Wednesday, May 16, 2007

திண்டிவனத்தில் "மீண்டும் ஒரு கும்பகோணம்"



திண்டிவனம் நகரில் உள்ள வேதவள்ளியம்மாள் அறக்கட்டளைக்குச் சொந்தமான இடத்தில் முஸ்லீம் நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அறக்கட்டளையின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்துடன் திண்டிவனத்தைச் சேர்ந்த கே.சி.ராஜாபாதர் என்பவர், மேற்படி முஸ்லீம் நடுநிலைப் பள்ளி நிர்வாகத்தைச் சட்டவிரோதமாக கல்வி அதிகாரிகள் துணையோடு, 1998-இல் கைபற்றினார். அதே கட்டிடத்தில் அரசின் முன் அனுமதியின்றி 1999-லிருந்து உயர்நிலைப் பள்ளியையும் நடத்தி வருகிறார்.

பள்ளி நடக்கின்ற இந்தக் கட்டிடம் 1878-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். 129 ஆண்டு பழமையான, சிதிலமடைந்த இக்கட்டிடம் எப்போதும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது. இதனால் இப்பள்ளியில் பயில்கின்ற மாணவர்களின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்பதை அறக்கட்டளை சார்பில் 1990 முதல் தமிழக முதல்வர் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகள் அனைவருக்கும் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும், இக்கட்டிடம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது என 27.06.2003 நாளிட்டு விழுப்புரம் மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

கும்பகோணம் பள்ளித் தீ விபத்து நடந்ததையடுத்து, இப்பள்ளிக்கட்டிடத்தை ஆய்வு செய்த திண்டிவனம் அப்போதைய வட்டாட்சியர் ராசேந்திரன், பள்ளியை தொடர்ந்து இக்கட்டிடத்தில் நடத்தக்கூடாது என 21.07.04 அன்று தடை விதித்தார். மேலும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், இக்கட்டிடத்தில் இருந்து பள்ளியை வேறு பாதுகாப்பான கட்டிடதிற்கு மாற்ற வேண்டும் எனவும், அவ்வாறு மாற்றவில்லையெனில் பள்ளிக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரம் திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, பள்ளி நிர்வாகியான் ராஜாபாதர் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும் என 27.07.04 அன்று உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து, பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றிய ராஜாபாதர் அதிகாரிகளின் உத்தரவுகளுக்குத் தடைகேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதிகாரிகளின் உத்தரவுகளைப் பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்றம் பள்ளியின் அங்கீகாரத்தை திரும்பப் பெறுவதற்கு மட்டும் தடைவிதித்தது. பள்ளியை அதேகட்டிடத்தில் நடத்தக்கூடாது என்ற அதிகாரிகளின் உத்தரவுகளுக்குத் தடைவிதிக்க மறுத்தது.

ஆனாலும் ராஜாபாதர் தனக்குள்ள அரசியல் மற்றும் அதிகாரிகளின் செல்வாக்கினைப் பயன்படுத்தி தொடர்ந்து அதே கட்டிடத்தில் பள்ளியை நடத்தி வருகிறார். இது தொடர்பாக அறக்கட்டளை சார்பிலும், திண்டிவனத்தில் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நகரக் கல்வி மக்கள் மேம்பாட்டுக் குழுவின் சார்பிலும் தமிழக முதல்வர் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தொடர்ந்து புகார் அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த சனவரி 22-ஆம் தேதி புதுகோட்டையில் வெங்கடேஸ்வரா நர்சரி பள்ளியின் கூரை இடிந்து விழுந்ததில் 20 குழந்தைகளும், வகுப்பு ஆசிரியர்களும் காயமடைந்தனர்.

தற்போது சிதிலமடைந்து, இடிந்து விழும் நிலையிலுள்ள முஸ்லீம் நடுநிலைப் பள்ளியில் 200 மாணவர்கள் பயில்கிறார்கள். இவர்களின் உயிரைக் காப்பாற்றக் கோரி அறக்கட்டளை தலைவர் முதல்வரிடம் முறையிட்டார். இதனையடுத்து முதலமைச்சரின் தனி அலுவலர், ‘‘ சிதிலமடைந்த கட்டிடத்தை, நகராட்சி நிர்வாக விதிகளின்படி இடித்துவிட்டு பிள்ளைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மேற்கண்ட முஸ்லீம் நடுநிலைப் பள்ளியை வேறு இடத்திற்கு மாற்றிட விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு ’’ தொடக்கக் கல்வி இயக்குனர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், திண்டிவனம் நகராட்சி ஆணையர் மற்றும் தொடர்புடைய கல்வி அதிகாரிகளுக்கு உத்திரவிட்டுள்ளார். பள்ளியில் 1000 மாணவர்கள் படிப்பது போன்ற பொய்யான தகவல்களை நீதிமன்றத்திற்கு தந்து ராஜாபாதர் இந்த உத்திரவிற்கு தடை வாங்கியுள்ளார்.

