையில் கலை வெளிப்பாடு எவ்வாறு நிகழ்ந்திருகிறது என்பதை விளங்கிக்கொள்ள முடியும். பிரச்சார நோக்கில் பார்க்கும்போது எல்லா கலைச்சாதனங்களுமே மிகவும் வலுவான முறையில் முன்னெடுக்கபட்டிருக்கிறது. நாடகம் என்று பார்த்தாலும் சரி, கூத்து என்று பார்த்தாலும் சரி, அரங்கு என்பது பிரச்சார நோக்கில் வீதிநாடகங்களாக, மேடைநாடகங்களாக பரவலாக மேடையேற்றப்பட்டிருக்கிறது. புலிகள் வீதிநாடகங்களை வலுவான கலையாக முன்னெடுத்திருக்கிறார்கள். அதற்கு மேலாக மேடை நாடகம் என்பதிலும் அவர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இந்தக் கலைவடிவங்களில் எங்களுடைய பாரம்பரிய கலையம்சங்கள் பல்வேறு வழிவகைகளில் எடுத்து கையாளப்பட்டிருக்கிறது. அதில் சிற்பம், ஓவியம், கவிதை, ஆடல்கள், வாத்தியங்கள், பாடல்கள், நாடகங்கள் என எல்லா வடிவங்களும் அடங்கியுள்ளன். மக்கள் மத்தியில் தொடர்பு கொள்வதற்கு ஒரு வலுவான வழிமுறையாக இவை இனங்காணப்பட்டுள்ளன.

மூன்றாவது கண் என்கிற உள்ளூர் அறிவுத் திறன் செயற்பாட்டுக்குழுவின் மூலம் எத்தகைய பணிகளை செய்து வருகிறீர்கள்?


எமது சமூகத்தில் மக்கள் தமக்கு வசதியான, வாய்ப்புள்ள இடங்களான கோயில், வீதி, தெருச்சந்திப்பு, வீட்டு முற்றம், மரநிழல்களில் கூடிக்கதைகும் மரபு இருந்தது. இந்தச் சமயங்களில் பல்வேறு செய்திகளையும், சம்பவங்களையும், தலைப்புகளையும் அதன் சாதக பாதகங்களுடன் அலசி, ஆராயும் நிலை இருந்தது. ஆனால் இன்று இனப்பிரச்சனையும், ராணுவ நடவடிக்கைகளும் கூர்மையடைந்துள்ள நிலையில் பொதுமக்களால் கூடிக்கதைக்கும் நிலை இல்லாமல் போனது.

இப்போது வீடுகளில் முடங்கியுள்ள மக்களை தொலைக்காட்சிகள் மூளைச்சலவை செய்வதில் பெரும்பங்காற்றி வருகின்றன. தமிழ்நாட்டு திரைப்படங்கள், தொடர் நாடகங்கள் புற்றீசல்போல வீடுகளுக்குள் நுழைந்துவிட்டன. இது மக்களுக்கு இன்றுள்ள யதார்த்தின் குரூரத்தை விளங்கி கொள்ளாவிட்டாலும்; அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கான வழியாகவும் அமைந்து காணப்படுகிறது. இத்தகைய மாய வாழ்கையில் இருந்து எம்மை விடுவித்துக்கொண்டு, எங்களை நாங்கள் புரிந்துகொண்டு, எங்களுக்கான ஒரு சமூகத்தை உருவாக்குவதை நோக்கி செயல்படவும், சிந்திப்பதுமே மூன்றாவது கண் நோக்கம்.

இதற்காக அறிவுத்தளதில் நின்று பல்வேறு தளங்களில் விவாதிப்பது முக்கியமாகிறது. குறிப்பாகப் பிரதான ஒட்ட அச்சு மற்றும் இலத்திரணியல் தொடர்பு ஊடகங்கள் இந்த வேலையை செய்வதாக சொல்கிறதே தவிர செய்வதில்லை. தொடர்பு சாதனங்களான ஊடகங்கள் அனைத்தும், ஒன்று அதிகாரத்திற்கு சேவகம் செய்கின்றன. அல்லது வியாபாரத்தை மையமாகக் கொண்டு அதிகாரத்திற்கு கட்டுபட்டு இயங்குகின்றன.