அதிகாரிகள் அலட்சியத்தால் கும்பகோணத்தில் நேர்ந்த கொடுமைகள் திண்டிவனத்தில் தொடராமல் இருக்க வேண்டும்.

Friday, May 11, 2007

"கல்மரம்" - பீம.தனஞ்செயன்


இரண்டுகோடி ஆண்டுகளுக்கு முன்
ஒரு காட்டில் நான்.

பசும் இலைகளை காற்றில் அசைத்துகொண்டு
ஒரு மரமாய் வாழ்ந்து வந்தேன் மகிழ்வுடன்.

மனிதன் இல்லா பூமி
அப்போது - யானை, பாம்பு, மனிதக்குரங்குகள்
சுவாசிக்க ஆக்ஸிஜனை வழங்கி வந்தேன்.

சோகமே அறியா என்வாழ்வில் ஒருநாள்
என்தாய் பூமித்தாய் குலுங்கி அசைந்தாள்.

பூகம்பம், புயல், பிரளயம், வெள்ளம
என்வேர் அறுபடுகிறது - தலைசுற்றுகிறது! ஐயோ!

உயிரோடு இலை, கிளை என பச்சை மரமாய்
பூமிக்கு அடியில் வெகு ஆழத்தில் - வெகு ஆழத்தில்
புதையுண்டேன் நான் - அன்று
பூமியில் வண்டல் சிலிகாவால் மூடப்பட்டேன்.

ஒரு மரக்கட்டையும், வாழைப்பழத்தோலும்
இறந்த உங்கள் உடலும்
என்தாய் மடியில் வீழ்ந்தால்
பூஞ்சைகளுக்கும் பாக்டீரியாக்களுக்கும் கொண்டாட்டம்தான்-
மட்கி மண்ணோடு மண்ணாய்
புதைந்த இடம்கூட தெரிவதில்லை.

இந்த விதி இயற்கையின் விதியாம்.

இதற்கு விதிவிலக்காய் அன்று புதைந்த (நான்)
என் செல்கள், செல்லில் உள்ள பொருட்கள்
பூமிக்கடியில் உள்ள சிலிகா பொருட்களால்
மூலக்கூறு அளவில் ஈடு செய்யப்பட்டன.

பல நூறு ஆயிரம் ஆண்டு காலமாய்
உயிருடன் இருந்த என் செல்களில் சிலிகா
என்னில் சிலிகா - சிலிகாவில் நான்
நான் கல்லானேன் - சிலிகா மரமானது

அட ஆச்சரியம்! என் உடல் அப்படியே கல்லாய் 'உருமாறாமல்'
தற்போது என்பெயர் கல்மரம் - தொல்லுயிர்மரம்.

பூமிகடியில் புதைந்திருந்த நான்
எப்படி வந்தேன் இங்கு?

என்தாய் பூமி வரலாற்றில் ஒருநாள்
மீண்டும் பூகம்பம் புயல் பிரளயம் வெள்ளம்
கீழது மேலாக மேலது கீழாக
சங்கராபரணி ஆற்றங்கரை ஓரம்
பெரிய ஆலமரம் அருகே
செம்மண் குன்றுகளுக்கிடையே
வெள்ளத்தில் ஒதுங்கினேன் திருவக்கரையில்.

ஆங்கிலேயர் எம்.சோனராட்
என்னைப்பார்த்த முதல் அறிஞர் - என்னை
மீஸெம்ரியோசைலான் திருவக்கரையானம் என
பெயரிட்டு அழைத்து மகிழ்ந்தார்.

எனது இருப்பை உலகுக்கு அறிவித்தார்.
நன்றி அவருக்கு.

நீங்கள் சாப்பிடும் புளி இனத்தின்
தாத்தா - ஆதி இனம் நான்.