தொடர்புசாதனங்களின் ஆக்கிரமிப்பு வலைபின்னலுக்கு மாற்றாக பொதுமக்கள் மத்தியில் விவாதங்களை தூண்டவல்ல அரங்குகளின் தேவை அவசியமாகிறது. அப்பொழுதுதான் செய்திகளுக்குப் பின்னால் உள்ள செய்திகளை விளங்கிக் கொள்ளவும், அது பற்றி விவாதிக்கவும் முடியும். எமக்குப் பொருத்தமான மக்கள் மையப்பட்ட விவாதக் களங்களை அரங்க அறிவுடனும், பாரம்பரிய உரையாடல் களங்களின் அனுபவத்துடனும், அறிவுத்தளத்தில் நிகழ்த்துவது முக்கியம் என்கிற உரத்த சிந்தனையும் செயற்பாடும் இன்றைய அவசியத் தேவையாக உள்ளன. இதற்கான அரங்குகளைத்தான் மூன்றாவது கண் முன்னெடுத்து வருகின்றது.

மேலும் இன்றைய கல்விமுறையில் மாற்றங்கள் செய்யவேண்டிய அவசியத்தேவையிலும் உள்ளோம். தொழிற்சந்தை நிலவரத்திற்கேற்ப மாணவர்களை உற்பத்தி செய்கின்றோம் என்று கல்விமான்களும், அரசியல்வாதிகளும் நிர்வாகிகளும் சொல்கிறார்கள். அதில் பெருமை கொள்கிறார்கள். ஆனால் மாணவர்கள் எப்படி உருவாக்கப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு உதாராணம் சொல்கிறேன். பல்கலைகழக உயர்கல்விக்கு தெரிவான புதுமுக மாணவர்களுக்குக் கற்பிக்கும் வாய்ப்புகள் எனக்கு கிடைத்தன. அப்போது அந்த மாணவர்களிடம்,கண்டுபிடிப்புகள்; கண்டுபிடிப்பாளர்களாக வெள்ளையர்கள் பெயர்கள் மட்டுமே பாடப்புத்தகங்களில் காணப்படுகின்றன. ஏன் நம்மவர்கள் காணப்படவில்லை என்ற கேள்வியை எழுப்பினேன். அதற்கு மாணவர்களிடமிருந்து ; அவர்கள்தான் கண்டுபிடிப்பார்கள், கண்டுபிடிக்கக் கூடியவர்கள், அவர்கள் கண்டுபிடிக்கட்டும். நாங்கள் பயன்படுத்திக் கொள்வோம்; அவர்களுக்குதான் எல்லா வசதிகளும் உள்ளன எங்களுக்கு வசதி வாய்ப்புகள் இல்லை மேலும் நாங்கள் சோம்பேறிகள் என்கிற பதில்கள் கிடைத்தன. கல்வித்துறையில் கற்பிக்கும் பணியை செய்துவருகின்ற நானே ஒரு கணம் அதிர்ந்து போனேன். அவர்கள்தான் கண்டுபிடிப்பார்கள், நாங்கள் சோம்பேறிகள், நாங்கள் பயன்படுத்துவோம் என்கிற இந்த பதில்களை கூறத்தான், மாணவர்களுக்கு இத்தனை ஆண்டுகளாக நாம் சொல்லித் தந்திருக்கின்றோமா?

காலனித்துவ கல்விமுறையால் இன்றைய யதார்த்தச் சூழலில் இருந்து அந்நியப்படுத்தப் பட்டுள்ளோம் இச்சூழலை உணரவைத்து அதிலிருந்து மீள வேண்டும் என்கிற உணர்வை உருவாக்கி கற்பனை, சிந்தனை, படைப்பாற்றல், செயற்றிறனுள்ள சமூகத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக கல்விசார்ந்தும் சில செயல்பாடுகளுக்கு மூன்றாவது கண் முன்னெடுத்து வருகின்றது.

மக்களை ஒன்று சேர்க்கவும், தங்களுக்குள் உரையாடிகொள்ளவும் தங்களது தேவைகளை தாங்களே அறிந்துகொள்ளவும், அவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வழிவகைகளை தீர்மானித்துக்கொள்ளவும், தங்களது ஆற்றல்களை அடையாளம் காணவும், வெளிபடுத்திக் கொண்டாடவும், தாழ்வுச்சிக்கல்களில் இருந்து விடுபட்டுக்கொள்ளவும், படைப்பாற்றல்கள் வெளிபடவும் கூடியக் கல்வியை, சமூகத்தை, பண்பாட்டை அறிவுத்தளத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் ‘மூன்றாவது கண்’ணின் நோக்கம்.

(தொடரும்)

நன்றி: தலித் முரசு ஜூலை 2007

Monday, July 2, 2007

காதல் படுகொலை : சாதியின் பெயரால்

தமிழ் அம்பேத்கர்

ஜாதியை மறுத்து காதலித்த குற்றத் திற்காக, வாயில் விஷம் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்ட கண்ணகி முருகேசன் இணையரை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. பொறியியல் பட்டதாரி தலித் இளைஞர் முருகேசன். வணிகவியல் படித்த கண்ணகி வன்னியர் சாதிப் பெண். இருவரும் காதலித்து, பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். ‘பறையனுக்கு வன்னியப் பெண் கேட்குதோ?’ என வன்னியர்கள் ஒன்றுகூடி முருகேசன் கண்ணகி இருவரின் வாயிலும் விஷம் ஊற்றி உயிரோடு எரித்துக் கொன்றனர். தற்பொழுது, மீண்டும் ஒரு தலித் இளைஞன் சாதி மீறி காதலித்த காரணத்திற்காக கொலை செய்யப்பட்டுள்ளார்.

திண்டிவனம் அருகே உள்ளது மானூர் கிராமம். இங்கு 400 வன்னியர் குடும்பங்களும், 350 தலித் குடியிருப்புகளும் உள்ளன. மானூருக்கு மிக அருகில் உள்ளது காலூர் கிராமம். காலூரில் நியாய விலைக் கடை கிடையாது. மானூர சென்றுதான் பொருள்களை வாங்க வேண்டும். இவ்வாறு பொருள் வாங்க வரும்போதுதான், காலூரைச் சேர்ந்த கோவிந்தராஜி (கவுண்டர்) மகள் சுதாவும், மானூர் தலித் இளைஞர் ராஜாவும் காதலித்தனர்.

சென்னையில் கூலிவேலை செய்து கொண்டிருந்த ராஜாவை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசரமாக மானூர் வரவழைத்தார் சுதா. வீட்டில் தனக்கு மாப்பிள்ளை பார்ப்பதாகவும், உடனே சென்னைக்கு அழைத்துச் சென்று தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படியும், இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாகவும் ராஜாவிடம் கூறியுள்ளார் சுதா.அதனால் 4.4.07 அன்று இரவு10 மணிக்கு சுதாவை அழைத்துக் கொண்டு ராஜா சென்னை சென்றுள்ளார்.

இதன் பிறகு என்ன நடந்தது என ராஜாவின் அக்கா சுஜாதாவிடம் கேட்டோம். ‘என் தம்பி ராஜா சென்னையில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்கிறான். கடந்த 4.4.07 அன்று காலை 9 மணிக்கு திடீர்னு ஊருக்கு வந்தான். என்னடான்னு கேட்டேன். சும்மாதான்னு சொல்லிட்டான். பிறகு கோயிலுக்குப் போறன்னு போயிட்டான். அன்னிக்கு இரவு 10 மணிக்கு நான், எங்க அம்மா எல்லாம் வீட்ல இருந்தோம். அப்ப தடதடன்னு நிறைய பேர் கதவ தட்டினாங்க. திறந்து பார்த்தோம். எங்கள் ஊர் வன்னியர்களான வாத்தியார் அறிவொளி (இவரோட மனைவி பா.ம.க. ஒன்றிய கவுன்சிலர்), அவர்கூட தனுசு மற்றும் சிலர் தடியுடன் நின்று கொண்டிருந்தனர். பறையனுக்கு வன்னியப் பெண் கேட்குதா. நீங்க வேணா எங்ககூட வந்து படுங்கடி என்று என்னை யும், என் அம்மாவையும் கேவலமாகப் பேசினார்கள்.

நைட்டுக்குள்ள உன் தம்பி எங்க பொண்ண கொண்டு வந்து விடணும். இல்லன்னா, நாங்களா கண்டு பிடிச்சோம்னா நடக்கிறதே வேற என்று மிரட்டிச் சென்றனர். அதற்கப்புறம்தான் எங்களுக்குத் தெரிந்தது என் தம்பி ராஜாவும், சுதாவும் விரும்பறது. அன்னிக்கு நைட்டே எங்க மாமாவான வேலாயுதம்கிறவற மிரட்டி சென்னைக்கு அழைச்சிட்டுப் போயிருக்காங்க’ என்று கூறினார்.