என்னில் இருந்துதான் தோன்றியது என்பர்
இப்பகுதி புளியமரக் காடுகள் பகுதிதான்
திம்-திரி-வனம்.

என்ன வியப்புடன் பார்க்கிறீர்கள்?
மருவிவந்த பெயர்தான் திண்டிவனம்.
வரலாற்றில் என்றும்வாழும் திண்டிவனம்.

உண்மை இப்படி இருக்க

மக்களில் சிலர் என்னையும், என் கிளைகளையும்
ஒரு அரக்கனின் எலும்பு என
என் கதை அறியாமல் கூறுவர்.

அறிவியல் அறியா மக்கள்.

இயற்கை எனு புத்தகத்தின் ஒருபக்கம் நான்.

கல்மரம், தொல்லுயிர்மரம் என்வயதையும்
கணக்கிட்டுச் சொன்னார்கள் - துல்லியமாய்.

கதிரியக்கக் கார்பன் கணக்கீடு
இரண்டு கோடி ஆண்டுகள் என்வயதாம் - சிலர்
மூத்தோர்களை முதியோர் இல்லம் அனுப்பும் இக்காலத்தில்
என்னால் என்ன பயன்? உங்கள் கேள்வி

என்காதில் விழுகிறது.

ஆதிகாலத்து சுற்றுச்சூழல்.
ஆதிக்காலத்து நிலவைமைப்பு.
ஆதிகாலத்து உயிரின வகைகள்
காட்டும் காலக் கண்ணாடி நான்.

450 கோடி வயதுடைய நமது பூமியில்
என் வயது 2 கோடி ஆண்டுகள்.

தொல்லுயிர் படிவம் என்போன்று
ஆப்ரிக்கா ஆஸ்திரேலியா கனடா நாடுகளில்
யானை குதிரை பறவை டையனோசாரஸ்
தொல்லுயிர் படிவங்கள்
சான்றுகளோடு விளக்கிய டார்வின் கொள்கை
என்போன்றோர்களை அறிஞர்கள் ஆய்வுசெய்தால்
முற்கால புவியின் வரலாறு கூறுவேன்.

நிலக்கரி பெட்ரோல் இருக்கும் இடம் கூறுவேன்.
எம் இன மூதாதையர்
நெய்வேலி நிலக்கரியாய்
மாறிவரும் சுற்றுச்சூழல் விளக்குவேன்.

என்னோடு டையனோசாரஸ் - சில
யானை இனம் மறைந்த காரணம் கூறுவேன்.

நீஙகள் மனித இனம்
டையனோசரஸ் போன்று மறைந்துவிடாமல
இதமான சுற்றுச்சூழலில் பூமியில்
நிலைத்து வாழ - என்கதை உங்களுக்கு பயன்படும்.

சில மனிதர்கள் வாழ்ந்ததற்கு சான்று
வீடுகள், மாடிவீடுகள்,
கோயில், கோபுரஙகள்.

சிலர் காதலுக்கு சின்னமாய் தாஜ்மகால்.
வயது சில நூறு ஆண்டுகள்
உங்களுக்கு இவை உலக அதிசயம்!

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்
ஒரு இனத்திற்கு அடையாளச் சின்னமாய் சாட்சியாய்
என்னையே கல்லாக்கிக் கொண்டேன்.

திருவக்கரை கல்மரம் - நான்
எப்போது வருகிறீர்கள் என்னை பார்ப்பதற்கு.

கொள்ளை போகிறேன் நான்
துணைநகரம், சிறப்பு பொருளாதார மண்டலம்,
விளைநிலங்கள், நகரமயமாதல்
என்றபெயரில் நிலம் கொள்ளைபோனால்
பார்க்க முடியாது என்னை!

கட்டாயம் முடியாது
உடனே வாருங்கள் -
என்னை ஆய்வு செய்யுங்கள்!

பூமியில் நீங்கள் நல்ல சூழலில்
நிலைத்து வாழ வேண்டும்.

வாழ்த்துக்கள்! நன்றி வணக்கம்.

(பேராசிரியர் பீம,தனஞ்செயன். விழுப்புரத்தில் வசிக்கிறார். தாவரவியல் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சமூக அக்கறையும், சுற்றுச்சூழலில் ஈடுபாடும் கொண்டவர். ஏரி, குளங்களை அழித்து அரசாங்கம் புதிய கட்டிடங்கள் கட்டுவதை எதிர்த்து வருபவர்.)