சென்னையில் என்ன நடந்தது என்பதை அறிய வேலாயுதத்தை சந்தித்து கேட்டோம். அவர் நம்மிடம், ‘கடந்த 4 ஆம் தேதி அறிவொளி, தனுசு, கோவிந்தசாமி, விஜயகுமார் என இன்னும் சில வன்னியர்கள் எங்கள் வீட்டிற்கு வந்து, என்னை சென்னைக்கு அழைத்தார்கள். என்னை சுமோவில் ஏற்றிக் கொண்டார்கள். இன்னொரு அம்பாசிடர் காரும் கூடவே வந்தது. சென்னையில் உள்ள சொந்தக்காரர்களின் வீடுகளை காட்டச் சொன்னார்கள். ஒவ்வொரு வீடாக 5 ஆம் தேதி காலை 5 மணியிலிருந்து காட்டிக்கொண்டே சென்றேன்.

காலை சுமார் 10 மணியளவில் திருவேற்காட்டில் உள்ள என்னுடைய மச்சான் ஜெயவேல் வீட்டிற்குச் சென்றோம். அங்குதான் சுதாவும், ராஜாவும் இருந்தார்கள். பின்பு அறிவொளி மற்றும் அவருடன் இருந்தவர்கள் யார் யாருக்கோ செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள். கொஞ்ச நேரத்தில் 6 அல்லது 7 டூவீலரில் சுதாவின் உறவினர்கள் என சிலர் வந்தனர். அதன் பின்பு என்னையும், சுதாவையும் சுமோவில் ஏற்றிக் கொண்டு மானூர் செல்ல கிளம்பினார்கள்.

அப்போது, ராஜா எங்கள் வண்டியில் சுதா இருப்பதால், துரத்திக் கொண்டே ஓடிவந்தான். உடனே டூவிலரில் அங்கு வந்திருந்தவர்கள் ராஜாவை ஓடிவரவிடாமல் வளைத்துப் பிடித்துக் கொண்டனர். பிறகு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. திண்டிவனத்தில் அறிவொளி வீட்டில் சுதாவை இறக்கி விட்டு, என்னை சுமோவில் மானூரில் கொண்டு வந்து விட்டனர். அதன் பிறகு நான் ராஜா வீட்டுக்குச் சென்று நடந்ததை சொல்லி ராஜாவை தேடத் தொடங்கினோம். மாலை 4 மணியளவில், விவசாயப் பண்ணை அருகே உள்ள அய்யனார் கோவிலின் பக்கத்திலுள்ள ஒரு மரத்தில் ராஜா தூக்கில் தொங்குவதாக வந்து கூறினார்கள்’ என நம்மிடம் கூறி முடித்தார்.

இதன் பிறகு என்ன நடந்தது என வழக்கறிஞரும், திண்டிவனம் நகரமன்ற உறுப்பினருமான மு. பூபால் நம்மிடம், ‘ராஜாவை கொன்னுட்டாங்கன்னு தகவல் கிடைச்சி போய் பார்த்தோம். கழுத்தில் காயம். அதுமட்டும் இல்லாமல் வயிற்றின் கீழ்ப் பகுதியிலும், உயிர்நிலையிலும் ஊசியால் குத்தப்பட்டது போன்ற காயங்கள் நிறைய இருந்தன. ராஜாவின் உறவினர்கள் மற்றும் தோழர்களுடன் இணைந்து ராஜாவின் பிணத்தை சாலையில் வைத்து, குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல் நடந்தது. பிறகு புகார் கொடுத்து, எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து எப்.அய்.ஆர். நகல் தந்தார்கள்.

அதன் பிறகு பிரேதப் பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு போலிசார் எடுத்துச் சென்றனர். இரவென்பதால், மறுநாள் 6 ஆம் தேதி காலை போஸ்ட் மார்ட்டம் செய்யத் தொடங்கினார்கள். குற்றவாளிகளை கைது செய்யாமல் போஸ்ட்மார்ட்டம் செய்யக் கூடாது என 300க்கும் மேற்பட்ட மக்கள் கூடி மறியல் செய்தார்கள். உடனடியாக மாவட்ட எஸ்.பி. பெரியய்யா வந்தார். ராஜாவின் குடும்பத்தினரை விசாரித்து, குற்றவாளிகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். எத்தனை நாளானாலும் குறைந்தபட்சம் அறிவொளியை மட்டுமாவது கைது செய்யுங்கள் என்று கேட்டோம்.

குற்றவாளியை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் என்று கூறி, மக்கள் அனைவரும் மருத்துவமனையில் அமர்ந்து உள்ளளிருப்புப் போராட்டம் நடத்தினார்கள். விடிய விடிய மக்கள் மருத்துவமனையிலேயே இருந்தார்கள். விடிந்தும்கூட யாரும் வீடு செல்லவில்லை. போலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், அறிவொளி பா.ம.க.வில் முக்கியப் பிரமுகர் என்பதால், திண்டிவனத்தில் பா.ம.க.வில் உள்ள ஒரு வி.அய்.பி.யின் வீட்டிலும், தைலாபுரம் தோட்டத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தார். போலிசாருக்கு இது தெரிந்திருந்தும் கைது செய்யவில்லை.

இந்நிலையில் செண்டூர் வெடிவிபத்து நடந்தது. அதில் பலியானவர்களின் உடல்கள் திண்டிவனம் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன. மேலும், இந்த வெடிவிபத்தில் தமிழ் நாடே பதட்டமாகி, சோகமயமானது. அதனால் மனிதாபிமான அடிப்படையில், நாங்கள் ராஜாவின் உடலை வாங்கிக் கொண்டோம். முதலில் கொலை வழக்காகப் பதிவு செய்திருந்தார்கள். அதனால் அதன் பிறகு திண்டிவனம் டி.எஸ்.பி. குமார், தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்கை மாற்றினார்.

எனவே, தற்போது குற்றவாளிகள் பெயில் வாங்கிக் கொண்டார்கள். குற்றவாளிகளை பெயிலில் விடுவதற்காகவே டி.எஸ்.பி. வழக்குப் பிரிவை மாற்றியுள்ளார். தன்னுடைய பதவியை தவறாகப் பயன்படுத்திய அவர் மீது எஸ்.சி., எஸ்.டி. சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குப் போட ஏற்பாடு செய்து வருகிறோம்’ என்றும் கூறினார்.

வன்னியர் சாதிப் பெண்ணை காதலித்ததற்காக ராஜாவை படுகொலை செய்த குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். பாதிக்கப்பட்ட ராஜாவின் குடும்பமோ பயத்தில் பரிதவித்துக் கொண்டிருக்கிறது. ராஜாவின் குடும்பத்திற்கு ஆதரவாக இருந்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில மய்யக் குழு உறுப்பினர் ரமேஷ்நாதனை சந்தித்தோம். ‘நாங்கள் விசாரித்த வகையில் இது திட்டமிட்ட படுகொலைதான்.குறைந்தபட்சம் அறிவொளியை மட்டுமாவது கைது செய்யுங்கள் என்று கூறினோம்.

அரை மணி நேரத்தில் கைது செய்வதாகக் கூறி எங்களை அனுப்பி வைத்தார் டி.எஸ்.பி. ஆனால், வழக்கின் பிரிவை மாற்றி குற்றவாளிகள் வெளியிலேயே இருக்கும் அதிசயம்தான் நடந்தது. இந்நிலையில்தான் திண்டிவனம் டி.எஸ்.பி. குமாரின் பொறுப்பற்றத்தனத்தையும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் போக்கையும் கண்டித்து, எங்கள் பொதுச் செயலாளர் திருமாவளவன் தலைமையில் 25 ஆம் தேதி திண்டிவனத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

உடனடியாக தனுசு என்பவரை போலிசார் ரிமாண்ட் செய்தனர். அறிவொளியை, ஆசிரியர் பணியில் இருந்து தற்காலிக இடைநீக்கம் செய்தார் மாவட்ட ஆட்சியர். டி.எஸ்.பி. குமார் மீது எஸ்.சி., எஸ்.டி சட்டத்தில் நடவடிக்கை கோரியும், ராஜா கொலை குறித்து சி.பி.சி.அய்.டி. விசாரணை கேட்டும் எங்கள் வழக்கறிஞர் பூபால் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர ஏற்பாடு செய்து வருகிறோம்’ என்றார் ரமேஷ்நாதன்.

(நன்றி ; தலித் முரசு, சூன் 2007)